Posted on Leave a comment

வலம் இதழ் – அக்டோபர் 2016 – அருகி வரும் யானைகள்

அருகி வரும் யானைகள் 
– பி.ஆர்.ஹரன்

காட்டு யானைகளின் அவலம்

ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று இருவகைகளாக யானைகள் அறியப்படுகின்றன. 2003-ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆசிய யானைகளின் எண்ணிக்கை 40,000 முதல் 50,000 வரை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 30,000 யானைகள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. ஆசிய யானைகளை, இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature and Natural Resources – IUCN) என்கிற அமைப்பு, அருகிவரும் உயிரினமாக (Endangered Species) அறிவித்துள்ளது. 1972ம் ஆண்டு இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்ட வரைவின்படி யானை அருகிவரும் உயிரினமாகப் பட்டியல்-1-ல் (Schedule-1) இடம்பெற்று, முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய மிருகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருகிவரும் உயிரினமான யானைகளைப் பாதுக்காக்கும் பொருட்டு, இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 1992-ஆம் ஆண்டு ‘ப்ராஜெக்ட் எலிஃபேண்ட்’ (யானைத் திட்டம் – Project Elephant) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தது.(1) யானைகள் இருக்கும் 16 மாநிலங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு, அம்மாநில அரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான நிதி வழங்கி யானைகளின் பாதுகாப்பிற்காகப் பல நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகின்றது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு எண்ணிக்கையை அதிகரிக்க இயலவில்லை. 2007-ல் 27,682-ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2012-ல் 30,711-ஆக உயர்ந்தாலும், அது 1990களின் எண்ணிக்கையைத்தான் ஒத்துப்போகிறது. இத்தனைக்கும், மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ப்ராஜெக்ட் எலிஃபேண்ட் திட்டத்தின்படி, இந்தியாவில் மொத்தம் 58,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட 32 யானைப்பாதுகாப்பிடங்களை (Elephant Reserves) பராமரித்து வருகின்றது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘யானைத் திட்டம்’ மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணங்களை இப்படிப் பட்டியலிடலாம். காடுகள் மனிதர்களாலும், அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் பரப்பளவு குறைந்து வருவது; தந்தத்திற்காகக் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுவது; யானைகள்-மனிதர் மோதல்கள்; சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (CaptiveElephants) முறையாகப் பராமரிக்கப்படாதது; ஆண்யானை-பெண்யானை விகிதாசாரம் சரியாக இல்லாதது.

யானைத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்கள், (1) யானைகள், யானைகளுக்கான இயற்கையான வாழ்விடங்கள் (Elephant Habitat), வனங்களினூடாகச் செல்லும் யானைகளின் வழித்தடங்கள் (Elephant Corridors), ஆகியவற்றின் பாதுகாப்பு.

(2) யானைகள்-மனிதர் மோதல்களுக்கான (Human-Elephant Conflicts) காரணங்களை ஆராய்ந்து அவற்றை முற்றிலுமாகத் தவிர்த்தல். (3) சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன்.

கடந்த 30 ஆண்டுகளில் 23,716 தொழில்வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் 14,000 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை நாம் இழந்துள்ளோம். இவற்றில் சுரங்கத்தொழில்களுக்காக 4,947 சதுர கிலோமீட்டர், பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1,549 சதுர கிலோமீட்டர், நீர்மின்சக்தி திட்டங்களுக்காக 1,351 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை இழந்துள்ளோம். தற்போது, 250 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இழந்துவருகிறோம். இன்று, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில், 21.34% மட்டுமே வனப்பகுதியாக இருக்கின்றது.

வளர்ச்சித்திட்டங்களுக்கு அனுமதியளிக்கும்போது, அழிக்கப்படும் காடுகளுக்கு நஷ்டஈடாகப் பயனாளிகள் மரங்கள் நடவேண்டும் என்கிற விதி உள்ளது. ஆயினும், காடுகள் அழிக்கப்படும்போது, மரங்கள் மட்டும் அழிக்கப்படுவதில்லை; ஓர் இயற்கை சுற்றுச்சூழலே (Ecosystem) அழிக்கப்படுகிறது. தாவர வளமும் உயிர் வளமும் (Flora & Fauna) அழிக்கப்படுகின்றன. ஆகவே வெறும் மரங்களை மட்டும் நட்டுத்தருவது ஏற்கெனவே நிலவிய சுற்றுச்சூழலுக்கு ஈடாகாது என்று வனமேலாண்மை நிபுணர்கள் ஒருமித்த கருத்துத் தெரிவிக்கின்றனர். இக்கருத்தை அரசும் பாராளுமன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளது.

வளர்ச்சித் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், மக்கள்தொகை பெருகுவதும் நகரமயமாக்கம் அதிகரிப்பதும் காடுகளின் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் 15,000 சதுரகிலோமீட்டர் வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களும் அடக்கம். அவ்விடங்களில் புதிதாகக் கிராமங்கள் உருவாகி, தானியங்களும் காய்கறிகளும் பயிரிடுவதும் அதிகரிக்கின்றது. வனப்பகுதிகள் சுருங்கிவரும் சூழலில் இந்தப் பயிர்நிலங்கள் யானைகள் போன்ற மிருகங்களின் தாக்குதலுக்கு உள்ளாவது இயற்கையே. இதனால், மனிதர்-வன உயிரினங்கள் இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

யானைகள் தங்களின் விளைநிலங்களை அழிக்காமல் இருப்பதற்காக, நிலச் சொந்தக்காரர்கள் நிலங்களைச் சுற்றி மின்வேலிகள் அமைக்கின்றனர்; சிலர் ஆங்காங்கே தீ மூட்டுவதும் உண்டு. அருகில் வரும் யானைகளை விரட்ட முரசுகளை ஒலிப்பதும், பட்டாசுகள், வெடிகள் வெடிப்பதும் உண்டு. ஆனால் யானைகள் கூட்டமாக வரும்போது சில நிமிடங்களில் கிராமத்தையே அழித்துத் துவம்சம் செய்துவிடும் இயல்பு கொண்டவை. மனிதர்-யானைகள் மோதல்களால் இருபக்கமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதில் யானைகளைக் குறை சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

உலகச் சந்தையில் யானைத் தந்தத்திற்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்குக்கூட தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மதிப்பு உண்டு. ஆகவே யானைகள் இவற்றுக்காகவும், பாரம்பரிய மருத்துவப் பொருள்களுக்காகவும் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுகின்றன.

இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சங்கம் (Wildlife Protection Society of India – WPSI) என்கிற அமைப்பு 2008 முதல் 2011 வரையிலான நான்கு ஆண்டுகளில் 121 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதே காலகட்டத்தில் 781 கிலோ தந்தம், 69 தந்தங்கள், 31 தந்தத் துண்டுகள், 99 செதுக்கப்பட்ட தந்தங்கள், 75 தந்த வளையல்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது. 1986-ஆம் வருடமே தந்தங்கள் மற்றும் தந்தங்களிலான பொருள்களை வியாபாரம் செய்வதை இந்திய அரசு தடைசெய்துள்ளது.

கோடைக் காலங்களில் நீர்நிலைகள் வற்றி, தாவரங்களும், காய்கறிகளும் கிடைப்பது அரிதாகிவிடுவதால், யானைகள் கூட்டம் கூட்டமாக நீரையும் உணவையும் தேடி அலையும். இந்தக் கோடைக் காலத்தைத்தான் வேட்டையாடுபவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள் மட்டுமல்லாமல், தேக்கு மற்றும் சந்தனக் கொள்ளையர்களும் யானைகளைத் தந்தங்களுக்காகக் கொல்வதுண்டு. வீரப்பன் போன்றவர்களே இதற்கு உதாரணம். உண்மையில் தந்தக் கடத்தல் தொழிலில் ஆரம்பித்துப் பின்னர்தான் சந்தனமரக் கடத்தலுக்கு மாறினான் வீரப்பன் என்றும், தந்தக் கடத்தல் தொழிலில் இருக்கும்போது கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்றுள்ளான் என்றும் இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சங்கத்தின் ‘கடுந்துன்பத்தில் ஒரு கடவுள்’ (A God in Distress) என்கிற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வீரப்பன் போன்றவர்கள் மட்டுமல்லாமல், உல்ஃபா (ULFA), போடோ (BODO), நாகா (NAGA) தீவிரவாதிகளும், மக்கள் போர்க் குழு (PWG) மாவோயிஸ்டுகளும் தங்களுடைய இயக்கங்களின் பணத்தேவைக்காக அவ்வப்போது யானைகளைக் கொல்வதுண்டு என்றும் அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.(2)

இந்திய விலங்குநல ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Veterinary Research Institute) ஓய்வுபெற்ற விஞ்ஞானியான டாக்டர் B.M.அரோரா மேற்கொண்ட ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் 6,000க்கும் அதிகமான யானைகள் இறந்துள்ளதாகத் தெரிகிறது. இதில் 1990 முதல் 2012 வரை தென்னிந்தியாவில்தான் அதிகமாக, அதாவது 3,239 யானைகள் இறந்துள்ளன. வடகிழக்கு இந்தியாவில் 1,403 யானைகளும், கிழக்கு இந்தியாவில் 1,253 யானைகளும், வடக்கு மண்டலத்தில் 378 யானைகளும் இறந்துள்ளன. ,499 யானைகள் நோய்களால் உடல்நலன் குன்றி இறந்துள்ளன; 694 யானைகள் மின்சார வேலிகளைத் தீண்டியதால் இறந்துள்ளன; 562 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன; 1,276 யானைகள் இயற்கைக் காரணங்களால் இறந்துள்ளன; 875 யானைகளின் சாவுக்குக் காரணம் தெரியவில்லை.(3) வனப் பகுதியை ஆக்கிரமித்து உருவாகியுள்ள கிராமங்களில் பலர் சட்டத்திற்குப் புறம்பாக, அனுமதியின்றி மின்சார வேலிகள் அமைக்கின்றனர். இவ்விஷயத்தில் வனத்துறையினர் சரியான கவனம் செலுத்துவதில்லை. அரசியல் அழுத்தங்களால், அத்துமீறுபவர்களும் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்.

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ரயில் வண்டிகளில் அடிபட்டு யானைகள் இறந்துபோவது. இந்திய வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக வெற்றியடைய தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதைகள் ஆகியவற்றை அமைக்கவேண்டியது கட்டாயமாகிறது. சில இருப்புப்பாதைகள் காடுகள் வழியாகவும் அமைக்கப்படுகின்றன. அப்பாதைகள் யானைகளின் வழித்தடங்களின் ஊடாகச் செல்வதால், அந்தப் பாதைகளைத் தாண்டிப்போகும்போது யானைகள் ரயில்களில் அடிபட்டுப் பரிதாபமாக மரணமடைகின்றன. 1987 முதல் 2010 வரை இந்தியாவில் மொத்தம் 150 யானைகள் ரயில்களில் அடிபட்டு இறந்துபோயுள்ளன. இதில் 2000 முதல் 2010 வரை 100 யானைகள் இறந்துபோயுள்ளன.

பல இடங்களில் இருப்புப்பாதைகள் மேடான பகுதிகளில் போடப்பட்டிருப்பதாலும், பாதையிலிருந்து கீழே நிலப்பகுதிக்குச் சரிவாக வரவேண்டியிருப்பதாலும், பருத்த உடலும் மெதுவான நகர்வும் கொண்ட யானைகள் ரயில்கள் வருவதற்குள் பாதையைக் கடக்க முடியாமல் அடிபட்டு இறந்துபோகின்றன. வழித்தடங்களை யானைகள் கடந்துசெல்லும்போது, ரயில் ஓட்டுநர்கள் ரயில்களை மெதுவாகக் குறிப்பிட்ட அளவு வேகத்தில்தான் செலுத்த வேண்டும் என்னும் விதி உள்ளது. ஆனால் பல ஓட்டுநர்கள் அதைப் பின்பற்றுவது கிடையாது. ஓட்டுநர்களின் பார்வைக்கு, வழித்தடங்களைக் கடக்கும் யானைகள் தெளிவாகத் தெரிகின்ற அளவுக்கு, வழித்தடங்களில் இருக்கும் மரங்கள், பாறைகள் போன்றவற்றை அகற்ற வேண்டிய பொறுப்பும் வனத்துறையினருக்கு உண்டு.

சமீபத்தில் மேற்கு வங்க மாநில டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மஹானந்தா வன உயிரினக் காப்பகத்தின் வழியாக ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதையை நீட்டிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.(4) இந்தப் பாதையில் ஏற்கனவே 55 யானைகள் அடிபட்டு இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், உத்தர்கண்ட் மாநிலத்தில் ஹரித்வார், தேஹ்ராதூன், பௌரி கார்வால் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் ராஜாஜி தேசியப் பூங்காவில், 18 கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கும் ரயில்பாதையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை. அதற்குக் காரணங்கள், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதும், ரயில் ஓட்டுநர்களுக்கு ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைத்திருப்பதும், இருப்புப்பாதையை ஒட்டியிருக்கும் மேடான பகுதிகள் மற்றும் சரிவுகள் சமநிலைப்படுத்தப்பட்டதும், பார்வை மறைப்பு வளைவுகளில் (Blind Curves) உள்ள மறைப்புகளை அப்புறப்படுத்தியதும், ஓட்டுநர்கள் வேகக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதும் ஆகும். இதே போன்ற நடவடிக்கைகள் மேற்குவங்க மஹானந்தா வன உயிரினக் காப்பகத்திலும் எடுக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ல் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, இதுவரை மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 6.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 900 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆயினும், சுற்றுச்சூழல் கெடாமல் இருக்கவும் வன உயிரினங்களின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாமல் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கண்டிப்பாக எடுக்கும் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டமும், மற்ற வழிகாட்டுதல்களும், விதிகளும் மீறப்படுவது; வனத்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல் மற்றும் பொறுப்பின்மை, இதனால் தொடர்ந்துகொண்டிருக்கும் வன ஆக்கிரமிப்புகள்; இவற்றின் விளைவாக வேகமாகச் சுருங்கிவரும் வனப்பகுதிகள் ஆகியவையே, அருகிவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள யானைகள் இறந்துபோவதற்கும், எண்ணிக்கை குறைவதற்கும் முக்கியக் காரணங்கள். இதில் யானைகளின் நலன் மனிதனின் கைகளில்தான் இருக்கிறது. மனிதன் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் மனிதனின் ஆக்கிரமிப்புகளாலும், வளர்ச்சித்திட்டங்களாலும், உள்கட்டமைப்புத் திட்டங்களாலும் காட்டு யானைகள் அழிந்து வரும் நிலையில், மறுபக்கம் தனியார் வசமும், வழிபாட்டுத் தலங்களிலும் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் கடும் துன்பத்தையும் சித்தரவதையையும் அனுபவித்து இறந்துபோகின்றன. காட்டு யானைகளைப் பொருத்தவரையில் சித்தரவதை என்பது இல்லை. ஆனால் சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்குக் கன்று வயது முதல் இறந்துபோகும் வரை துன்பமும் சித்தரவதையும்தான் வாழ்க்கை.

(சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் அவலங்கள் அடுத்த இதழில் வெளியாகும்.)

சான்றுகள்:

(1) https://en.wikipedia.org/wiki/Project_Elephant

(2) http://www.wpsi-india.org/images/a_god_in_distress.pdf, பக்கம் 30, 31.

(3) http://timesofindia.indiatimes.com/city/bareilly/Over-6000-elephant-deaths-in-two-decades/articleshow/47193313.cms?gclid=CMvrsMKn_c4CFdOFaAod3-wJQg

(4) https://www.scoopwhoop.com/inothernews/elephants-killed-on-railway-tracks/#.khj8bzrhv

-oOo-

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா?

இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்

உலகில் எல்லாரையும்விடச் சிறுபான்மையானவன் தனிமனிதன்தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களைச் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக்கொள்ள முடியாது.
– அயன் ராண்ட்

ஆசிரியர்களைப் பணி நிமித்தம் செய்வது தொடர்பாக தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகள் ஓர் அரசாணையைப் பிறப்பித்திருந்தன.(1) அதன்படி ‘அரசு, அரசு உதவிபெறும் தனியார்ப் பள்ளிகள் மற்றும் உதவிபெறாப் பள்ளிகள் அனைத்திலும் ஆசிரியப் பணியில் அமர்த்த, ஆசிரியர்கள் TET (Teacher Eligibility Test) தேர்வில் வெற்றி பெற்று, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இதை எதிர்த்து 300 க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 24, 2016ல், ‘சிறுபான்மைப் பள்ளிகளுக்கு இந்த ஆணை செல்லாது என்றும், சிறுபான்மைப் பள்ளிகள் அரசு உதவிபெறும் மற்றும் அரசு நிதியுதவி பெறாத பள்ளிகள், தங்கள் விருப்பப்படி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்றும், இந்த அரசாணை சிறுபான்மையினரின் பண்பாடு மற்றும் கல்வி உரிமையில் தலையிடுவதாக இருக்கிறது என்பதை சட்டப் பிரிவு 30ஐ மேற்கோள் காட்டி ஒரு தீர்ப்பை(2) வழங்கியுள்ளது.

இந்தியா விடுதலையடைந்தபோது, சிறுபான்மையினரின் நலன்கள், வழிபாட்டு உரிமைகள், கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகள், மொழி உரிமைகள் எவ்விதத்திலும் பெரும்பான்மையினரிடமிருந்து பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும், வேறுபாடுகள் காட்டப்பட்டுவிடக்கூடாது என்றும், சிறுபான்மையினர் தமது உரிமையில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கிலும்தான் இந்தச் சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று இது சம்பந்தமான எந்த வழக்குகள் வந்தாலும், நீதிமன்றங்கள், அரசாணைகளின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், இவை சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்தாது என்று தொடர்ச்சியாகத் தீர்ப்புகள் வழங்கி வருவதைக் காண முடிகிறது.

நடைமுறையில் இந்துக்களின் பெரும்பான்மை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அரசு உதவிபெறும் தனியார் இந்துப் பள்ளிகள், உதவி பெறா இந்துப் பள்ளிகளுக்கு இந்த அரசாணைகள் செல்லும் என்பதும், சிறுபான்மையினருக்குப் பொருந்தாது என்பதும் எவ்வகையில் சரி என்பது விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன, சிக்கல்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பு சட்டப்பிரிவு 30ல் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

சட்டப்பிரிவு 30 சிறுபான்மையினரின் கல்வி உரிமைகள் பற்றிப் பேசுகிறது.

a) மதச் சிறுபான்மையினர் மற்றும் மொழிச் சிறுபான்மையினர். இவர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும் மற்றும் கல்வி நிலையங்களை நிர்வகித்தலில் தமது விருப்பம்போல செயல்படலாம்.

b) இந்திய அரசு, மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ கல்வி நிலையங்களை உருவாக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.

Article 30 in The Constitution Of India 1949

30. Right of minorities to establish and administer educational institutions

(1) All minorities, whether based on religion or language, shall have the right to establish and administer educational institutions of their choice

(2) The state shall not, in granting aid to educational institutions, discriminate against any educational institution on the ground that it is under the management of a minority, whether based on religion or language.

மத அடிப்படையில் நோக்கினால், இந்தியாவில் இந்துக்கள் தவிர்த்த அனைத்து மதத்தினரும் சிறுபான்மையினர். முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜெயின்கள் ஆகியோர் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய பாராளுமன்ற சட்டப் பிரிவு 2 C குறிப்பிடுகிறது. மொழியைப் பொருத்தமட்டில் ஒரு மாநில அரசு ஆட்சி மொழியாக உள்ள மொழியைத் தவிர்த்து, மற்ற மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினர். உதாரணமாக தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள். வேலைவாய்ப்புக் கருதி மகாராஷ்டிராவில் குடியேறும் குஜராத்திகள், குஜராத்தில் குடிபெயரும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர்.

மௌலானா அபுல்கலாம் ஆசாத் இந்திய முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது “இந்தியாவின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகம் முஸ்லிம்கள்” என்கிறார்.(4) அவர் முஸ்லிம்களைச் சிறுபான்மைச் சமூகத்தவராகக் கருதவில்லை. இந்தியாவில் பார்சிகள் மக்கள்தொகை வெறும் 69,000 மட்டுமே. ஜெயின்கள் 44 லட்சம் மட்டுமே. இவர்களை சிறுபான்மையினர் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். உலகின் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. 17.22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களும்(5) இந்தியாவில் சிறுபான்மையினர் என்பது எவ்வகையில் சரி?

எந்த எண்ணிக்கையில், எந்த சதவீதத்தில் மக்கள்தொகை இருந்தால் அவர்கள் சிறுபான்மையினர் கிடையாது என்று சட்டத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. முஸ்லிம்கள் மக்கள்தொகை இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 9.9% ஆக இருந்தது. 2011ன் கணக்குப்படி 14.3% ஆக உயர்ந்துள்ளது. இன்னும் முப்பது ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்கப்போகிறது.

எனக்குத் தெரிந்த ஓர் அரசு உதவிபெறும் கிறித்துவ மேலாண்மைப்பள்ளியில், TET தேர்வில் வெற்றி பெறாதவர் 10 லட்சம் கொடுத்து சேரத் தயாராக உள்ளார் என வைத்துக்கொள்வோம். அதே பள்ளியில் TET தேர்ச்சி பெற்ற ஒருவர் 1 லட்சம் மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார். இப்போது இவர்களில் யாரை ஒரு கிறித்துவப் பள்ளி பணியில் அமர்த்தும்? 10 லட்சம் கொடுப்பவரை பணியில் அமர்த்தும் செயலை கிறித்துவ, மதராஸாக்கள் செய்யலாம். ஆனால் அதை இந்துப் பள்ளிகள் செய்யக்கூடாது. இவ்வாறான தீர்ப்பைத்தான் நீதிமன்றங்கள் கொடுக்கின்றன. இங்கு எழும் கேள்வி, இந்துக்களும் எவரையும் பணியில் அமர்த்த ஆணை பிறப்பிக்கவேண்டும் என்பதல்ல. எவரும், தகுதியில்லாத ஒருவரைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதே.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்ய 25% ஏழை மாணவர்களை அனைத்துப் பள்ளிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசாணை பிறப்பித்த வழக்கிலும், இது அரசு நிதி உதவி பெறாத சிறுபான்மைப் பள்ளிகளுக்குப் பொருந்தாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் 2012 ல் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

அனைத்துக் குழந்தைகளுக்கும் தகுதியான ஆசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் TET தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசுகளும் ஆணை பிறப்பித்தன. ஏழை மாணவர்களுக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துப் பள்ளிகளும் 25% இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றது.(3) ஆனால் இவையனைத்தையும் அரசு நிதிஉதவி பெறாத இந்துப் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதான தீர்ப்பும், முஸ்லிம், கிறித்துவ மற்றும் இதர சிறுபான்மைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டியதில்லை என்பதும் எவ்வகையில் சரி?

சட்டப்பிரிவு 30ன் நோக்கம் சிறுபான்மைச் சமூகத்தினர், பெரும்பான்மைச் சமூகத்தினரைப் போல சரிசமமாக நடத்தப்படவேண்டும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதே! ஆனால் இன்று உரிமை என்ற பெயரில் சிறப்புச் சலுகைகள் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதல்லாது, இந்துப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்ற தீர்ப்பினை நீதிமன்றங்கள் வழங்கி வருகின்றன. இச்சட்டத்தில் நிறைய மாற்றங்களைக்கொண்டு வந்து, அனைவருக்கும் சமமான நிலையைக் கொண்டுவர விரிவான விவாதங்கள் நடைபெற வேண்டும்.

இந்தச் சட்டத்தை அறவே நீக்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அனைத்து மதத்தினரும், சிறுபான்மை மொழிச் சமூகத்தினரும் கல்வி நிலையங்கள் தொடங்க, ‘சட்டப்படி இந்தியர் ஒவ்வொருவரும் கல்வி நிலையங்கள் தொடங்க விரும்பினால் எந்தத் தடையுமில்லை’ என்ற ஒரு உறுதியான நிலையே போதுமானது. கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கே உண்டு. ஒருவேளை தனியார்க் கல்வி நிலையங்களுக்கு அரசால் நிதி உதவி வழங்கமுடியவில்லை என்றால், அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கச் சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்தலாம். ஆனால், அங்கு சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வேறுபாடு இருக்கக்கூடாது..

யார் இந்துக்கள் என்பதைக்கூடப் பெரும்பான்மை மக்களுக்கான எளிய சட்டவடிவத்தைப் பிறப்பித்து, அதன்கீழ் நடக்கவேண்டும் என்பதற்காகவே பல்வேறு வழிபாடு செய்யும் மக்களையும் ஒரு பிரிவின் கீழ் ஒன்றுபடுத்தியுள்ளோம். இன்றும் கூட இந்துக்களை வெவ்வேறு வழிபாட்டுப் பிரிவினர் என்று பிரித்தால் இந்தியாவில் அனைவரும் சிறுபான்மையினரே!

சட்டப்பிரிவு 30ஐ நீக்க / மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனூடே யார் சிறுபான்மையினர், அதற்கான அளவீடு என்ன என்ற விவாதங்களையும் நடத்தி, சிறுபான்மையினர் சட்டத்திலும் மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே பாகுபாடுகளைக் களையமுடியும்.

இந்தியா சிறுபான்மையினரின் நலனைப் பேணிக்காக்கும் தேசமாக இருப்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. உண்மையில் சிறுபான்மையினரின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு நாடாகவே இந்தியா இன்றும் இருக்கிறது. ஆனால் உரிமைகளும், சலுகைகளும் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே என்பதும், பெரும்பான்மையினருக்குக் கிடையாது என்பதும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

அடிக்குறிப்புகள்:

1)http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/60-marks-in-teacher-eligibility-test-mandatory-for-recruitment/article2654889.ece

2) http://www.business-standard.com/article/pti-stories/no-tet-required-for-teachers-of-minority-institutions-hc-116082401616_1.html

3)https://indiankanoon.org/doc/1983234/

4) http://censusindia.gov.in/Census_And_You/religion.aspx

5) http://www.gktoday.in/article-29-30-cultural-educational-rights-in-indian-constitution/

-oOo-

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – மாதொரு பாகன் – என்னதான் நடந்தது?

மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்

பெருமாள் முருகன் எழுதி காலச்சுவடு வெளியிட்டிருந்த ‘மாதொருபாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த விஷயம், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆய்வுசெய்து ஒரு ஆய்வுக்கட்டுரை மற்றும் நூல் எழுதுவதற்காக பெருமாள் முருகன் இந்தியக் கலாசார மையம் என்னும் பெங்களூருவில் இருக்கும் அமைப்பிடமிருந்து பணம் வாங்கியதில் தொடங்குகிறது. இந்த அமைப்பிடமிருந்து பணம் பெற்றதாக பெருமாள் முருகன் ‘மாதொரு பாகன்’ நூல் முன்னுரையிலேயே குறிப்பிடுகிறார். ‘ஆய்வின் மூலமாக நாவல் எழுதும் திட்டம் ஒன்றிற்கு ரத்தன் டாட்டா அறக்கட்டளை வழியே நல்கை வழங்கப் பெங்களூரில் உள்ள ‘கலைகளுக்கான இந்திய மையம் (மிதிகி)’ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்து நல்கை பெற்றேன்’ என்கிறார். ஆய்வுக்கு நல்கை பெற்றவர் ஆய்வுக்கட்டுரைதான் எழுதினாரா என்றால் இல்லை. மாதொருபாகன் என்ற நூலைத்தான் எழுதினார். அப்படியானால் ஆய்வு? அந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டுதான் இந்த நூல் எழுதியதாகச் சொல்கிறார். நூலின் முன்னுரையில் இப்படி ஒரு வரி உள்ளது. ‘சைவம், கோயிலின் பூர்வ வரலாறு ஆகியவற்றைவிட மக்களிடையே கோயில் பெற்றிருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்கே என்னை ஈர்த்த விஷயம்.’ அதாவது கோவிலின் ‘மிதமிஞ்சிய’ செல்வாக்கு.

நூல் வெளிவந்து சில வருடங்கள் கழித்துத்தான் சர்ச்சை ஆரம்பிக்கிறது. இந்த நூலிலே இப்படி ஒரு தரக்குறைவான விஷயம் ஆய்வு என்னும் போர்வையில் சொல்லப்பட்டிருப்பது, இந்நூல் வெளிவந்தபோது மக்களுக்குப் பரவலாகத் தெரியவில்லை. தமிழ்நூல்களைப் படிக்கும் வழக்கமே அருகிவருகிறது என்பதை அந்த நூல்களைப் பதிப்பிப்பவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அதுவும் தீவிர இலக்கியப் புனைவு என்னும் போர்வையில் வரும் புத்தகங்களை வாசிப்பவர்கள் மிகமிகக் குறைவே. அதிலும் இப்படிப்பட்ட இடதுசாரித்தனமான நூல்களை கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள்ளே படித்துக்கொண்டு தங்களுக்குள்ளே பாராட்டுவிழாவும் நடத்திக்கொள்வார்கள் என்பதால் இந்நூல் வெளிவந்தபோது இதைப் பற்றி வெளிஉலகுக்குத் தெரிவதில்லை.

இந்நூல் எழுத காசு கொடுத்தவர்களும், இந்நூலோடு தொடர்புடைய சிலரும் சேர்ந்து கொங்கு மண்டலத்தின் மக்கள் மீது வீசிய புழுதியை உலகெங்கும் கொண்டு செல்வது எனத் தீர்மானித்து இந்த நூலுக்கு சிங்கப்பூரிலே பாராட்டு விழா நடத்தினார்கள். அதுவும் ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்கு. அப்போதுதான் இந்நூல் குறித்த உண்மையான செய்திகள் மக்களுக்குத் தெரியவருகின்றன. நன்றாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கொங்கு மண்டலத்தில் எந்த இடத்திலும் இந்நூலுக்கு ஒரு விவாதமோ பாராட்டோ விழாவோ ஏற்பாடு செய்யப்படவில்லை. நேராக சிங்கப்பூர் போய்விட்டார்கள்.

ஒரு தம்பதியினருக்குக் குழந்தை இல்லை என்பதைச் சொல்வதாக அமைந்திருக்கும் கதையில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, குழந்தை வரம் என்பது கடவுளின் அருளால் கிடைப்பதில்லை, அது கோவில் திருவிழாவுக்கு வரும் ஆண்களுடன் கூடுவதால் கிடைப்பது என்றும் கோவில் திருவிழாவிலே மிகமோசமான நிகழ்வுகள் நிகழ்கின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது. இங்கே கவனிக்கப்படவேண்டியது, இதை நேரடியாகச் சொல்லாமல், இப்படி ஒரு விஷயம் காலங்காலமாக நடந்து வருவதாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், பின்னணியில் மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஆதாரமற்ற மோசமான கருத்தைப் பின்னணியாகக் கொண்டு ஆய்வு என்ற பெயரில் தங்கள் ஊரும் புனிதமான கோவிலும் கேவலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்த மக்கள் அகிம்சை முறையிலே எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். கடையடைப்பு, அமைதியாக ஊர்வலம் என எதிர்ப்புகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த எதிர்ப்பைக் கண்ட கதாசிரியர் தன் நூலான ‘மாதொருபாகன்’ நாவலில் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனை எனவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் பல அறிக்கைகளை வெளியிட்டார். மக்களோ அந்தப் பாசாங்குக்கெல்லாம் மயங்கவில்லை. இறுதியாக மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திய அமைதிக்கூட்டத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்பதாகச் சொல்லி கையெழுத்திட்டுத் தந்துவிட்டார் நாவலாசிரியர்.

அக்கூட்டத்தில் பெருமாள் முருகனால் ஒப்புக்கொள்ளப்பட்டவை:

1. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்படவில்லை.

2. எதிர்காலத்தில் இப்புத்தகம் வெளிவந்தால் திருச்செங்கோடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெறாது.

3. இது தொடர்பாக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்படி பேட்டியோ கட்டுரையோ வெளியிடமாட்டேன்.

4. ஏற்கெனவே வெளியிடப்பட்ட பிரதிகளில் விற்பனையாகாமல் உள்ள புத்தகங்களைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.

மாவட்டநிர்வாகம் கூட்டிய கூட்டத்தில் இப்படிக் கையெழுத்திட்டுத்தந்த கதாசிரியர் ‘அடுத்தநாள் பெருமாள் முருகனின் மரணம்’ எனச் சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். இதனால் தூண்டப்பட்ட மனித உரிமைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் குரல் கொடுப்பவர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் மாவட்ட நிர்வாகம் செய்த முயற்சிகளையும் நாவலாசிரியர் மேல் பதியப்பட்ட காவல்துறை வழக்குகளையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ‘பெருமாள் முருகன் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீக்கவேண்டும். கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இதில் ஒரு தரப்பாக பெருமாள் முருகன் பின்புதான் சேர்க்கப்பட்டார். அந்தக் ‘கதை’யை வெளியிட்ட பதிப்பாசிரியரும் சேர்ந்துகொண்டார். பதில் மனுக்களை இந்து இயக்கங்களும் கொங்கு மண்டல சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் பல விசித்திரங்கள் நடந்தேறின. முதலில் இந்தக் கதை ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டது எனச் சொன்ன கதாசிரியர், அது வெறும் கற்பனை எனச் சொன்னார். ஆனால் அந்தப் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர் ‘அது கற்பனை அல்ல, உண்மை’ என்று வாதாடினார். மேலும் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது உண்மையே எனச் சொல்ல காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருந்த கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் இருந்தே ஆதாரம் காட்டுகிறோம் என்ற வேடிக்கைகளும் நடந்தன. அதோடு ஏகப்பட்ட புத்தங்களைக் கொண்டுவந்து, இதிலெல்லாம் ஆதாரம் இருக்கிறது, இதைப் படித்துப் பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள் என செய்ய முடியாத வேலைகளைச் செய்யச் சொன்ன விநோதங்களும் நடந்தன.

கொங்கு மண்டல சமூக அமைப்புகள் தங்கள் வாதத்தில், இப்படி எழுதப்பட்டிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இந்து அறநிலையத்துறையின் 100 வருட ஆவணங்களில் இப்படி எந்த ஒரு குறிப்பும் இல்லை, எனவே இப்படி உண்மைக்குப் புறம்பான விஷயங்களை எழுதியவர்கள்மீதும் அதைப் பதிப்பித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள். இந்து மத நூல்களிலும் இப்படியான ஒரு கேவலமான செய்கை ஏதுமில்லை, சாஸ்திர சம்பிரதாயங்கள் இதை எப்போதும் சொன்னதில்லை என்பதும் முன்வைக்கப்பட்டன.

வழக்கின் தீர்ப்பு, கோவிலில் நடந்ததாக இருந்தாலும் தவறில்லை, ஏனென்றால் கோவிலில் ஓர் இடத்தில் நடந்ததாகச் சொல்வது கோவிலையோ அல்லது இந்து மதத்தையோ புண்படுத்தியதாகாது என்பதையும் அக்காலத்திய மக்களைச் சொன்னதை இப்போது இருக்கும் மக்கள் தங்களைச் சொல்வதாக நினைத்து வருத்தப்படக்கூடாது என்பதையும் உள்ளடக்கியதாக இருந்தது. பல வாதங்களைப் பயன்படுத்தி மனித உரிமை ஆர்வலர்கள் போட்ட மனுவை ஏற்று, மக்கள் அளித்த பதில் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரண்டு தரப்பும் சமாதானமாகப் போகவேண்டும், காலத்தினால் இந்த வடுக்கள் ஆறும், எனவே நடந்ததை மறந்து இரண்டு தரப்பும் சுமூகமாகப் போகவேண்டும் என நீதிமன்றம் ஆலோசனையும் வழங்கியது. எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் வரவேண்டும் என எழுத்தாளருக்கு வேண்டுகோளும் விடுத்தது.

தீர்ப்புக்குப் பிறகு மனித உரிமை ஆர்வலர்களும் இன்னபிற கோஷ்டிகளும் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த விடுதலையைக் கொண்டாடி ஒரே ஒரு கட்டுரையை எழுதியதோடு சரி. நாவலாசிரியரும் ‘நான் என்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறேன், சுய தணிக்கை செய்து கொள்கிறேன்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். அவரின் எல்லா நூல்களும் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டே மீண்டும் வரும் எனவும் சொல்லியிருக்கிறார். டெல்லியில் ஒரு கவிதைத்தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். என்.டி.டி.வியில் பேட்டி அளித்திருக்கிறார். இதற்கு டெல்லியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் காரணமா, அல்லது ஆட்சி மாறட்டும் எனக் காத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே முறையீடு செய்தால் அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக ‘நாங்களே தணிக்கை செய்து கொள்கிறோம் எனச் சொல்லி இருக்கிறோம்’ எனச் சொல்வதற்காகவா எனத் தெரியவில்லை.

இந்துக்களின், இந்நாட்டு மக்களின் வரலாற்றைக் காசு கொடுத்து திரித்து எழுதுவதற்கு ஒரு பெரும் படையே இருக்கிறது என மீண்டுமொரு முறை நீருபிக்கப்பட்டுள்ளது. அப்படித் திரித்த வரலாற்றை முட்டுக்கொடுக்கவும் ஒரு பெரும் கூட்டம் ஆயத்தமாக இருக்கிறது என்பதும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சரியான வரலாற்றை நாமே ஆய்வுபூர்வமாக எழுதி நமது அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வதும், இதுபோன்ற ஆய்வு என்ற பெயரில் நடக்கும் மோசடிகளுக்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுப்பதும் நாம் உடனடியாக முன்னெடுக்கவேண்டியவை. இவை அன்றி இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கவே முடியாது.

-oOo-