வரலாறு
கடல் மட்டத்திலிருந்து 2,500 அடி மலையில் ஒரு குன்று அப்படியே கோவிலாக மாற்றப்பட்டிருக்கிறது. கிழக்குப் பகுதியில் ஒரு குளம். இப்போதும் தண்ணீர் இருக்கிறது. இதைப்போல குடையப்பட்ட குகைகள் குன்றின் அந்தப்பக்கமும் இருக்கின்றனவாம். அதனால் வரலாற்றாசிரியர்கள் இங்கு ஒரு ராஜ்ஜியம் இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கின்றனர். இந்த மாதிரி ஒரு கோவிலை எழுப்ப நிறைய பொருளும், ஆட்களும், கலைஞர்களும் தேவைப்பட்டிருக்கும் என்பதாலும் இந்த ஊகம் சரியாகிறது. இது பஞ்ச பாண்டவரால் அஞ்ஞாத வாசத்தின்போது கட்டப்பட்டது என்று அங்கிருக்கும் மக்களால் நம்பப்படுகிறது.
மற்றபடி இந்தக் கோவிலைப் பற்றிய ஆவணங்களோ கல்வெட்டுக்களோ எதுவும் இல்லை. அதனால் மஸ்ரூர் வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. இதன் கலைப்பாங்கை வைத்தும் பெரிதாக ஒன்றும் தொடர்பு படுத்த முடியாத நிலையே இருக்கிறது. இங்கிருந்து 40 கிமீ தூரத்தில் இருக்கும் காங்க்ரா கோட்டையில் இதே போன்ற வேலைப்பாடுகள் இருந்தாலும் முழுவதுமாக தொடர்புப்படுத்த முடியவில்லையாம். ஆனால் கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் கோவிலுடன் பல ஒற்றுமைகள் இருப்பதாகச் சொல்கின்றனர். இருப்பினும் இதற்கும் அதற்குமான தொடர்பும் விளங்கவில்லை. கலைநயத்தை வைத்து சுமாராக எட்டாம் நூற்றாண்டு குப்தர் காலத்தினதாக இருக்கலாம் என்பது அனுமானம். கலைநயத்திலும் வித்தியாசங்கள் இருப்பதால் ஒரு காலத்தில் தொடங்கிப் பின்னர் மற்றொரு காலத்தில் தொடரப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
இமாலயத்தில் தற்போது காணப்படும் கோவில்கள் பகோடா போன்ற கூரை அமைப்பைக் கொண்டதாக இருப்பதால் இந்த மாதிரி நகரா விமானம் இங்கு எப்படி வந்தது என்பதும் புதிராக இருக்கிறது. காஷ்மீரை ஆண்ட லலிதாதித்யன் கற்கோவில்களைக் கட்டினான். மஸ்ரூர் காஷ்மீருக்கு அருகிலிருப்பதால் லலிதாதித்யன் கட்டியிருக்கலாம். ஆனால் அவன் கட்டிய மார்த்தாண்டர் கோவில் வெகுவாக சிதைந்திருப்பதால் ஒற்றுமைகளைக் காண்பது கடினமாகிறது. சில சிற்ப முகங்களில், புன்னகையில் ஒற்றுமை தெரிகிறது.
அவன் விஷ்ணு பக்தனாக இருந்ததாக வரலாறு கூறுவதால் இந்தச் சிவன் கோவில் சைவம் தழுவிய அரசனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஆசிரியர் என்.கே.சிங் கருதுகிறார். ஆனால் அத்தகைய வேறுபாடு அக்காலத்தில் இருந்ததா என்பதையும் பார்க்கவேண்டும். உதாரணமாக, பல்லவர் காலத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோவில்கள் இருக்கின்றன. மத்ய தேசத்தை ஆண்ட யஷோவரமன் அங்கிருந்து கலைஞர்களைக் கொணர்ந்து கட்டியிருப்பானோ என்று மேலும் ஊகிக்கிறார் சிங். காஷ்மீரத்திற்கோ மத்ய தேசத்திற்கோ இந்தக் கோவில் சம்பந்தமுள்ளதாக இருக்குமெனில் வரலாற்றில் மிக முக்கியமானதாகும். அதனால் இதில் நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
கட்டுமானக்கலை
பொதுவாக கற்கோவில்களை வகைப் படுத்தலாம். மாமல்லபுரம் போன்ற ஒற்றைக் கற்றளி. அதாவது ஒரே கல்லில் கட்டப்படும் மோனோலிதிக் கோவில்கள். சிறு குன்றுகளைக் குகை போலக் குடைந்து செய்யப்படும் குகைக் கோவில்கள். உதாரணம் மாமல்லபுரம் ஆதி வராக மண்டபம். கற்களை அடுக்கிக் கட்டப்படும் கட்டுமானக் கோவில்கள். இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். பெரும்பாலான கற்கோவில்கள் இவ்வகையைச் சாரும். மலையைக் குடைந்து கோவில் வளாகமாக உருவாக்குவது. எல்லோரா கைலாசநாதர் போல. கிட்டத்தட்ட இந்த மஸ்ரூர் கோவிலும், அளவில் எல்லோராவை விடச் சிறியதானாலும் இந்த வகையைச் சேரும். மாமல்லபுரம் தனிப் பாறைகளில் செதுக்கப்பட்ட ஒற்றைக்கற்றளிக் கோவில்கள் கொண்ட வளாகம். மஸ்ரூர் ஒரே குன்றில் செதுக்கப்பட்ட கோவில்கள் கொண்ட வளாகம்.
மாமல்லபுரம், எல்லோரா இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நகரி விமானத்துடன் கட்டப்பட்ட கோவில் வளாகம். வட இந்தியாவில் காணப்படும் நகரி விமானங்கள் தனிக்கற்களால் கட்டப்பட்டவை. ஒற்றைக் கல்லில் கட்டப்பட்ட நகரி விமானக் கோவில் இது ஒன்றே. இருபுறமும் படிகள் அமைத்து மேலே சென்றும் பார்க்க முடிகிறது.
படத்தில் உள்ளது போல ஒரு சீரான திட்டத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. சர்வதோபத்ரா எனப்படும் வகையில் எல்லாப்புறத்திலிருந்தும் வழி அமைக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பகிரகமானது கிழக்கு நோக்கி குளத்தைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. தற்போது வைஷ்ணவ ஸ்தலமாக மாற்றப்பட்டிருந்தாலும், கர்ப்பகிரகத்தின் மேலே காணப்படும் முகப்பிலிருக்கும் சிற்பங்களை வைத்து இது ஒரு சிவன் கோவிலாக இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.
1875ல் தான் ஒரு ஆங்கிலேயரால் முதலில் இக்கோவில் கண்டறியப்பட்டிருக்கிறது. அதன்பிறகு 1905ல் பூகம்பத்தால் பெரிதும் அழிந்திருக்கிறது இக்கோவில். நகரா விமானத்தின் (நகரா என்பது ஒருவகை விமானம்) சிகரத்திலிருக்கும் அமலகா (அமலகா என்பது நகரா விமானங்களின் மேற்பகுதியில் வட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு பாகம். சிகரம் இதன் மீது வைக்கப்பட்டிருக்கும்.) அனைத்தும் கீழே விழுந்து கிடக்கின்றன. விமானத்தின் ரதப் பகுதியின் வேலைப்பாடு நிறைந்த முன்புறமும் சிதைந்து கிடக்கிறது. சிம்லாவை ஒட்டிய இடங்களில் நிறைய ஸ்லேட் ராக் வகையைப் பார்த்தோம். இந்தக் குன்று ஒரு மலையின் உச்சியில் உள்ளது. அந்தக் கல்லுக்கும் ஸ்லேட் ராக்கைப் போல தட்டையாகப் பெயர்ந்து வரும் தன்மை இருக்கும் போலத் தெரிகிறது. உடைந்து விழுந்த பிரமாண்டமான துண்டங்கள் பல இடங்களில் சமதளமாக இருக்கிறது. சான்ட்ஸ்டோன் வகை என்று இருந்தாலும் எல்லா இடத்திலும் அதன் அடர்த்தி ஒன்று போல இருப்பதாகத் தெரியவில்லை. சில மிகவும் தேய்ந்திருக்க சில நன்றாக இருக்கின்றன.
நடுவில் அமைந்திருக்கும் சதுர வடிவ கர்ப்பகிரகம் உயரமான விமானத்தைக் கொண்டிருக்கிறது. முன்னால் வாயிலில் அழகான வேலைப்பாடுகள். மேல்முகப்பிலும் வேலைப்பாடுகள். இந்த கர்ப்பகிரகத்தின் முன்னே ஒரு மண்டபம் காணப்படுகிறது. இதில் இருபுறமும் 5மீ உயரத்திற்கு உருளையான கற்தூண்கள் காணப்படுகின்றன. இவை அந்த மோனோலித் குன்றைச் சேர்ந்தவை அல்ல. ரொம்பவே வித்தியாசமாகத் தெரிகின்றன. வேலைப்பாடும் இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன. பிற்காலத்தில் கட்டப்பட்டவையாக இருக்கலாம். தூண்களின் மேலே மேற்தளம் இருந்த அடையாளம் ஏதும் இல்லை. மேற்கூரை மரத்தால் இருந்திருக்கலாம் என்கிறார் நிசர்கான் என்ற வரலாற்றாசிரியர். மரக்கூரைக்கு ஏன் இவ்வளவு பெரிய கல்தூண் என்று கேள்வி எழுகிறது. இந்த கூரையில்லா மண்டபத்தின் நடுவே ஒரு பலி பீடம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் முன்னால் ஒரு முக மண்டபம்.
கர்ப்பகிரகத்தின் இருபுறமும் அதே போல சற்றே உயரம் குறைவான இரண்டு விமானங்கள். ஒரு புறம் குடையப்படவே இல்லை. முன்பகுதி சமதளமாக அப்படியே ஒரு ஃப்ரேம் போல இருக்கிறது. குடைந்து கர்ப்கிரகமாக மாற்றப்பட திட்டம் இருந்திருக்கலாம். இந்த வகைக்கல் உடைந்து போவதால் பாதியிலேயே விடப்பட்டிருக்கலாம்.
மறுபுறம் ஒரே இடிபாடு. விமானம் விழுந்து பெரிய கல்லாக அப்படியே கிடக்கிறது. வடக்குப் புறம் பெரிய குகை போல இருக்கிறது. அதே போல தென்புறமும் இருப்பதாக ஏஎஸ்ஐ படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்தப்புறம் செல்ல அனுமதியில்லை.
பல இடங்களில் செங்கல் வைத்துக் கட்டியும், வேறு விதமான ஆதாரம் (சப்போர்ட்) கொடுத்தும் செய்திருக்கின்றனர். ஆனால் அவை பொருத்தமில்லாமல் இருக்கிறது. இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சியும் சீரமைப்பும் மிகவும் தேவை. இதை நிசர் கானும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
சிற்பக்கலை
உடைந்து விழுந்ததைத் தவிர வெகுவாகத் தேய்ந்தும் போயிருக்கின்றன சிற்பங்கள். பல ஊகிக்க வேண்டியதாகவே உள்ளது. ஆனாலும் விழுந்த துண்டங்களிலும், மீதமிருக்கும் பகுதிகளிலும் அழகான சிற்பங்கள் தென்படுகின்றன. மயில் மேலமர்ந்திருக்கும் முருகனைப் பார்த்து ஆச்சரியம் உண்டாகும். வட இந்தியாவில் இந்த கார்த்திகேயனின் உருவம் அதிகம் காணக்கிடைக்காது. தமிழ்க் கடவுளாகவே முருகன் கருதப்படுகிறான். ஆனால் இந்தக் கோவிலில் முருகனின் வடிவங்கள் காணப்படுகின்றன. அந்தக் குன்றையும் நம் குமரன் பிடித்திருக்கிறான் போல.
இதனாலும் இந்தக் கோவில் தென்னிந்தியாவிலிருந்து வந்த மன்னனால் கட்டப்பட்டதோ என்ற ஐயமும் வருகிறது. இந்திரன் போலவும் சூரியன் போலவும் சில. ஒரு சதுரமான ஃப்ரேம் போன்ற அதிகம் ஆழமில்லா பள்ளத்தினுள்ளே புடைப்புச் சிற்பங்களாய் இவை காணப்படுகின்றன. கலசமும் பூங்கொடிகளும் அழுத்தமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. கர்ப்பகிரக வாசல் நுழைவில் வேலைப்பாடுகள் மிக நுணுக்கமானவை. மேலே லின்டல் எனப்படும் மேற்பகுதியில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் அரிய காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. வாசல் வெகுவாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாசல் வேலைப்பாடு புவனேஷ்வரில் கந்தகிரியில் இருப்பது போலவே இருக்கிறது.
பூ வேலைப்பாடும், அலங்காரங்களும் கோவிலைச் சுற்றிலும் காணப்படுகின்றன. விமானங்களைத் தவிர மீதமிருக்கும் இடங்களில் தரைப்பகுதி பாறை சமன்படுத்தப்பட்டு நல்ல தளமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சிறப்பான விஷயம். சிற்பங்களில் காணப்படும் புன்னகை மனதைக் கவருகிறது. மனித உருவங்கள் விரிந்த கண்களும், புன்னகையும், வடிவான அகன்ற உடம்புடனும் காணப்படுகின்றன. கார்த்திகேயன் அமர்ந்திருக்கும் விதம் அழகாக இருக்கிறது. அதே போல சிவனின் பல சிற்பங்களைக் காண்கிறோம்.
பல தேய்ந்து விட்டதால் முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. ஆனாலும் மீதமிருப்பதிலேயே எழில் கொஞ்சுகிறது. விமானத்தின் மீதமிருக்கும் நாசிகா, முகங்கள், வேலைப்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். அழகிலும் வரலாற்றிலும் கட்டிடக் கலையிலும் முக்கியத்துவமான மஸ்ரூர் இன்னும் அறியப்பட வேண்டும். ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.