நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்
நான் இதுகாறும் சொல்லிவந்த அல்லது இன்னும் சரியாகச் சொல்வதெனில் கோடிகாட்டி வந்த விஷயங்கள் இவைதான்: நாம் இழந்துவிட்டவை பற்றி, அல்லது இருப்பன பற்றிக்கூட பிரக்ஞையே அற்று இருப்பது பற்றி. பின்னர் இதற்கெல்லாம் மேலாக, இல்லாதவற்றை இருப்பனவாக நாம் உலகத்தின் முன்வைத்துப் பறையறிவித்து நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது பற்றி.
என் சிறுவயதுப் பருவத்தில், அதாவது, பின் முப்பதுகளும் முன் நாற்பதுகளுமான காலத்தில் சென்னையை இந்தியாவின் அறிவார்த்த தலைநகரம் (intelectual Capital of India) என்று சொல்லக் கேட்டதுண்டு. அக்காலங்களில் நாட்டின் சிறந்த கல்விமான்கள், டாக்டர்கள், வக்கீல்கள் பிறந்து வாழ்ந்த, புகழ் ஈட்டிய இடமாக இது இருந்தது. இவர்கள்தாம் சுதந்திரப் போராட்டத்திலும் பங்குகொண்டு, தமிழ்நாட்டிற்கு விழிப்புணர்வு ஊட்டியவர்கள்.
இன்று திரும்பிப் பார்க்கும்போது, அறிவார்த்த தலைநகரமாகச் சென்னை எந்த அளவு இருந்ததோ அந்த அளவுக்கு, கல்கத்தா, பம்பாய், அலஹாபாத் போன்ற நகரங்களும் இருந்தன என்று தோன்றுகிறது. ஆனால் அந்த நகரங்களுக்கு இல்லாத ஒரு பெருமை தமிழ்நாட்டிற்கு, சென்னைக்கு உண்டு. இதை அதிக நியாயத்தோடு பண்பாட்டுத் தலைநகரம் என்று சொல்லியிருக்கலாம். நடனமும், சங்கீதமும், தொன்மையான வரலாறும் வளமையும் கொண்ட மொழி. இத்தனையும் வேறு எந்த மொழிப்பிராந்தியத்திற்குமோ நகரத்திற்குமோ இருந்ததில்லை.
நடனம் என்ற ஒன்று வேறு எங்கும் காணப்படாதது. ஒடிஸ்ஸி பின்னரே, ஐம்பதுகளுக்குப் பின்னரே, திரும்பக் கண்டெடுக்கப்படுவதாக இருந்தது. கதக் ஒரு கலை என்றோ, நடனம் என்றோ சொல்வதற்கு அருகதை அற்றது. வெறும் தட்டாமாலை சுற்றுவார்கள். கால்களால் தாளம் போடுவார்கள். நுண்ணிய பார்வையும், தீர்க்கமான ரசனையும் கொண்ட (சங்கீதம், நடனம் விஷயங்களில்) மனதுக்குப் பட்டதைச் சொல்லும் தைரியமும் பெற்ற சுப்புடு, ஏதோ கதக் நாட்டியத்தில் பாவம் சிறப்பாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கதக்கில் ஏது பாவம்? அதற்கு அபிநயமும் கிடையாது. முத்திரையும் கிடையாது. மணிப்புரி நடனம் இருந்தது. பார்க்க அழகாக இருக்கும். மெல்லிய, மிருதுவான சலனங்கள். ஆனால் அதற்கு அதிக முத்திரைகளோ, அபிநயங்களோ விஸ்தாரமாகக் கிடையாது. செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தாக இருக்கும்.
ஆனால் மிகச் சிறந்த சங்கீத மேதைகள் இருந்தார்கள். அவர்களைப் பற்றி ஜனங்களுக்குத் தெரியாது. சங்கீதமும் சங்கீத மேதைகளும் நவாப் தர்பார்களில் அடிமைப்பட்டுக் கிடந்தனர். தர்பாருக்கு வெளியே யாரும் சங்கீதம் கேட்டதில்லை. அது நவாபி, elitist கலை. மாறாக இங்கு சங்கீதம் மக்களை, ஊர் தெருக்களை, திருவிழாக்களை, மண விழாக்களை, கோவில் உற்சவங்களை வந்து நிரப்பிய கலை. இன்றும்தான். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, சமஸ்தானங்களும் நவாபுகளும் சரித்திரத்தில் மறைந்து, இன்று சங்கீதக் கலைஞர்கள் அரசாங்கத்தின் பராமரிப்பில் வந்துவிட்ட நிலையிலும்கூட, வடக்கே சங்கீதம் மக்களைச் சார்ந்ததாக இல்லை. தெற்கேதான், தமிழ்நாட்டிலும்தான் அது, நடனமும் சரி, சங்கீதமும் சரி, Classical ஆகவும், popular ஆகவும் இருந்து வருகின்றன. இங்கு கோவில்களில் ஆழ்வார்ப் பாசுரங்கள், தெருக்களில் தேவாரப் பதிகங்கள் என்ற மரபிற்கு ஒரு நீண்ட வரலாறு – 1,500 வருடங்கள் நீண்ட வரலாறு உண்டு. காற்றில் சங்கீதமும் தெருக்களில் கோலங்களும், கோவில் மணியோசை கேட்டுக் காலம் நிர்ணயிக்கப்படும் அன்றாட வாழ்வும் வேறு எங்கும் இருந்ததில்லை. நடன நிலைகள் சிற்பங்களாகிக் கோவில்களை அலங்கரிக்கும்.
கோவில்கள் என்று பேசும்போது, அவை ஒவ்வொன்றும் ஒரு சிற்பக் காட்சியகம் என்பதையோ, ஒரு புராதன கட்டக் கலைப் படிமம் என்பதையோ நாம் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ‘சாமி கும்மிடப் போகும் இடம்’, அவ்வளவே. தேங்காய், பழம், புஷ்பங்களோடு நேரே கர்ப்பக்கிரஹத்திற்குப் போவதும், அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லி தீபாராதனைக்குப் பிறகு அரைமூடி தேங்காயும் புஷ்பமுமாக நேரே வந்த வழியே அதே நேர்க்கோட்டிலேயே திரும்புதலும்தான் ஒரு சாரார் அறிந்தது. மற்றொரு சாரார் பகுத்தறிவுக்காரர்கள். கோவில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து கபளீகரம் செய்வதற்குத்தான் அவர்களுக்குக் கோவில் வேண்டும்.
இக்கோவில்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளிலிருந்து, ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் வரையிலான சரித்திரத்தைத் தன்னுள் கொண்ட ஒரு கலைப் பொருள் என்பதை இவ்விரு சாராரும் அறிந்ததாகத் தெரியவில்லை. நாஸ்திகமும் ஆஸ்திகமும் கலைக்கு விரோதமான நிலைப்பாடுகளோ, கருத்தோட்டமோ, மனநிலையோ அல்ல. ஆஸ்திகமும் கலை படைக்கும். நாஸ்திகமும் கலை படைக்கும். இரண்டும் வெற்றுச் சடங்குகளாகவோ, வாய் உதிர்க்கும் அர்த்தம் இழந்த ஒலிகளாகவோ சீரழிந்துள்ளது நமது இன்றைய சோகம். ஆஸ்திகம், இருக்கும் கோவில்களைப் பராமரிக்க வேண்டுகிறது. ஆனால் அது வெறும் கட்டடப் பராமரிப்பு, கலையின் பராமரிப்பு அல்ல. இப்படி, பூஜை புனஸ்காரங்களோடு வாழும் கோயில்கள், மேஸ்திரித்தனமான பராமரிப்புகளால், சடங்கார்த்தமான கும்பாபிஷேங்களால் வாழ்ந்தும் அழிந்து வருகின்றன.
மதுரை மீனாட்சி கோவிலை விடவா வாழும் கோயில், பராமரிக்கப்படும் கோயில் இருக்கிறது? இருப்பினும், அது கலைப் பொருளின் பராமரிப்பு அல்ல. நான் 1945-47களில் பார்த்த பொற்றாமரைக் குளத்துச் சுற்றுச் சுவர்களில் இருந்த நாயக்கர் காலச் சுவர் ஓவியங்கள் அனைத்தும் இன்று அழிக்கப்பட்டுவிட்டன. காஞ்சிபுரம் கோவில்களின் சிற்பங்கள், சிற்பங்களாக இல்லை. காரையும் சுண்ணாம்பும் பூசி, சிதைந்த சிற்பங்களை முழுமையாக்குவது அசிங்கப்படுத்துவதாகும். கிரேக்க வீனஸ் சிற்பம் இரண்டு கைகளும் உடைந்த நிலையில்தான் உள்ளது. சிமெண்டிலோ, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸிலோ அது ஒட்ட வைக்கப்படவில்லை. எத்தனை ஊர்களில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முந்திய சின்னச் சின்னக் கோவில்கள் சிதிலமடைந்து கழிப்பறைகளாகச் சீரழிந்து கிடக்கின்றன. இவ்வளவு சோகமான ஓர் நிலை, நமக்கு சரித்திர உணர்வும் இல்ல, கலை உணர்வும் இல்லை, பக்தி உணர்வும் அதன் உண்மை நிலையில் இல்லை என்பதற்கே சாட்சியங்கள்.
சமீபத்தில் கள்ளிக்கோட்டைக்குச் சென்றிருந்தேன். கள்ளிக்கோட்டையில் கால் வைத்ததுமே, இது ஜான் ஆபிரஹாம் நடமாடிய மண் என்று எனக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜான் அபிரஹாம் மலையாளிகளுக்கு ஒரு icon. ஆராதிக்கப்படும் ஓர் ஆளுமை. மிகப்பெரிய புரட்சிகரக் கனவுகள் கொண்டவர். சினிமா தயாரிப்பையே ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியவர். ஆனால் அவர் படங்கள்தான் அவர் கனவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது போய்விட்டன. மிக இளம் வயதில் இறந்துவிட்டதும், ஓர் லட்சியக் கனவு கண்டு வாழ்ந்ததும் அவரை ஒரு icon ஆக்கியுள்ளன,
மலையாளிகளின் இதயங்களில் சாதனைகள் என்று சொல்ல ஏதும் அதிகம் இல்லை. இருப்பினும், இந்த மண்ணில் அவர் வாழ்ந்தவர் என்ற பெருமை, கர்வம், பெருமிதம் அவர்களுக்கு. ஜான் ஆபிரஹாமின் ஒரே ஒரு படத்துடன்தான் அவருடனான என் உறவு. வெகு குறுகிய கால உறவு. இருப்பினும் 40 வருடகாலமாக நான் தமிழில் தமிழனைப்பற்றி, தமிழ் வாழ்வு பற்றி அதன் பெருமைகளையும், க்ஷீணங்களையும் பற்றி எழுதி வந்திருக்கிறேன். 40 வருடகாலம் நான் தமிழில் எழுதியதற்கு என்னை மதிக்கும், என்னைத் தெரிந்து வைத்திருக்கும் தமிழர்களை விட, ஜான் ஆபிரஹாமுடன் ஒரு வருட காலம் கொண்ட உறவிற்கு என்னைத் தெரிந்துவைத்திருக்கும், மதிக்கும் மலையாளிகள் மிக மிக அதிகம். ஜானை விடப் பெரும் சாதனையாளர்களான ஒரு தி.ஜானகிராமனையோ, புதுமைப்பித்தனையோ நினைவுகூர்ந்து, இது ஜானகிராமன் வாழ்ந்த தெரு’ என்றோ, ‘இந்த வீட்டில்தான் புதுமைப்பித்தன் வசித்தார்’ என்றோ எந்தத் தமிழனும் பெருமையாகச் சொல்லிக்கொண்டதை நான் மயிலாப்பூரிலோ, கும்பகோணத்திலோ, திருவல்லிக்கேணியிலோ கேட்டதில்லை.
இவ்வளவுக்கும் ஜான் பிறந்த இடமல்ல கள்ளிக்கோட்டை. வைக்கம் முகமது பஷீரும் அங்கு பிறக்கவில்லை. அவருக்கும் அங்கு ஒரு நினைவாலயம் இருந்தது. எஸ்.கே. பொற்றக்காடுக்கும். எஸ்.கே. பொற்றக்காடின் நினைவு இல்லத்தில் அவர் சம்பந்தப்பட்ட அவர் பயன்படுத்திய அத்தனை பொருள்களும், அவர் கையெழுத்துப் பிரதிகள், டைப்ரைட்டர், பெற்ற விருதுகள், போட்டோக்கள், தினக்குறிப்புப் புத்தகங்கள் எல்லாம் இருந்தன.
எஸ்.கே. பொற்றக்காடைவிடப் பெரிய இலக்கிய ஆகிருதிகள் தமிழ்நாட்டில் இருந்தனர். அவர்களுக்கு ஞானபீடப் பரிசும் இல்லை. சமூகக் கௌரவமும் இல்லை. நாம் மதிப்பது இந்தத் தமிழ்ச் சமூகத்தைச் சுரண்டிச் சுரண்டி ஆபாசத்திற்குத் தள்ளும் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும்தான். அகலமற்று நெருக்கடியான ஒரு முச்சந்தியில் பிரம்மாண்டமான, மார்பளவு சிலை ஒன்று எஸ்.கே. பொற்றக்காடினது. இந்தக் கடைத்தெருவைப் பற்றிப் பொற்றக்காடு எழுதி இந்தத் தெருவிற்கு அமரத்துவம் தந்துவிட்டார் என்று எனக்குச் சொல்லப்பட்டது.
என் மனம் நெகிழ்ந்தது. சில பத்தாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததைச் சரித்திரமாக்கி அமரத்துவம் தருகிறீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தந்த பதில் என்ன தெரியுமா? என் தமிழர்களுக்கு நான் அதை அடிக்கோடிட்டு எழுத வேண்டும். உரத்து வீட்டுக்கூரை மேல் நின்று பறையறிவிக்க வேண்டும். ஏனெனில் இது தமிழர்களைப் பற்றியது. இப்போது நன் சொன்ன பிறகும் அவர்களுக்கு விளங்காதது. அவர் சொன்னார், ‘இது என்ன பெரிய விஷயம்? தமிழ்நாடு சென்றால் உங்கள் ஒவ்வொரு ஊரும் சரித்திரம் சொல்கிறதே!’
சட்டெனப் பொட்டில் அறைந்த மாதிரி விழும் உண்மை. இது மதுரை, காஞ்சி, மகாபலிபுரம் என்று மாத்திரம் இல்லை. ஒவ்வொரு ஊரும் சிறு சிறு குக்கிராமமும் மிக நீண்ட சரித்திரம் கொண்டது. அந்த சரித்திரத்தை மன்னர்கள் மட்டுமல்ல. நம் புலவர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் பாடி நிரந்தரத்துவம் கொடுத்துள்ளார்கள். அந்த நிரந்தரத்துவத்தின் இலக்கியப் பதிவுகளை நாம் பெரும்பகுதி இழந்துவிட்டோம். ஆனால் நிறைய சிற்ப, ஓவிய, கட்டடப் பதிவுகள் ஒவ்வொரு கிராமத்திலும் சிதைந்து கிடக்கின்றன. நம்மூர் முடுக்கு, பிள்ளையார் கோவில்கள் போல கேரளம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஒவ்வொரு பகவதி காவும் புனித ஸ்தலங்களாக உள்ளன. ஒன்றுகூட சிதைந்து, கேட்பாரற்றுக் கிடப்பதில்லை. காரணம், நமக்கு சரித்திரப் பிரக்ஞையோ, கலை உணர்வோ, சமூகப் பொறுப்புணர்வோ கூட கிடையாது. தலைவன் என்று சொல்லிக் கொள்பவன்கூட, தனக்கு சொத்து சேர்த்துக்கொள்கிறானே ஒழிய, தமிழ்நாட்டைப் பற்றிய கவலை அவனுக்குக் கிடையாது.
அன்று குடிசைகள், தெருக்கள் சுத்தமாகத்தான் இருந்தன. இன்று நகரங்கள் கூடக் குப்பைக் கூளங்களாகக் காட்சியளிக்கின்றன. பஸ் ஸ்டான்டுகளில் கழிவுநீர் துர்நாற்றம் பரவிக் கிடக்கிறது. எந்தப் பொது இடத்தின் சுவர்களுமோ, தனியான வீட்டுச் சுவருமோ சுத்தமாகக் காட்சி தருவதில்லை. தமிழ்நாடே வெகு வெகு ஆபாசமான சுவரொட்டிக் கலாச்சாரத்தில் அமிழ்ந்து கிடக்கிறது. இந்தச் சுவரொட்டிகள் நாட்டை ஒரு குப்பை மேடாக்கியுள்ளன. சாக்கடைகள் அன்றும்தான் இருந்தன. இன்று அவை பாலித்தீன் பைகளால் அடைபட்டு ஓட்டமற்று தேங்கி, சமயங்களில், சாலைகளில் வழிகின்றன. நம் நகரம் ஒவ்வொன்றையும், கிராமங்களையும், சிற்றூர்களையும் அசுத்தப்படுத்துவது சாக்கடைகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளது கூச்சல்கள் மாத்திரமல்ல, அவர்களது சுவரொட்டிகளும்தான், சினிமாக் கூச்சலும்தான். தமிழ்நாடே ஒரு பிரம்மாண்ட சாக்கடையாக, குப்பைத் தொட்டியாகத்தான் எனக்குக் காட்சி தருகிறது.
நான் சிறுவயதில் பார்த்த தமிழ்நாடு ஏழ்மையில் வாடிய தமிழ்நாடாயிருந்தாலும் அது அழகானது. சுத்தமானது. மனதுக்கும் கண்களுக்கும் ரம்மியமானது. ‘சென்னை – நூறு வருடங்களுக்கு முன்’ என்றொரு புத்தகம் சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்திருந்தது. அதில் ஒரு புகைப்படம். கூவம் நதியின் புகைப்படம். அதில் குளித்துக் கரையேறின ஒரு பிராமணர் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து சந்தியாவந்தனம் செய்கிறார். அன்றைய கூவம் அதுவாக இருந்தது. குளித்துக் கரையேறும் கூவம்.
கூவம் இன்று பெற்றுள்ள அலங்கோலத்தைத்தான், நமது நாடு, கிராமங்கள், சுவர்கள், தெருக்கள், நமது அரசியல், நமது கலாசாரத் தலைமைகள், நமது அரசியல் தலைமைகள் எல்லாம் அடைந்துள்ளன. வறுமை அல்ல அலங்கோலத்திற்குக் காரணம். அழகுணர்வு அற்றுவிட்டதான் காரணம். கூச்சலும், ஆபாசமும் அமைதியின் இடத்தைப் பறித்துக்கொண்டுள்ளன.
நமது அன்றைய வீடுகள், எளிய வீடுகளும் கூட, அழகானவை. அமைதியானவை. ஆரோக்கியமானவை. அவை இன்று அழிந்து வருகின்றன. நமது திண்ணைகளும், கூடங்களும், தாழ்வாரங்களும் ஆரோக்கியமாக, காற்றோட்டமாக மிதமான வெப்பத்திலும் நாம் வாழ உதவுகிறவை. தெருவிலிருந்து பார்த்தால் இடைகழி, தாழ்வாரம், பின்கட்டு எல்லாம் தாண்டி, கொல்லைப்புறக் கதவுக்கு அப்பால் நிற்கும் தோட்டமும் ஆட்களும் தெரியும். இக்காட்சியின் அடுக்கடுக்கான ஒளி, பரவியும் நிழல் தருவதும் மாறி மாறி வரும் காட்சி கவித்வமானது. பாரம்பரிய இக்கட்டட ஞானம் ஐ.ஐ.டி.யில் கற்றுத்தரப்படாத மரபு வழி வந்த ஞானம். ஆராக்கியத்திற்கும், வாழும் வசதிக்கும் ஏற்றதாக இருந்ததோடு அழகானதாகவும், எளிமைத் தோற்றத்திலும் கவித்வம் நிறைந்ததாகவும் இருந்தது. இதன் பதிவுகளை டி.எஸ்.நாகராஜனின் புகைப்படங்களில் காணலாம். ந.முத்துசாமியின் கதைகளில், ஜானகிரராமனின் கதைகளில் காணலாம். கிரிஷ் காஸரவல்லியின் படங்களில், சத்யஜித் ரேயின் படங்களில் அந்தந்தப் பிராந்தியத்தின் கிராமத்தின் வீடு நமக்களிக்கும் கவித்துவத்தைக் காணலாம். இக்கவிதையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. சத்யஜித் ரேயின் முத்திரையேயாகிப் போனவை இக்காட்சிகள். முற்றம், தெருவை நோக்கித் திறந்திருக்கும் முன்கதவின் நீள்சதுரச் சட்டம் தரும் தெருவின் பிரகாசம். திரும்பத் திரும்ப ரேயின் படங்களில் வரும் காட்சி நம் வாழ்வில் இரைந்து கிடந்த இக்காட்சி, நமது எந்தத் திரைப்படத்திலும் பதிவானதில்லை.
ஒரு ‘பாபா’ படத்திற்கு, ‘ஆளவந்தான்’ படத்திற்கு ஆகும் செலவில், செட்டிநாடு முழுவதும் உள்ள பாழடையும் வீடுகள் அனைத்தும் பாதுகாக்கப்படக்கூடும். ஆனால் நமது முனைப்புகள், மதிப்புகள் வேறு. இப்படங்களுக்குச் செலவழிக்கப்படும் பல பத்து கோடிகளில் நமக்குப் பெருமை அளிக்கும் இந்த வீடுகள் காப்பாற்றப்படுவது பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. இன்று இந்த வீடுகளின் மரப்பகுதிகள் பெயர்க்கப்பட்டுக் கதவுகளும், உத்தரங்களும் விற்கப்படுகின்றன. வீடுகள் பாழடைகின்றன. நாசமாக்கப்படுகின்றன. யாரும் ஒரு சொட்டுக்கண்ணீர் சிந்தியதாகத் தெரியவில்லை.
அவ்வளவாக சரித்திரம் நீளாத ஐரோப்பிய நாடுகளில் (உதாரணமாக ஜெர்மனி, இங்கிலாந்து போன்றவை) ஒரு நூற்றாண்டு இரு நூற்றாண்டுப் பழமையான வீடுகள், தெருக்கள்கூடப் பழமையின் சின்னமாகப் பாதுகாக்கப்படுகின்றன. நமக்கு ஆயிரம் வருஷக்கணக்கில் சரித்திரமும் பழமையும் உண்டு. சம்பந்தர் 1300 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்த ஊர் இதோ என்று சீர்காழியைக் காட்ட முடியும். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை திருத்தலம் இதோ என்று திருப்பரங்குன்றத்தைக் காட்டமுடியும். இன்றும் அவை வாழும் ஊர்கள்.
யாரும் அதிகம் அறியாத என் சொந்தக் கிராமம் உடையாளூரில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் உண்டு. அதன் கல்வெட்டுகளின் ஒரு படி அச்சிடப்பட்டு கண்ணாடிச் சட்டமிடப்பட்டிருக்கும். 47,48க்குப் பிறகு போன வருடம் போனபோது, அது எங்கோ தொலைக்கப்பட்டுவிட்டது. அதுபற்றிக் கேட்டபோது அர்ச்சகருக்கு அது பற்றியே ஏதும் தெரியாது எனத் தெரிந்தது.
(21.6.2002 அன்று எழுதியது.)
சந்தியா பதிப்பகத்தின் வெளியீடான ‘கலை உலகில் ஒரு சஞ்சாரம்’ என்ற நூலில் இருந்த நீண்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.
-oOo-