Posted on Leave a comment

ஒளிவழிக் கணினிகள் – ஆப்டிகல் கம்ப்யூடிங் | ஹாலாஸ்யன்


கூகுளில் எதையாவது தேடினால், தேடல் முடிவுகளுக்கு மேல், பொடி எழுத்தில் ‘About 22,40,000 results (0.80 seconds)’ இந்த மாதிரி ஒரு வரி இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? ஷாருக்கானின் மகன் எதிர்காலத்தில் யாரைக் கல்யாணம் பண்ணுவார் என்று தேடுகையில் இதையெல்லாம் பார்க்கத் தோன்றுமா என்ன?

அந்தத் தேடல் எடுத்துத் தரும் முடிவுகளின் எண்ணிக்கையையும், அதைத் தர எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்தையும் கவனித்துப் பாருங்கள். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? எப்படி இது சாத்தியம்? நம் கணினிகள் அசாத்திய வேகமாக இருக்கிறதல்லவா?

நீங்கள் தேடவேண்டியதைத் தேடி எண்டர் தட்டுகிற அடுத்த நொடி எலெக்ட்ரான்கள் பறக்க ஆரம்பிக்கின்றன. கடலுக்கடியில் புதைக்கப்பட்ட கண்ணாடி இழைக் கம்பிகள் வழியாக நீங்கள் தேடியது உங்கள் கணினியில் காண்பிக்கப்படுகிறது.

கணினிகளின் வேகம் அதிகரித்திருக்கிறது. குறுக்கே சட்டென்று ஒரு வண்டி வந்தால் சட்டென்று பிரேக் அடித்து நிற்கக் கூடிய தானோட்டிக் கார்கள் டெஸ்லாவில் வந்துவிட்டன. சாவுகிராக்கி என்று திட்டக் கற்றுக்கொள்ளவில்லை இன்னும். இந்த வேகம் வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு பதினெட்டு மாதத்திற்கும், ஒரு சதுர செண்டிமீட்டர் அளவிலான சிலிக்கான் சில்லில் விதைக்கப்பட்டிருக்கும் ட்ரான்ஸிஸ்டர்களின் எண்ணிக்கை இருமடங்காகிறது. இதனை மூர் விதி (Moore’s law) என்று அழைக்கிறார்கள். ஒரு நொடிக்கும் பல லட்சம் முறை அணைக்கவும், திரும்பப் போடவும் திறன்கொண்ட ட்ரான்ஸிஸ்டர்கள்தான் இன்றைய சிலிக்கான் உலகின் உயிர்நாடி. அவற்றை நெருக்கமாகத் திணித்து திணித்து இன்னும் அதிக அளவு ட்ரான்ஸிஸ்டர்களைக் கொண்ட சில்லுகளை உருவாக்கிதான் மூர் விதியை நாம் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த விதிக்கும் ஒரு வரம்பு இருக்கிறதல்லவா. நான் கடைசியாய் கவனிக்கையில் ஒரு ட்ரான்ஸிஸ்டரின் குறைந்தபட்ச தடிமன் 14 நேனோ மீட்டர். இன்னும் இரண்டொரு வருடங்களில் ஒரு ட்ரான்ஸிஸ்டரை நாம் 5 நேனோ மீட்டர் அளவில் செய்துவிடுவோம். இதுதான் உச்ச வரம்பு. ஒரு ட்ரான்ஸிஸ்டர் ஒரு அணுவின்
தடிமனே இருக்கும். அப்போது சில குவாண்டம் விளைவுகள் செயல்படத் தொடங்கி விடுகின்றன.

அணுக்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே நாம் செல்லும்போது, சாதாரண இயற்பியல் விதிகள் ஓரங்கட்டப்பட்டு, ‘இனிமே நாங்க பாத்துக்கறோம்’ என்று குவாண்டம் விதிகள் களம் இறங்குகின்றன. எலெக்ட்ரானை பாயவிட்டால் ஆன், பாய விடாவிட்டால் ஆஃப் என்கிற கோட்பாடுடைய ட்ரான்ஸிஸ்டர்களின் அளவு ஐந்து நேனோ மீட்டரை எட்டிவிட்டால் குவாண்டம் டன்னலிங் (Quantum Tunneling) என்ற விளைவு செயல்படத் தொடங்குகிறது. அதாவது அந்த ட்ரான்ஸிஸ்டரை, பேய்ப் படங்களில் அப்படியே உடம்புக்குள் பேய் ஊடுருவிப் போவதுபோல எலெக்ட்ரான்கள் ட்ரான்ஸிஸ்டரைக் கடந்து போய்விடும். அதாவது உங்களால் ட்ரான்ஸிஸ்டரை அணைக்கவே முடியாது. அவற்றால் எந்தக் கணக்கையும் செயல்படுத்த முடியாது. அதுதான் உச்சவரம்பு. அதற்குமேல் நமக்கு வேகம் வேண்டுமெனில், அதிக சில்லுகளை வாங்கிப்போட்டுப் பயன்படுத்த வேண்டும். அந்த வரம்பை நாம் வெகு சீக்கிரம் எட்ட இருக்கிறோம்.

இன்னொரு தடை எலெக்ட்ரான்களின் வேகம். அது மிகவும் குறைவு. இதென்ன புது குண்டு, நான் சுவிட்ச் போட்ட அடுத்த நொடி ஃபேன் சுற்ற ஆரம்பிக்கிறது? எங்கோ இருக்கும் மோட்டார் இயங்கி நீர் இறைக்கிறது. இதெப்படி குறைந்த வேகமாக இருக்க முடியும்? நீங்கள் சுவிட்ச் போடுகையில் அங்கிருக்கும் எலெக்ட்ரான் நகர்ந்து மொத்த வயர் நீளத்திற்கும் போய் ஃபேனில் நுழைந்து சுற்ற வைக்கிறது என்று நினைத்தால் தவறு. அந்த எலெக்ட்ரான் இரண்டு மூன்று அணுக்கள் கூட நகர்ந்திருக்காது. ஆனால் அங்கிருந்து அடுத்த எலெக்ட்ரான் கிளம்பி நகரத் தொடங்கிவிடும். மின்சாரம் பாய்தல் ஒருவகையான டாமினோ விளைவுதான் (domino effect). ஒரு ஒற்றை எலெக்ட்ரான் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள கடத்தியின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்குப் போக சில நிமிடங்கள் வரை ஆகும். வேகத்தைத் தவிர மின் தடை (resistance), மின்சாரம் பாய்வதினால் உருவாகும் வெப்பம் இரண்டும் பெரிய தொழில்நுட்ப முட்டுக்கட்டைகள். இவையனைத்தையும் தாண்டித்தான் இன்றைய மின்னணுவியல் துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்? மேற்கொண்டு முன்னேற்றத்திற்கான உச்ச வரம்பை எட்டப் போகிறோம் என்று இருக்கையில் அடுத்த நகர்வு என்ன?

கொஞ்சம் மாற்றி யோசிப்போம். கணினிகளுக்கு அடிப்படை இரண்டு. ஒன்று தகவர் கடத்துதல் (data moving). மற்றொன்று தகவல்களை வைத்து கணக்குகள் போடுதல் (data processing). இப்போது நடைமுறையில் இருக்கிற செயல்முறை இந்த இரண்டையும் எலெக்ட்ரான்களை வைத்துச் செய்கிறது. கணினிக்குள்ளே வயர்கள் மூலமாகத் தகவல்கள் கடத்தப்படுகின்றன. ட்ரான்ஸிஸ்டர்களின் செயல்பாடு மூலம் தகவல்களில் கணக்குகள் போடப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளை ஏன் எலெக்ட்ரான்களை விட்டுவிட்டு வேறு ஏதேனும் ஒன்றை வைத்துச் செய்யக்கூடாது. வேறு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஒளி.

எலெக்ட்ரான்களுக்கு இருக்கிற சட்ட சிக்கல்கள் ஒளிக்குக் கிடையாது. அதற்கு எடை கிடையாது. அதன் வேகம் பிரபஞ்சத்தில் வேறு எதனாலும் விஞ்ச முடியாததாய் இருக்கிறது. ஆக ஒளி ஒரு அருமையான தீர்வு. இப்படி ஒளித்துகள்களை கணினிகளில் பயன்படுத்துவதை ஒளிவழிக் கணினிகள் (optical computing அல்லது photonic computing) என்று அழைக்கிறார்கள்.

இது ஒன்றும் ரொம்ப புதிய யோசனையெல்லாம் கிடையாது. 1960 களில் இருந்து பலரால் பரிந்துரைக்கப்பட்டு வந்ததுதான். நடுவில் சிலிக்கான் புரட்சி அசுரவேகத்தில் எழும்ப இதைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது IBM, HP போன்ற நிறுவனங்கள் இதில் கோடி கோடியாய்க் கொட்டிக் கொண்டிருக்கின்றன.

ஒளிவழிக் கணினியின் அடிப்படைக் கோட்பாடு இதுதான். தகவல் ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு எலெட்க்ட்ரான்களாகப் பாயாமல் ஒளியாகப் பாய வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் உலகின் பெரும்பான்மை இணையம் கடலடியில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடி இழைக் கம்பிகள் மூலமே கடத்தப்படுகிறது. ஆனால் நம் கணினிகளுக்கு இணையம் வழங்கும் கருவிகளால் அதை நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் ஒளி மூலம் அனுப்பப்பட்ட செய்தி அங்கு எலெட்க்ரான் சமிக்ஞைகளாக மாற்றப்படுகிறது. இது புறவழிச்சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கையில் சட்டென்று ஒரு சந்தடி மிகுந்த ஊருக்குள் நுழைவதற்குச் சமம். மேலும் இந்த ஒளியில் இருந்து எலெக்ட்ரான் சமிஞ்கைகளாக மாற்றுதல் நேரம் மற்றும் ஆற்றல் இரண்டையும் வீணடிக்கிற செயல். அந்த ஒளி-எலெக்ட்ரான் சமிஞ்கை மாற்றத்தைக் கடாசிவிட்டு, கணினிக்குள்ளேயும் ஒளி மூலமாகத் தகவலைக் கடத்துதல் முதல்படி.

ஒளிமூலங்களுக்கு லேசர்கள், கண்ணாடி இழைகள், மிக நுண்ணிய பிரதிபலிக்கும் கண்ணாடிகள், ஒளி உணர்விகள் (optical sensors) வேண்டும். இதனை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடிகிறது. சவாலே அந்தத் தகவல்களை வைத்துச் செய்யும் கணக்குகளில்தான் இருக்கிறது. தகவல் நகர்தலை ஒளி மூலம் நடத்தி, கணக்குகளை நடைமுறையில் இருக்கிற ட்ரான்ஸிஸ்டர்களைக் கொண்டு நிகழ்த்துவதில் ஒன்றும் பெரிதாய் மாறிவிடாது. நாம் ஏற்கெனவே பார்த்த நேரம் மற்றும் ஆற்றல் விரயம்தான் மிச்சம்.

ஒரு ட்ரான்ஸிஸ்டர் மின்சாரத்தைக் கடத்தினால் அது ஆன் ON, கடத்தாவிட்டால் OFF என்பதே கணினியின் அடிப்படை விதி. அந்த ட்ரான்ஸிஸ்டர்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கி தர்க்கக் கதவங்களாகச் (Logic Gates) செயல்படுகிறது. இவைதான் கணக்குகளின் அடிநாதம். இப்போது இந்தக் கணக்குகளை ஒளிமூலம் செய்ய வைப்பதுதான் உண்மையான சவால். இதற்காகச் சில விசேஷப் பொருட்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவைகளுக்கு ஒளிவழி ட்ரான்ஸிஸ்டர்கள் என்று பெயர். பெரும்பான்மை தர்க்கக் கதவங்கள் இரண்டு உள்ளீடுகளைக் (input) கொண்டு ஒரு வெளியீடைத் (output) தருபவை. உதாரணத்துக்கு மிக அடிப்படையான AND தர்க்கக் கதவத்தை எடுத்துக்கொள்வோம். இரண்டு உள்ளீடுகளும் உண்மை என்றால் மட்டுமே வெளியீடு உண்மையாக இருக்கும். இல்லையெனில் இயங்காது. ட்ரான்ஸிஸ்டர்களால் இயங்கும் AND தர்க்கக் கதவத்தில் இரண்டு உள்ளீடுகளையும் மின்சாரம் பாய்வது என வைத்துக்கொண்டால் வெளியீட்டில் மின்சாரம் பாயுமாறு வடிவமைக்கலாம். ஆனால் ஒளியில் இதைச் சாத்தியப்படுத்துவதற்கு கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டும். அங்கு கைகொடுப்பது ஒளியின் குறுக்கீடு என்ற பண்பு.

அலைக்குறுக்கீட்டை நீங்கள் கடற்கரையில் உங்கள் கண்களால் பார்த்திருப்பீர்கள். இரு சிறு அலைகள் சட்டென்று ஒன்று சேர்ந்து பெரிய அலையாக மாறும். பெரும் அலையாக இயங்கும் இரண்டு ஏதோ ஒரு காரணத்தால் அப்படியே கரையைத் தொடாமலேயே அடங்கிப் போகும். இரண்டு அலைகளின் மேடு பள்ளங்களும் ஒன்றோடொன்று இயைந்து இருந்தால் புது அலையின் வீச்சு அதிகமாக இருக்கும். ஏறுக்கு மாறாக இருந்தால் அப்படியே அடங்கிவிடும். ஒளியும் அதுபோலத்தான். அப்படியானால் இந்தக் குறுக்கீடு என்னும் பண்பைக் கொண்டு நாம் AND தர்க்கக் கதவத்தை விளக்கி விட முடியும்தானே. இரு ஒன்றோடொன்று இயைந்த ஒளி அலைகள் ஒன்றாகி அதிக வீச்சுடன் புது ஒளி அலை வரும். இதன்மூலம் கணக்குகள் போட முடியும். இப்படி தர்க்கக் கதவங்களுக்கு ஒளியைப் பயன்படுத்தி கதவங்கள் செய்வதைச் சாத்தியப்படுத்திவிட்டார்கள்.

இதில் இன்னொரு வசதி உண்டு. முன்பெல்லாம் நம் ஊர் தபால்துறையின் கடிதங்கள் ஓடும் ரயிலிலேயே இரவில் பிரிக்கப்படும். கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது data is processed while it is moved. தகவல் நகரும்போதே கணக்கும் போடப்படுகிறது. ஒளிவழிக் கணினிகளில் அது சாத்தியம். இப்போதைய கணினிகளில் தகவல், வன் தட்டுகள் (hard drives) அல்லது பிற தகவல் சேமிக்கும் சாதனக்களில் இருந்து தகவல்களைக் கணிக்கும் ப்ராஸஸருக்குச் கொண்டுசெல்லப்பட்டுக் கணிக்கப்படும். ஆனால் ஒளிவழிக் கணினியில் இதைப் போகிற போக்கில் செய்ய முடியும்.

ஒளிவழிக் கணினிகளின் சாதகங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.

1. அவற்றின் இயங்குவேகம், இந்தப் பிரபஞ்சத்தில் எதனாலும் விஞ்சமுடியாததாய் இருக்கும்.ஒளிவழி இயங்கும் ப்ராஸஸர்கள், நிஜமாக ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும். நாம் தற்போது பயன்படுத்தும் ப்ராஸஸர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய அதிக ட்ரான்ஸிஸ்டர்களையும், அதிக சிலிக்கான் சில்லுகளையும் கோருகின்றன.

2. ஒரே பாதையில் இரு வேறு அலைநீளங்களில் வேறு வேறு தகவல்களை எந்த வித சேதாரமும் இல்லாமல் அனுப்ப முடியும். இதனால் ஒளிவழிக் கணினிகளின் தகவல் நகரும் பாதைகள் இரு பரிமாணத்தில் இருந்தாலே போதுமானது. ஆனால் எலெக்ட்ரான்களாக தகவல் நகரும் பட்சத்தில் இது சாத்தியமில்லை. இங்கு முப்பரிமாண வயரிங் அவசியம்.

3. ஒருமுறை ஒளி உற்பத்தி ஆகிவிட்டால் அதன்பிறகு அது ஆற்றலை அது கோருவதில்லை. மேலும் அது பாய்வதற்கு மின்னழுத்த மாறுபாடெல்லாம் தேவையில்லை. போகச்சொன்னல் போய்விடும்.

4. தர்க்கக் கதவங்கள் வேறு எந்த விதிகளாலும் மாறுபடாதவை. அதனால் அளவிற் சுருங்கினாலும் பிரச்சினையில்லை

5. மின்கடத்திகள், குறைகடத்திகள் என்று இப்பொழுது நாம் பயன்படுத்தும் கணினிப் பாகங்களோடு ஒப்பிடுகையில், ஒளியைக் கடத்தும் பொருட்கள், லேசர்கள், நுண்ணிய பிரதிபலிக்கும் கண்ணாடிகள் ஆகியவற்றைத் தயாரிப்பது எளிதானதும் சிக்கனமானதும் ஆகும்.

6. தற்போது நாம் பயன்படுத்தும் கணினிகள் தகவலை ஏகப்பட்ட முறை இடம்மாற்றுகின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு இடம் மாறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதன் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும். ஒரு வைரஸோ அல்லது தகவல்கள் திருடுகிற நிரலோ தகவல்களைத் திருடிக்கொண்டு போய்விடும். ஆனால் தகவல் நகர்கிற போதே கணிக்கப்படுகையில் தகவல் திருட்டுக்கான சாத்தியக்கூறு பல மடங்கு குறைகிறது.

7. ஒளி நகர்கையில் எந்தவிதமான ஆற்றலையும் வீணடிக்காததால் கணினிகள் வெப்பமாகாது. அவற்றைக் குளிர்விக்க தனியே குளிர்சாதன வசதி தேவையில்லை. இது கணினிகளுக்கான பராமரிப்புச் செலவில் ஒரு பெரிய தொகையை மிச்சப்படுத்தும்.

சரி இவ்வளவு இருக்கிறதே. இதில் சவால்களே இல்லையா என்றால் அதுவும் உண்டு.

1. ஒளியை நகர்த்துதலும், நகரும்போதே கணித்தலும் எளிது. ஆனால் சேமித்தல் கடினம். ஒளியை எதனாலும் நிறுத்தி வைக்க முடியாது. காரணம் அதற்கு மின்னேற்றமோ (charge), காந்தப்புலமோ (magnetic field) கிடையாது.  இதனால் தகவல் சேமிப்பு என்பது இப்போது வரை கொஞ்சம் சிக்கலாகவே இருக்கிறது. இறுதியாக, கணக்குகள் போட்டுச் சேமிக்க வேண்டிய பகுதி இன்னும் அவ்வளவு தெளிவில்லாமல் இருக்கிறது. முப்பரிமாணப் படிம நினைவகங்கள் (halographic memory) என்ற ஒளி அலைகளில் தகவல் சேமித்தல் தீர்வாகச் சொல்லப்பட்டாலும், அதன் இயங்கக்கூடிய மாதிரி (prototype) வடிவம் இன்னும் கணினிகளுக்கும் அடங்கும் வகையில் சுருங்கவில்லை. ஆய்வுகள் தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கின்றன.

2. ஒளிவழி இயங்கும் ப்ராஸஸர்கள், தகவல் கடத்தும் உறுப்புகள் எல்லாமே செயல்முறையில் நிரூபிக்கப்பட்டாலும், அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதற்கான முறைகளும் முதலீடும் இன்னனும் கூடிவரவில்லை. ஆனால் இது எல்லாப் புது தொழில்நுட்பங்களுக்கும் நிகழ்வதுதான். முதல் ட்ரான்ஸிஸ்டர் நாம் வைத்திருக்கிற கைபேசிகளை விடப் பெரிதாக இருந்தது. இன்று நம் கைபேசிக்குள் கோடிக்கணக்கான ட்ரான்ஸிஸ்டர்கள் இருக்கின்றன. இது எல்லாமே நாள்போக்கில் வந்துவிடும். ஏற்கனவே சில தொழில்நுட்ப ஜாம்பவான்கள் களத்தில் குதித்துவிட்ட நிலையில் இது இன்னும் துரிதப்படும்.

தொழில்நுட்பம் பல சமயத்தில் ஏற்கெனவே இருந்த யோசனைகளைத் தூசுதட்டி எடுத்து அதில் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது. நாம் இன்று பயன்படுத்தும் கணினிகள் பயணித்து வந்த பாதை ஒரு மிகப்பெரிய பாய்ச்சல். அதன் ஆரம்பகாலத் தொழில்நுட்ப மைல்கல்கள் இந்த அளவு அறிவியல் முன்னேற்றம் இல்லாதபோதே நிகழ்ந்தவை. அவற்றோடு ஒப்பிடுகையில் ஒளிவழிக்கணினிகள் கொடுத்து வைத்தவை. ஏற்கெனவே ஒரு துறையை வளர்த்தெடுத்த அணுபவம் இருப்பதால் சில விஷயங்களை நாம் எளிதாகச் சாதித்துவிட முடியும். அடுத்த பத்தாண்டுகளில் முழுதாய் ஒளிவழியே இயங்கும் கணினிகள் சாத்தியமே. காத்திருப்போம்.

Posted on Leave a comment

ஒளிமயமான எதிர்காலம் | ஹாலாஸ்யன்


வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் மூவர் என்று பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வாரைச் சொல்வார்கள். மூவரும் திருக்கோவிலூரில் ஒருமுறை ஒருவர் படுக்க, இருவர் அமர மூவர் நிற்க மட்டுமே இடமுள்ள ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ள, நான்காவது ஆளாக பெருமாள் வந்து மூவரை நெருக்குகிறார். ஒளியில்லாத இடத்தில் நெருக்குகிற ஆளை யாரென்று பார்க்க, பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் விளக்கு ஏற்ற, பேயாழ்வார் நாலாவது ஆளான பெருமாளைக் கண்டதாகப் பாடுகிறார். ‘வையம் தகழியா வார்கடலே நெய்யாக’ என்று தொடங்கி பொய்கையாழ்வார், நூறு பாடல்கள் கொண்ட அந்தாதியும், ‘அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக’ என்று தொடங்கி பூதத்தாழ்வார் நூறு பாடல்களைக் கொண்ட அந்தாதியும், அந்த வெளிச்சத்தில், ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று தொடங்கி நூறு ‌அந்தாதிப் பாடலை பேயாழ்வாரும் பாடினார்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இவை முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருவந்தாதி என அழைக்கப்படுகின்றன. விளக்குகள் மனிதக் கண்டுபிடிப்பில் முக்கியமானவை. உற்பத்தியில் ஈடுபட்ட கால அளவை நீட்டித்ததில் விளக்குகளுக்குப் பெரும்பங்கு உண்டு.

ஆனால் தொடக்கத்தில் விளக்கு என்பது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பு மட்டுமே. நெருப்பில் ஒளி என்பது உபரி‌. மூலக்கூறுகளின் பிணைப்புகள் உடைந்து வெளியேறும் வெப்பத்தில் மூலக்கூறுகளின் எலெக்ட்ரான்கள் தற்காலிகமாக அதிக ஆற்றல் நிலைக்குப் போகும். அவை திரும்ப பழைய இடத்திற்குக் திரும்புகையில் அந்த ஆற்றல் வேறுபாட்டை ஒளியாக வெளிவிடும். வெப்ப அலைகளான அகச்சிவப்பு அலைகளுக்கு அருகில் இருக்கும் நிறங்களான மஞ்சள் சிகப்பு நிறத்திலேயே அந்த விளக்குகளின் ஒளி இருக்கும். விளக்கு என்றாலே பல வருடங்களாக மஞ்சள் நிற ஒளி தருபவையாகத்தான் இருந்தன.

இதன்பின்னர் பெட்ரோலியப் பொருட்களை எரிக்கும் விளக்குகள் வந்தன. பெட்ரோமாக்ஸ் அதில் ஒரு வகை. அவற்றை gas lighting என்று அழைத்தார்கள். விளக்குகளில் மிகப்பெரிய மாற்றம் மின்சாரம் வந்தபின்னர்தான் வந்தது
.

மின்சார விளக்குகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை. எரிபொருளின் அளவை சோதிக்கத் தேவையில்லாத, புகையை வெளிவிடாத விளக்குகள் அவை. அவற்றின் இயக்கம் கிட்டத்தட்ட நெருப்பு விளக்குகளைப் போல்தான்‌. நெருப்பின் வெப்பத்திற்குப் பதிலாக அவை மின் ஆற்றலை கிரகித்து, வெளிவட்ட எலெக்ட்ரான்களின் ஆற்றலை ஏற்றி விடும். அவை திரும்ப பழைய இடத்திற்கு வருகையில் அந்த ஆற்றல் வித்தியாசத்தை ஒளியாக வெளிப்படுத்தும். மெல்லிய கார்பன் அல்லது உலோக இழைகளில் மின்சாரம் செலுத்தி ஒளியைப் பெறும் இவ்விளக்குகள் incandescent lamps என்று அழைக்கப்பட்டன. ஆனால் அவையும் பெரும்பான்மை ஆற்றலை வெப்பமாகவே வீணடித்தன‌‌. சிறிது நேரம் எரிந்து அணைந்த குண்டு பல்பைத் தொட்டுப் பார்த்தால் நான் சொல்வது புரியும்‌.

பின்னர் வாயு – மின் விளக்குகள் gas discharge புழக்கத்திற்கு வந்தன. மிகக் குறைவான அழுத்தத்தில் இருக்கும் ஒரு வாயுவின் மீது, மிக அதிக வோல்டேஜ் மின்னழுத்தம் செலுத்தப்படும்போது அதிலுள்ள எலெக்ட்ரான்கள் ஆற்றல் உறிஞ்சி பின்னர் வெளிப்படுத்தும். அப்படி வெளிப்படும் ஒளியை உறிஞ்சு அலைக்கற்றை (absorption spectra) என்று அழைக்கிறார்கள். மஞ்சள் நிற ஒளி தரும் சோடியம் ஆவி விளக்கு, வெளிர் நீல ஒளி தரும் பாதரச ஆவி விளக்கு, விளையாட்டில் பகல் இரவு ஆட்டங்களில் மொத்த மைதானத்தையும் ஒளி வெள்ளத்தில் நனைக்கும் உலோக ஹாலைடு விளக்குகள். விளம்பரப் பலகைகளில் பயன்படுத்தப்படும் நியான் (neon) விளக்குகள் என எல்லாமே வாயு-மின் விளக்குகள்தான். அவை முழு திறனுடன் இயங்கத் தொடங்க சிறிது நேரம் ஆகும். ஆனால் அவற்றின் முந்தைய தலைமுறை உலோக இழை விளக்குகளை விட, ஆற்றலை ஒளியாய்  மாற்றுவதில்  இவை திறன் வாய்ந்தவை.

வீடுகளின் விளக்குகள் குண்டுபல்புகளில் இருந்து, ட்யூப் லைட்டுகள் என்று அழைக்கப்பட்ட ஒளிர் குழல் விளக்குகள் (flourescent lights) என்று முன்னேறின.  அடிப்படையில் அவையும் பாதரச ஆவி விளக்குகள்தாம். அவை வெளியேற்றும் ஆற்றல் குறைந்த புற ஊதா ஒளி பாஸ்பர் phosphor எனப்படும் பொருளின் மீது மோதி வெண்ணிற ஒளியாய் வெளிப்படும். இவ்வகை விளக்குகள் மின்சாரத்தை இன்னமும் சிக்கனமாய்ச் செலவிட்டன. அவற்றின் அபூர்வ சகோதர அப்பு வடிவமே CFL விளக்குகள். அதே தொழில்நுட்பம் ஆனால் அளவுகள் வேறு. வீடுகளை ஒளியால் நிறைத்ததில் இவற்றிற்குப் பெரும்பங்கு உண்டு. ஆனால் இவற்றின் ஆயுட்காலத்திற்குப் பின்பு பாதரசம் போன்ற நச்சுப்பொருட்கள் இருப்பதால் கவனமாகக் கையாள வேண்டிய பொருளாகிறது.

இந்தப் பத்தாயிரம் ஆண்டு ஒளிக்கான தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மிகச் சமீபமான சேர்க்கைதான் ஒளியுமிழிகள். Light Emitting Diode.  குறைகடத்திகளில் எலெக்ட்ரான் இல்லாத் துளைகள் (hole) கொண்ட p வகை குறைகடத்தியையும், எலெக்ட்ரான்கள் உபரியாய் இருக்கும் n வகை குறைகடத்தியையும் இணைத்தால் கிடைக்கும் PN ஜங்ஷன் இருமுனையம் (PN junction diode) ஏற்கெனவே மின்னணுச் சாதனங்களில் புழக்கத்தில் இருந்ததுதான்.

இருமுனையங்களில் மின்சாரம் சரியான திசையில்‌ பாய்கையில் எலெட்க்ரான்கள்‌ இல்லாத் துளைகளில் எலெக்ட்ரான்கள் போய் அமர்கையில் அவை ஆற்றலை வெளியிட்டன. பெரும்பாலும் அந்த ஆற்றல் வெப்பமாக அதாவது அகச்சிவப்பு அலைக்கற்றையாக வெளிப்பட்டது. அந்த வகை அகச்சிவப்பு ஒளியுமிழிகளே டிவி ஏசி ரிமோட்களில் பயன்படுகின்றன. நீங்கள் பட்டன் அழுத்துகையில் அகச்சிவப்பு அலைகள் குறிப்பிட்ட பாணியில் வெளிப்பட்டு அதனை உங்கள் டிவி புரிந்துகொண்டு தெய்வமகள் சீரியலுக்குத் தாவுகிறது‌. உங்கள் கைபேசியின் கேமராவை ஆன் செய்து அதன் முன்னர் ரிமோட் பட்டனை அழுத்தினால், ரிமோட்டின் முனையில் இருக்கும் ஒளியுமிழி ஒளிர்வதைப் பார்க்க முடியும். அரிச்சந்திரனுக்கு மட்டும் சந்திரமதியின் தாலி தெரிவதைப்போல அகச்சிவப்புக் கதிர்கள் கேமராக்களில் தெரியும். நம் கண்களுக்குத் தெரியாது.

ஒரு ஒளிபுகக்கூடிய ப்ளாஸ்டிக், இரு நீண்ட உலோகக் கம்பிகள் என்ற வடிவில்தான் ஒளியுமிழிகள் தம் வரலாற்றைத் தொடங்கின. பின்னர் ஒளியுமிழிகளில் இருந்த கம்பிகள் மறைந்து, நேரடியாக மின்னணுச் சுற்றுகளில், electronic circuirts பொருத்தக் கூடிய, தட்டையான வடிவுடைய பரப்புப் பொருந்தும் திரைகள் Surface Mounted Displays SMDs என அவற்றின் வடிவம் வந்து நிற்கிறது.

குறைகடத்திப் பொருட்களை சரியாகத் தேர்வு செய்வதன் மூலம் இந்த அகச்சிவப்பு அலைக்கற்றையை, புலனாகு நிறமாலை (visible spectrum) பக்கம் தள்ளினார்கள். உதாரணமாக சிகப்பு நிறத்துக்கு காலியம் பாஸ்பைட் (Gallium phospide GaP), காலியம் ஆர்சனிக் பாஸ்பைட் (Gallium Arsenic Phosphide GaAsP), அலுமினியம் காலியம் இண்டியம் பாஸ்பைட் (Aluminium Gallium Indium Phosphide AlGaInP) ஆகிய குறைகடத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். நீல நிறத்துக்கு காலியம் நைட்ரைடு (Gallium Nitride GaN), இண்டியம் காலியம் நைட்ரைடு (Indium Gallium Nitride InGaN) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

பங்களிப்பு செய்தவர்களின் பெயர்களைப் பட்டியலிட ஆரம்பித்தால் அவை தனியே ஒரு பக்கம் போகும் என்பதால் அதை விட்டுவிடுவோம். முதல் ஒளியுமிழிகள் ஒரு மாதிரி அசட்டுச் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தன. பின்னர் அசட்டு மஞ்சள் நிற ஒளியுமிழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேநேரம் பளிச்சென்ற சிகப்பி நிற ஒளியுமிழியும் வந்துவிட்டது. அதன்பின்னர் பச்சை நிற ஒளியுமிழி. கொஞ்சம் பழைய மின்னணுச்சாதனங்களில் பச்சை மற்றும் சிகப்பு ஒளியுமிழிகள் பயன்படுத்தியிருப்பார்கள்.

ஒளியுமிழிகள் இதுவரை வந்த விளக்குகள் எல்லாவற்றையும் விடத் திறன் அதிகம் கொண்டவை. விளக்குகளின் பிரகாசத்தை லுமென் (lumen) என்ற அலகால் அளப்பார்கள். ஒரு விளக்கின் திறன் ஒரு வாட் மின்சாரத்திற்கு எவ்வளவு லுமென் வெளிப்படும் (lumens per watt) என்ற கணக்கால் அளக்கப்படும். அந்த அளவு ஒளியுமிழிகளுக்கு அதிகம். ஒரு வாட் மின்சாரத்திற்கு அதிக வெளிச்சத்தை வெளியிடுகின்றன. ஆனால் பாருங்கள், சிகப்பு மற்றும் பச்சை விளக்குகளை, ஒளிமூலமாய்ப் பயன்படுத்த முடியாதே.

வெண்மை நிறத்தை உருவாக்கத் தேவையான, முதன்மை நிறங்கள் எனப்படும் சிகப்பு, பச்சை, நீலம் (primary colours Red Green Blue) ஆகிய மூன்றில்‌ நீல நிறம் குறைகிறதல்லவா? அந்த நீல நிற ஒளியுமிழி 1974ல் ஷூஜி நகமுரா shugi nakamura என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது‌. ஆனால் 1990ல் தான் அது கட்டுப்படியாகும் விலையில் தயாரிக்கப்பட்டுப் பொதுப்புழக்கத்திற்கு வந்தது. இது மிக முக்கியமான ஒரு முன்னேற்றம். இப்போது ஒளியுமிழிகளின் வெண்மை நிறம் சாத்தியம். இந்தக் கண்டுபிடிப்புக்காக நகமுராவிற்கு 2014ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது‌.

அதுவரை இயந்திரங்களில், கருவிகளில் செயல்பாட்டு நிலையைக் காட்டப் பயன்பட்டுக்கொண்டிருந்த ஒளியுமிழிகள், இப்போதுதான் விளக்குகளாய்ப் பயன்படக்கூடிய நிலைக்கு வந்தன.

சிகப்பு, பச்சை, நீலம் மூன்று ஒளியமிழிகளையும் மிக நெருக்கமாக வைத்து எரியவிடுவதன் மூலம் வெண்மை நிறத்தைப் பெற்றுவிட முடியும். ஒரு திரிதடையம் transistor மூலம் தனித்தனியே மூன்று ஒளியுமிழிகளின் பிரகாசத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எல்லா வண்ணங்களையும் பெற்றுவிட முடியும். இவையே பெரும்பான்மை ஒளியுமிழித் திரைகளுக்கு அடிப்படை.

ஆனால் விளக்குகளாகப் பயன்படக்கூடிய ஒளியுமிழிகளில் வெண்மை நிறத்தை, நீல நிற ஒளியுமிழியை வைத்து மட்டும் கொண்டு வருகிறார்கள். நீற நிற ஒளியுமிழியின் மேல் மஞ்சள்‌ நிறத்தில் இருக்கும் ஒரு பூச்சைப் பூசிவிடுவார்கள். நீல‌ நிற ஒளியை அது உள்வாங்கிப் பல வண்ணங்களாக வெளியேற்றும். அந்த பல வண்ணக் கலவை வெண்மையாக நம் கண்களுக்குத் தெரியும். ஒரு ஒளியுமிழி விளக்கைப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும்.

வெண்மை நிறம் சாத்தியமானவுடன் சந்தைகளில் ஒளியுமிழிகள் குவிய ஆரம்பித்தன. ஏற்கெனவே இருக்கும் மின்சார விளக்கு பொருத்தும் அமைப்புகளில் பயன்படக்கூடிய வடிவத்திலேயே கிடைக்க ஆரம்பித்தன. டார்ட் லைட்டுகள், கைபேசி கேமராவின் ஃப்ளாஷ் லைட்டுகள் என்று எல்லாம் ஒளியுமிழிகள்.

அடுத்ததாக அவை கால்பதித்த இடம் திரைகள். மொடா மொடாவாய் இருந்த பிக்சர் ட்யூப் டிவிக்கள் போய், தட்டைத் திரைகள் வந்தன. பின்னர் திரவப் படிகத் திரைகள் Liquid Crystal Display LCD வந்தன. திரவப் படிகத் திரைகளில், திரையின் கடைசி அடுக்காக பின்புல விளக்குகள் background light உண்டு. அவற்றின் மேலிருக்கும் திரவப்படிகங்களின் படிக அமைப்பை மாற்றி திரை ஒளியைக் கூட்டவோ குறைக்கவோ செய்வார்கள். மிக அருமையான அந்தத் தொழில்நுட்பத்தில் ஒரு சிக்கல் இருந்தது. திரையில் கருப்பு நிறம் வந்தால் பின்புல விளக்கை அணைத்து விட முடியாது. மாறாக திரவப் படிவங்களின் அமைப்பை மாற்றி ஒளியைப் புகாவண்ணம் மாற்ற வேண்டும். இது இரவு படுக்கப் போகுமுன் விளக்கை எரியவிட்டு அதைப் பெட்டிக்குள் அடைத்து வெளிச்சம் வராதவாறு பார்த்துக் கொள்வது போன்றது. இதனால் திரவப் படிகத் திரைகள் கொஞ்சம் ஆற்றல் வீணடிப்பவை.

ஆனால் ட்ரான்சிஸ்டர்கள் மூலம் துல்லியமாகக் கட்டுப்படுத்தப்படும் ஒளியுமிழித் திரைகள் இந்தச் சிக்கலைத்‌ தீர்த்தன. சிகப்பு, நீலம் மற்றும் பச்சை ஒளியுமிழிகளைப் பயன்படுத்தி எல்லா நிறங்களையும் கொண்டு வந்துவிடலாம். கருப்பு நிறம் என்றால் எல்லாவற்றையும் அணைத்துவிடலாம்‌. இதனால் படங்கள் திரையில் துல்லியமாகத் தெரிவதுடன் ஆற்றலும் மிச்சமாகும்.

அந்த ஒளியுழித் திரைகளின் நீட்சியாக ஆர்கானிக் ஒளியுமிழிகள் Organic LEDs or LEDs வந்தது. சில கரிமப் பொருட்களுக்கு நடுவே ஒளியுமிகளின் குறைகடத்திகளை வைத்துப் பயன்படுத்தினால் அவை இன்னும் திறனுடன் செயல்பட்டன. அவற்றில் பி.எம்.ஓ.எல்.ஈ‌‌.டி PMOLED Passive Matrix Organic Light Emitting Diode மற்றும் அமோலெட் AMOLED Active Matrix Organic Light Emitting Diode எல்லாம் வந்தது‌. இந்த அமோலெட் வார்த்தை சாம்சங் கைபேசி விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். ஒளியுமிழிகள்தான் இவையனைத்திற்கும் அடிப்படை. 

இந்தப் புரட்சிக்கு கொஞ்சம் உயிரியல் விலை இருக்கிறது.  டயர்னல் (diurnal) எனப்படும் பகலில் செயல்பட்டு இரவில் தூங்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த நமக்கு உறக்கம் விழிப்பு எல்லாமே சூரியனை அடிப்படையாகக் கொண்ட சர்கேடியச் சுழற்சி (circadian rhythm) மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது‌. நமக்கு உறக்கம் வரவேண்டுமென்றால் மெலட்டோனின் என்ற சமாசாரம் சுரக்க வேண்டும். அதுதான் கண்கள் சொருகி ஒருவிதமாய் வரவைக்கும். அந்த மெலட்டோனின் சுரப்பு, பகல் நேரச் சூரியனின் நீலம் அல்லது வெள்ளை ஒளியொல் குறைந்து, மசால் சூரியனின் அதிக அலைநீளம் கொண்ட மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு ஆகிய அலைநீளங்களால் தூண்டப்படும். சூரியன் மறைந்ததும் உடல் தூக்கத்திற்குத் தயாராகிவிடும். விளக்குகளின் சரித்திரத்தில் பெரும்பான்மைக் காலம் அவை மஞ்சள் வண்ணமாகத்தான் இருந்தன. ஆனால் இன்று பெரும்பாலும் கணினித் திரை, கைபேசித் திரை, வெண்ணிற ஒளி என எல்லாமும் ஒளியுமிழிகளால் நீல நிற ஒளி அதிகம் இருப்பதாய் இருக்கிறது. இதனால் உறக்கமின்மை அதன் விளைவாகப் பசியின்மை, சோர்வு இப்படியேபோய் மன அழுத்தன் வரை வரலாம் என்று எச்சரிக்கிறார்கள்‌.

ஆனால் திரையைப் பார்க்காமல், போராளிகள் பதிவு போட முடியாதே. அதற்குச் சில தீர்வுகள் இருக்கின்றன. இருட்டியபின்னர் உங்கள் கணினி அல்லது கைபேசியின் திரையை ஒரு மெல்லிய சிகப்பு நிறம் ஏறியதுபோல் தோன்றவைக்கும் செயலிகள் இருக்கின்றன. திரைப்படம் பார்ப்பவர்கள், நிறங்களைத் துல்லியமாய்ப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வடிவமைப்பாளர்கள் இவர்களைத் தவிர பேஸ்புக், வாட்ஸாப் களமாடல்கள் புத்தக வாசிப்பு போன்ற கெட்ட பழக்கங்கள் இருக்கும் நபர்கள் இந்தச் செயலிகளைப் பயன்படுத்தலாம்.

ஆண்டிராய்ட் கைபேசிகளுக்கு twilight என்று ஒரு இலவசச் செயலி இருக்கிறது‌. விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு f.lux என்ற செயலி இருக்கிறது. இரண்டு செயலிகளுமே இரவு நேரத்தில் தானாகவே திரையில் இந்த வண்ண மாற்றம் கொண்டுவரும் வசதியோடு உள்ளவை‌. இரண்டு நாட்களில் கண்கள் பழகிவிடும். கண்களில் எரிச்சல் குறையும், தூக்கம் வருதலில் முன்னேற்றம் இருக்கும். பயன்படுத்திப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

திரைமயமாகும் தொழில்நுட்ப வாழ்க்கையில் இவற்றைச் செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.

Posted on Leave a comment

ஒரு புதிர் போடுவோம் – ஹாலாஸ்யன்

பூமியில் பாறைக்கடியில் தேங்கி நிற்கிற இதை குழாய்கள் போட்டு மேற்பரப்புக்குக் கொண்டுவந்து சுத்தப்படுத்துகிறார்கள். மிக முக்கியமான மருத்துவ, தொழிற்சாலை பயன்பாடுகள் இதற்கு உண்டு. உலக நாடுகள் முக்கியமாக அமெரிக்கா பல வருடங்கள் பயன்பாட்டுக்காக இதைத் தேக்கிவைத்திருக்கிறது. இதன் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் கத்தார் இருக்கிறது. இரானிய அடிப்படைவாதத்தை கத்தார் ஆதரிப்பதால் பிற நாடுகள் கடுப்பாகி கத்தாரில் இருந்து இந்தப் பொருள் ஏற்றுமதி செய்யப்படும் வழிகளை அடைத்திருக்கின்றன. அந்தப் பொருள் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

கச்சா எண்ணெய் என்று பதில் சொல்லுவீர்கள் என்றால் தப்பு. உண்மையில் இதற்கான பதிலை அவ்வளவு எளிதில் ஊகிக்க முடியாது. சரியான பதில் ஹீலியம்.

ஹீலியம். மூலக அட்டவணையில் இருக்கும் இரண்டாவது தனிமம். அணுக்கருவுக்குள் இரண்டு ப்ரோட்டான்கள், இரண்டு ந்யூட்ரான்கள், கருவைச்சுற்றி இரண்டு எலெக்ட்ரான்கள் இருக்கும் ஒரு தனிமம். தன்னளவில் எலெக்ட்ரான் எண்ணிக்கையில் நிறைவு பெற்றுவிட்டதால் வேதியியல் லௌகீக வாழ்வையே வேண்டாமென்று எதனோடும் வினைபுரியாமல் இருக்கும் இனர்ட் காஸ் என்றழைக்கப்படும் மந்த வாயுக்கள் தொகுதியில் சேர்ந்துவிட்டது (காதைக் கொடுங்கள். அப்படி லௌகீக வாயுவைத் துறந்ததாக நம்பப்படுகிற வாயுக்களிலேயே ஸெனான் (Xenon), க்ரிப்டான் (Krypton) போன்றவை அரிதாக சேர்மங்கள் உருவாக்குவதுண்டு. அது வேறு கதை.)

ஹீலியம் ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு. மேம்போக்காய் கொஞ்சம் சப்பென்று இருந்தாலும் அதன் பண்புகள் அதைத் தனிமைப்படுத்திக் காட்டுபவை. ஹீலியம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது பூமியில் அல்ல. சூரியனில். நிறமாலையியல் spectroscopy மூலம் சூரியனின் நிறமாலையை அலசுகையில் மஞ்சள் நிறத்தில் ஒரு தனி அலைநீளம் தென்படுகிறது. பூமியில் அதுபோன்ற நிறமாலை கொண்ட தனிமம் அதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னொரு கொசுறுத் தகவல் என்னவெனில் சூரியனின் இந்த ஹீலியமின் மஞ்சள் நிற அலைமாலையை முதலில் கண்டுபிடித்தது இந்தியாவில். 1868ல் ஜூல்ஸ் ஜான்சென் (Jules Janssen) என்ற ஃப்ரெஞ்சு வானியல் அறிஞர், குண்டூர் மாவட்டத்தில் இருந்து ஒரு முழு சூரிய கிரகணத்தன்று கண்டுபிடித்தார். அப்போது சூரியனில் இருக்கிற தனிமம் என்ற அர்த்தத்தில்தான் ஹீலியம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது (ஹீலியாஸ் (Helios) – சூரியன்). அதன்பிறகு சர் வில்லியம் ராம்சே யுரேனியம் தனிமத்தை ஆராய்கையில் கிடைத்த வாயுக்களில் ஒன்றின் நிறமாலை சூரியனில் காணப்பட்ட அந்த நிறமாலையுடன் ஒத்துப்போவதை கவனித்தபோதுதான், பூமியிலும் ஹீலியம் இருக்கிறது என்று தெரிய வருகிறது.

இத்தனைக்கும் ஹீலியம் நம் பிரபஞ்சத்தில் அதிகமாய்க் கிடைக்கக்கூடிய தனிமங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எல்லா விண்மீன்களின் உள்ளேயும் மிக எளிய தனிமமான ஹைட்ரஜன் அதன் தூரத்து உறவான ட்ரீஷியம் tritium என்னும் ஐசோடோப்புடன் சேர்ந்து ஹீலியத்தையே உருவாக்குகின்றன. இந்த அணுக்கருப் பிணைப்பு வினைதான் விண்மீன்களின் வெப்பத்துக்கும் வெளிச்சத்துக்கும் காரணம். இரவில் புள்ளியாய்த் தெரியும் விண்மீன்களின் வெளிச்சம், ஏன் பகல் முழுக்கக் காய்கின்ற சூரியனின் வெளிச்சம் அனைத்துமே ஹீலியம் தொடர்ச்சியாய் உருவாவதன் உபரிப்பொருட்கள்தான். ஆனால் பூமியில் ஹீலியம் அவ்வளவு எளிதில் தட்டுப்படாது. பூமியில் அதன் செறிவு சுமார் பத்து கோடி அணுக்களுக்கு ஐந்து ஹீலியம் அணுக்கள். காரணம் இருப்பதிலேயே அடர்த்தி குறைவான வாயுக்களாதலால் பூமியில் காற்று மண்டலத்தின் மேற்பரப்புக்கு ஓடிவிடும். மேலும் அதன் மீள் திசைவேகம் (Escape Velocity) எனப்படும் பூமியின் ஈர்ப்பை விட்டு விடுபடத் தேவையான வேகம் மிக மிகக் குறைவு. அதனால் ஜாலியாக மிதந்து விண்வெளிக்குப் போய்விடும் (நமக்கு மீள்திசை வேகம் நொடிக்கு 11.2 கி.மீ. – கவனிக்க, நொடிக்கு). அதனால்தான் இங்கு அவ்வளவு அரிதாய்க் கிடைக்கிறது. காற்றில் இருந்து ஹீலியம் எடுப்பதென்பது வெண்கலப் பூட்டை உடைத்து விளக்குமாறு திருடிய கதை. நமக்கு ஹீலியம் கிடைப்பது கதிரியக்கத்தின் காரணமாகத்தான், பூமியில் இருக்கும் யுரேனியம் ஆல்ஃபா துகள்களை வெளிவிடுகிறது. ஆல்ஃபா துகள்கள் என்பவை ஹீலியம் அணுக்கருதான். அது போகிற போக்கில் இரண்டு எலெட்க்ரான்களை எங்கிருந்தாவது தூக்கிப் போட்டுக்கொண்டு ஹீலியம் வாயுவாய் மாறிவிடும். பூமிக்கடியில் இப்படி உருவாகும் ஹீலியம் நிலத்தின் வழியே கசிந்து வழக்கம்போல பூமியை விட்டுத் தப்பிவிடும். ஆனால் சில இடங்களில் பாறைக்கடியில் தேங்கி காற்றுப்பொட்டலமாக இருக்கும். அந்தப் பாறைக்கடியில்தான் கச்சா எண்ணெயும் கிடைக்கிறது. கச்சா எண்ணெய்க்கு மேல் வாயு நிலையில் தேங்கி நிற்கும் இயற்கை எரிவாயுவுடன் ஹீலியமும் இருக்கும். அது 0.2-0.3% முதல் சில இடங்களில் 1-1.5 சதவிகிதம் கூட அமெரிக்கா. அதிகபட்சம் 3% இருக்கலாம். எரிவாயு எடுக்கும் நிறுவனங்கள் தொடக்கத்தில் இதை என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னர் உலகம் முழுவதும் ஹீலியம் தேவைப்படுவதால் தனியே சுத்திகரித்து விற்க ஆரம்பித்தார்கள். கத்தாரில் ஹீலியம் உற்பத்தி செய்வது இப்படித்தான்.

சரி ஹீலியத்தால் என்ன பிரயோஜனம் என்று கேட்கிறீர்களா? நேரடிப் பிரயோஜனம் என்பது பலூன்களில் நிரப்புதல். ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள் தன்னாலே மேலே போகும். ஹிண்டன்பர்க் வெடிப்பு (Hindenburg disaster) என்று அழைக்கப்படும் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட ராட்சத பலூன் வெடித்துத் தீக்கிரையானபின் பலூன்களில் ஹைட்ரஜனை விட்டுவிட்டு ஹீலியத்தை நம்ப ஆரம்பித்தார்கள்.

திரவ ஹீலியம் ஒரு மிகச்சிறந்த வெப்பக்கடத்தி. அதனால் மீகடத்தி காந்தங்களைக் (Superconducting Magnets) குளிர்விக்க திரவ ஹீலியத்தைப் பயன்படுத்துகிறார்கள். மீகடத்திகள் அந்த அதிகுளிர் வெப்பநிலையில்தான் சரிவர இயங்கும். அந்த காந்தங்களை நாம் பல இடங்களில் பயன்படுத்துகிறோம். முக்கியமாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் இயந்திரங்களில். அதில் பயன்படுத்தப்படும் காந்தங்கள் திரவ ஹீலியத்தால் குளிர்விக்கப்படுகின்றன. ஆக மருத்துவத் துறையின் ஒரு முக்கிய சோதனைக் கருவி ஹீலியத்தை நம்பியிருக்கிறது. கடவுள் துகளைக் கண்டுபிடிக்க உதவிய சோதனைகள் நிகழ்த்தப்பட்ட Large Hadron Collider போன்ற ராட்சத ஆய்வுக் கருவிகளிலும் ஹீலியம் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.

பற்றவைப்புகளில் (Welding) ஹீலியம் ஒரு தடுப்பு வாயுவாகப் பயன்படுகிறது. மேலும் மிகச் சிறிய எதனோடும் வினைபுரியாத அணு என்பதால் முக்கியமான உலோக பாகங்கள் உற்பத்தியில் எங்கேனும் விரிசலோ கசிவோ இருக்கிறதா எனச் சோதிக்க உதவுகிறது.

நீர்மூழ்குபவர்களின் ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் சுத்தமான ஆக்ஸிஜன் மட்டும் இருக்காது. அதற்குள்ளே, நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கிறதோ அதே சதவிகிதம் ஆக்ஸிஜனும் மீதி ஹீலியமும் இருக்கும். இது அவர்கள் சுவாசிக்கும் காற்று வேகமாக எளிதாக நுரையீரலை அடைய உதவுகிறது. மருத்துவத்தில் சில சுவாசக் கோளாறுகளுக்கு ஹீலியம் ஆக்ஸிஜன் கலவையை சுவாசிக்க வைக்கிறார்கள்.

ராக்கெட் எரிபொருட்களான ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனைக் குளிர்வித்துத் திரவமாக்க திரவ ஹீலியம் அவசியம்.

உண்மையில் மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி எனப் பல துறைகளில் சில சாதனங்களுக்கு ஹீலியம் அத்தியாவசியம். அதன் உற்பத்தி இயற்கை எரிவாயு அதிகமாகக் கிடைக்கும் நாடுகளை நம்பி இருக்கிறது. கிட்டதட்ட கச்சா எண்ணெய்யைப்போல ஒரு முக்கிய வளம் ஹீலியம். ஆனால் பூமியில் தொடர்ச்சியாக யுரேனியத்தின் கதிரியக்கத்தால் ஹீலியம் உற்பத்தி ஆகிக் கொண்டுதான் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்கா ஹீலியத்தை போருக்குத் தேவையான பொருள் என ட்க்ஸாஸ் நிலத்தடியில் தேக்கிவைக்க ஆரம்பித்தது. 1960களில் அது உலகின் மிக முக்கியமான ஹீலியம் சேமிக்கும் இடம். போரெல்லாம் முடிந்து ஹீலியத்தின் பயன்பாடுகள் பிற துறைகளில் தெரிய வரவும் எக்கச்சக்கத்துக்கு எதிர்காலத் தேவை இருக்கும் போலிருக்கிறது என்று அரசு காசு கூடக் கொடுத்து ஹீலியத்தை வாங்கி நிலத்தடியில் தேக்கி வைத்தது. ஆனால் அவ்வளவு பெரிதாக ஒன்றும் தேவை அதிகரிக்காமல் போகவே பல ஆண்டுகளுக்குத் தேவையான ஹீலியம் தேக்கத்தில் கிடந்தது. ஒரு அளவில் அந்த ஹீலியம் சேமிப்புக் கிடங்கு நஷ்டத்தில் ஓட ஆரம்பிக்கவும், 1995ல் அமெரிக்க அரசு ஹீலியத்தையெல்லாம் விற்கச் சொல்லிவிட்டு 2021ல் சேமிப்புக் கிடங்கை மூடச்சொல்லி சட்டமியற்றியது. அங்கு சேமிக்கப்பட்டது கொஞ்ச நஞ்ச ஹீலியம் அல்ல. 100 கோடி கன மீட்டர் ஹீலியம்.

அந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் சேமிப்புக் கிடங்கில் இருந்து ஹீலியம் சந்தைக்கு வர ஆரம்பித்தது. உலக ஹீலியம் பயன்பாட்டில் 20% அந்தக் கிடங்கில் இருந்தே கிடைத்துக்கொண்டிருந்தது. மீதம் அமெரிக்க மற்றும் கத்தார் எண்ணெய் வயல்களில் இருந்து கிடைத்து வந்தது. மலிவான ஹீலியம் கிடைப்பதால் பூமியில் வேறு எங்கு ஹீலியம் கிடைக்கும் என்று தேடும் பணிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.

மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள அரசியல் நெருக்கங்கள் காரணமாகவும், முழுதும் விற்றதோ இல்லையோ, 2021ல் அமெரிக்காவில் உள்ள ஹீலியம் சேமிப்புக் கிடங்கை மூடச்சொல்லி சட்டமியற்றப்படுவதாலும் ஹீலியம் பயன்படும் துறைகள் 2015ல் இருந்து லேசான சிரமங்களுக்கு ஆளாயின.

கத்தார் ஈரானிய அடிப்படைவாதத்திற்குத் துணை போவதால் ஹீலியம் டேங்கர்கள் வெளியேறும் சாலைகள் முடக்கப்படவும் உலகளாவிய ஆய்வு நிலையங்கள் அழுத்தத்துக்கு உள்ளாயின.

‘போச்சு… ஹீலியம் பலூன்களை இனி ம்யூஸியத்தில்தான் பார்க்க வேண்டும்’ என்றெல்லாம் கட்டுரைகள் எழுதப்பட்ட நிலையில் அந்த அளவுக்கெல்லாம் இல்லை. ஆனால் நிலைமை இப்படியே போவது நல்லதல்ல என துறைசார் வல்லுநர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

அதிர்ஷ்டவசமாக, டான்ஸானியாவில் பூமிக்கடியில் ஒரு பெரும் எரிவாயுப் பொட்டலம் சிக்கியிருக்கிறது. அதில் 10% வரை ஹீலியம் இருக்கிறதாம். அடியில் இருக்கும் எரிமலைகளின் சூட்டில் ஹீலியம் பொதிந்திருக்கும் பாறைகள் ஹீலியத்தை வெளியிட்டு அது இயற்கை எரிவாயுவுடன் பொதிந்திருக்கிறது. அங்கு மட்டும் 154 கன மீட்டர் ஹீலியம் இருக்கிறதாம்.

இன்னும் அரை நூற்றாண்டு வரை கவலையில்லை. ஆனாலும் இதே மாதிரி அரை நூற்றாண்டு காலம் ஓட்டியபின் வேறு எங்கும் கிடைக்காதெனில் மறுபடியும் சிக்கல் வரத்தானே செய்யும். அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது. சீனா நிலாவில் இருக்கும் ஹீலியம்-3 என்கிற ஹீலியத்தின் ஐசோடோப்பு (Isotope – ஒரே ப்ரோட்டான் எண்ணிக்கை, வேறுபட்ட ந்யூட்ரான் எண்ணிக்கை கொண்ட தனிமம்) ஒன்றை எடுக்கத் திட்டமிடுகிறது. அது இப்போதே சாத்தியமில்லை என்றாலும் அது எதிர்காலத்துக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறது.

ஆனால் நாம் சிலவற்றை முன்னேற்பாடாகச் செய்ய வேண்டியிருக்கிறது. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் ஹீலியத்தை வெளியே காற்றில் விடாமல் முடிந்தவரை அதை திரும்பப் பயன்படுத்த முயல வேண்டும். அமெரிக்க ஆய்வகங்கள் பயன்பாடு முடிந்ததும் ஹீலியத்தை திரும்பப் பிடித்துச் சுத்திகரித்து மறுபயன்பாட்டைச் சாத்தியமாக்குகிறார்கள். அதற்கான முதலீடு அதிகமாக இருந்தாலும் நாள்கணக்கில் அது லாபகரமானது. ஹீலியம் கொள்முதலை குறிப்பிடத்தகுந்த அளவு குறைக்கும்.

நம்மிடத்தில் ஹீலியம் கிடைக்கும் இடம் எதுவும் கிடையாது. ஹீலியத்தை நாம் கொள்முதல் செய்ய வேண்டியிருப்பதால் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், இஸ்ரோ போன்ற விண்வெளி ஆய்வு மையங்கள் ஹீலியம் பயன்பாட்டுக்கு மாற்றாக வேறு பொருட்களிலும் ஹீலியம் மறுபயன்பாட்டுச் சாத்தியங்களைத் தேட வேண்டியிருக்கிறது. விழித்துக்கொள்வோம்.

Posted on Leave a comment

மின்சாரமும் ஜடத்துவமும் – ஹாலாஸ்யன்

மாலை ஆறு மணிக்கு அலுவலகம் விட்டுக் கிளம்பி, போக்குவரத்து நெரிசலில் ஆய்ந்து ஓய்ந்து, சாலையில் நாலுபேரிடம் திட்டு வாங்கி, நாலுபேரின் சந்ததியைத் தோண்டி எடுத்துத் திட்டி, நசநசப்பில் வீட்டுக்கு வந்து ஏஸியைத் தட்டி விடுகிறீர்கள். முகம் கழுவப் போனால் குழாயில் தண்ணீர் சன்னமாக வருகிறது. சமாளித்து வெளியே வந்து மோட்டாரைப் போட்டுவிட்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்து அமர்கிறீர்கள். நீங்கள் ஒருவர் மட்டும் செயல்படாமல் இருந்த ஐந்தாறு மின் உபகரணங்களை ஓட வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இருக்கின்ற அடுக்குமாடி வளாகத்தில் உங்களைப் போலவே ஏஸி, மோட்டார், ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி என எல்லாவற்றையும் தொடக்கியிருப்பார்கள்தானே. உங்கள் குடியிருப்பைப் போலவே எத்தனை குடியிருப்புகள்? எவ்வளவு மக்கள்? அரை மணி நேர இடைவெளியில் மின்சாரப் பயன்பாடு சட்டென உச்சத்தைத் தொடும். இதைப்போலவே காலையில் கிளம்புகையிலும் எல்லா உபகரணங்களும் ஓடும். மதியம் ஒரு நான்கு மணி நேரம் குடியிருப்புகளின் மின்சாரத் தேவை கொஞ்சம் குறையும். இதையெல்லாம் யார் சரிசெய்கிறார்கள்? யார் நிர்வகிக்கிறார்கள்?

மின்பகிர்மான அமைப்பு (electricity supply grid) என்ற ஒரு அமைப்பு தொடர்ச்சியாக மின் உற்பத்தி, மின்தேவை இரண்டுக்குமான வேறுபாட்டைத் தொடர்ந்து கவனித்து உற்பத்தியைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும். மின் உற்பத்திக்கு நாம் ஆற்றல் மூலங்களை நம்பியிருக்கிறோம்.

பள்ளிப்பாடங்களைக் கொஞ்சம் நினைவு கூர்ந்தால், எட்டாங்கிளாஸ் பாடத்தின்படி ஆற்றல் இரண்டு வகைப்படும். மரபு சார் ஆற்றல் (conventional), மரபு சாரா ஆற்றல் (non-conventional). இன்றைய தேதிக்கு பெரும்பான்மை மின் உற்பத்தி நமக்கு மரபு சார் ஆற்றல் மூலமாகக் கிடைக்கிறது. அனல், புனல், அணு இதைத்தவிர இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் நமது பெரும்பான்மை ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. காற்றாலைகள், சூரிய சக்தி மூலம் மின்சாரம், புவிவெப்ப ஆற்றல் (geothermal) ஆகியவை மரபு சாரா ஆற்றல் மூலங்கள்.

இந்த மரபு சார் ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதன் அடிப்படை ஒன்றுதான். அது ராட்சத டர்பைன்களை இயக்குதல். அணுக்கருச் சிதைவின் மூலம் கிடைக்கும் வெப்பம், நிலக்கரி, எரிவாயு ஆகியற்றை எரித்துக் கிடைக்கும் வெப்பம் இவற்றைக் கொண்டு நீரை நீராவியாக்கி அதனைக் கொண்டு ராட்சத டர்பைன்களை இயக்குவார்கள். புனல் மின்சாரத்தின் நீராவிக்குப் பதிலாக நீரே டர்பைன்களைச் சுழற்றும். அந்த டர்பைன்கள் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். அவற்றைச் சுழற்ற ஆரம்பிப்பது மிகக் கடினம் என்றாலும், அந்த ராட்சத அளவுகளில் நமக்கு ஒரு நன்மை இருக்கிறது. அதுதான் ஜடத்துவம் அல்லது நிலைமம். ஆங்கிலத்தில் inertia. மூன்றாம் விதி அளவுக்கு நம்மிடையே அதிகம் பிரபலமாகாத ஐன்ஸ்டைனின் முதல் விதி. இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருள் இன்னொரு விசை வந்து நிறுத்தும் வரை இயங்கிக்கொண்டே இருக்கும். அதனால் இந்த மின் நிலையங்கள் ஏதேனும் பெரிய சிக்கலால் முடங்கினாலோ, உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்துபோய் மின்சாரம் தடைப்பட்டாலோ டர்பைன்கள் நின்று விடாது. அதன் பெரும் நிறையால், மாதக்கணக்கில் வருடக் கணக்கில் சுழன்றுகொண்டிருந்த காரணத்தால், சுற்றிக்கொண்டிருந்த வேகத்தில் சற்று நேரம் சுற்றிவிட்டுத்தான் அடங்கும். இதற்கு மின் பகிர்மான அமைப்பின் ஜடத்துவம் system inertia என்று பெயர். இப்படி ஒன்று இருப்பதால்தான் அந்த நேரத்தைப் பயன்படுத்தி மற்றொரு மின் நிலையத்தை முடுக்கிவிட்டு தேவையை ஈடுகட்டுவார்கள்.
இது மின்நிலையம் செயலிழந்தால் மட்டுமல்ல, நாம் தொடக்கத்தில் பார்த்த காலை மாலை அதிகத் தேவைகளை ஈடுகட்ட, கூடுதல் மின்நிலையங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி அளிக்க வேண்டிவரும். இந்த சிஸ்டம் இனர்ஷியாதான் நமக்குச் சமாளிக்கும் நேரத்தைத் தருகிறது. இதனை மின் பகிர்மான வட்ட எதிர்வினை நேரம் grid response time என்கிறார்கள். (இங்கு நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. திடீர்த் தேவைகளைச் சமாளிக்க வெகு சில மின்நிலையங்களைத் தவிர மீதி அனைத்தையும் அதன் முழுத் திறனோடு இயங்கச் செய்ய மாட்டார்கள். இதுபற்றி பின்னால் விரிவாய்ப் பார்ப்போம்.)

மேலும் நமக்கு வரும் மின்சாரத்திற்கு, மின்னழுத்தம் (voltage), மின்னோட்டம் (current) என்ற இரண்டையும் தவிர அதிர்வெண் என்று ஒரு அளவும் இருக்கிறது. ஒரு நொடிக்கு எத்தனை அலைச்சுழல்கள் என்பதுதான் அந்த அதிர்வெண். பெரும்பான்மை நாடுகளில் இது 60 ஹெர்ட்ஸ். வினாடிக்கு அறுபது அலைச்சுழல்கள். அமெரிக்கா வழக்கம்போல விதிவிலக்கு, 50 ஹெர்ட்ஸ். இந்த அதிர்வெண் சரியில்லையெனில் நமது பெரும்பான்மை மின் உபகரணங்கள் சரிவர இயங்காது. முக்கியமாக விளக்குகள். சரியான அதிர்வெண் இல்லாமல் போனால் மினுக்கி மினுக்கி எரியும். இந்த அதிர்வெண் ஒழுங்கிற்கும் அந்த மின்பகிர்மான வட்டம் முழுதும் இருக்கும் மின்நிலையங்களின் ஜடத்துவம் முக்கியம். இத்தனை நாள் இதெல்லாம் பெரிய ராட்சத டர்பைன்களால் ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்தது. நாம் மரபு சாரா ஆற்றலைப் பயன்படுத்த ஆரம்பித்தது முதல் இதில் சில சிக்கல்கள்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையில் நகரும் பாகங்களே கிடையாது. அதனால் அதில் ஜடத்துவம் கிடையவே கிடையாது. காற்றாலை மின்சார உற்பத்தி முறையில், காற்றாலைகளுக்கு ராட்சத இறக்கைகள் இருந்தாலும் ஒரு டர்பைன் தரும் ஜடத்துவத்தை அவற்றால் தந்துவிட முடியாது. மேலும் ஒவ்வொரு காற்றாலையும் ஒவ்வொரு வேகத்தில் சுழலக் கூடும். சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி இரண்டும் நிச்சயமில்லா அடிப்படைதான். மேகம் மூடினாலோ அல்லது காற்று நின்றாலே உற்பத்தி நின்றுவிடும்.

மரபு சாரா ஆற்றலை நாம் மின்பகிர்மான வட்டத்தில் இணைக்கையில் இந்த நிச்சமின்மையை நிச்சயமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டி வரும். எவ்வளவுக்கெவ்வளவு மரபு சாரா மின்சாரம் நோக்கி நகர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் நிச்சயமின்மையையையும் ஏற்கிறோம் என்பது தெளிவு. தீர்வுகள் மின் உற்பத்தி அல்லது மின் பயன்பாடு என்று இருமுனைகளில் இருந்தும் செய்யலாம். மின் பயன்பாடு என்பது நாமெல்லாம் இப்போது இருக்கிற அதிர்வெண் சார்ந்து இயங்கும் மின் உபகரணங்களைக் கடாசிவிட்டு, அதிர்வெண் சாரா உபகரணங்களாகப் பயன்படுத்தலாம். இது நடைமுறையில் சாத்தியமற்றது. காரணம் 60 ஹெர்ட்ஸுக்குப் பழகித் தொலைத்துவிட்டோம். மின் உற்பத்தி முனையில் இது கொஞ்சம் எளிது. (நம் கண்ணோட்டத்தில் இருந்துதான். மின் நிலையப் பொறியாளரிடம் கேட்டால் மாற்றிச் சொல்ல வாய்ப்பிருக்கிறது).

எதற்கும் இருக்கட்டும் என்று சில மின்நிலையங்களை தேமேயென்று சும்மா ஓடச்செய்யலாம். தேவைப்படுகையில் மின்சாரம் தயாரித்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் பாருங்கள், இந்த அனல், அணு, புனல் மின் நிலையங்கள் கொஞ்சம் மந்தம். “ந்தா வரேன்” என்று மெல்ல மந்தமாய் வேகமெடுப்பதற்குள் இங்கு எதிர்வினை நேரம் முடிந்தே போயிருக்கும். இயற்கை எரிவாயு மின் நிலையங்கள் நம் அவசரத்துக்குக் தோதானவை. ஆனால் கற்பனை செய்து பாருங்கள். எந்த இயற்கை அழிவில் இருந்து பாதுகாக்க நாம் சூரிய, காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு வருகிறோமோ, அந்த சூரிய காற்றாலை மின் உற்பத்தியில் பின்னடைவை அதே அழிவு ஏற்படுத்தும் அமைப்புகள்தாம் ஈடுகட்டுகின்றன. இதற்கு முன்னராவது அவை முழு நேரமும் மின் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தன. இப்போது எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்று வெற்றாய் ஓடவைக்கப்பட வேண்டும். மேலும் திடீர் திடீரென இயங்கும் வேகத்தை மாற்றுதல் என்பது பராமரிப்புச் செலவு எனும் தேரை இழுத்துத் தெருவில் விட்டுவிடும். கொஞ்சம் ஒதுங்கி ஒரு சின்ன கணக்கு பார்ப்போம்.

படத்தில் பார்ப்பது வருட வாரியாக அமெரிக்கா கலிஃபோர்னியாவின் , சராசரியாக ஒரு நாளின் மின்தேவை (மெகாவாட் அளவுகளில்). மேலே இருக்கும் படத்தில் காலை 6-9, மாலை 6-9 ஒட்டகத் திமில் போல இருக்கிறதா? இந்த வரைபடத்திற்கு ஒட்டக வளைவு (camel curve) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இடையில் இருக்கும் பள்ளம் மின் பயன்பாடு குறைவதையும் சூரிய மின்சாரம் முழு அளவில் இயங்குவதால் மைய மின் உற்பத்தியில் தேவை குறைவையும் சுட்டுகிறது. அப்படியே கீழ் படத்திற்குப் போகலாம். அடுத்தடுத்த படங்களில் மரபு சாரா மின்சாரம் குறிப்பாக சூரிய மின்சாரம் அதிகளவில் நிறுவப்பட்டு, நாளின் மத்தியில் மைய மின் உற்பத்தில் இருந்து குறைந்த அளவே தேவைப்படுகிறது. நல்ல விஷயம் தானே என்று நினைக்கலாம். காலை, உச்சபட்சப் பயன்பாட்டில் இருந்து குறுகிய நேரத்தில் கடனுக்கே என்று இயக்கப்படும் நிலைக்குச் செல்லும் மின் நிலையங்கள், மாலை அதிக மின் தேவைக்காக அதே குறுகிய நேரத்தில் முழு திறனுடன் செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளபடுகின்றன. இது மின் நிலையங்களில் தேய்மானத்தை ஏற்படுத்துகிறது. அதுதான் நடுவில் ஒரு பெரிய பள்ளம். இதனை வாத்து வளைவு (duck curve) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இன்னும் அதிகம் மரபு சாரா ஆற்றல் உள்ளே சேர்க்கப்படுகையில் சூரிய ஒளியால் தேவைக்கு மேலே மின்சாரம் உருவாகும். மேலை நாடுகளில் இது சார்ந்து தொடர்ச்சியாய் விவாதிக்கிறார்கள். இங்கும் அந்த நிலை வரத்தான் போகிறது. ஆனால் அப்போதும் நாம் இப்போது இருக்கிற தொழில்நுட்பம் போல சில ராட்சத டர்பைன்களை சும்மா ஓடவிடப்போகிறோமா? அல்லது மாற்றுகளை நோக்கி நகர்ந்து தயாராக இருக்கப்போகிறோமா?

மாற்றுகள் எல்லாமே தற்போதைக்கு பிரசவ வார்டில் கடைசி மாத செக்கப்பிற்குத்தான் போயிருக்கின்றன. தற்போதைக்கு காற்றாலைகளில் இந்த ஜடத்துவத்தைக் கொண்டு வரும் முயற்சி தொடங்கி இருக்கிறது. ராட்சத டர்பைன்கள் சுழன்று தருகிற ஜடத்துவத்தை, செயற்கையாக மின்னணு சாதனங்கள், குறிப்பாக மாறுதிசையாக்கிகள் (inverters) கொண்டு செய்யும் இதற்கு செயற்கை ஜடத்துவம் (synthetic inertia) என்று பெயர். அந்த வசதி கொண்ட காற்றாலைகள் சிக்கலான நேரத்தில் அதிர்வெண் சரிவதைத் தாங்கிப் பிடிக்க முயல்கின்றன. ஆம் ‘முயல்கின்றன’தான். சரிசெய்ய நாம்தான் வேறு இடங்களில் இருந்து மின்சாரம் கொணர்ந்தாக வேண்டும். 2016ன் இறுதியில் GE போன்ற இந்தத் துறை ஜாம்பவான்கள் இந்த செயற்கை ஜடத்துவத்தில் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இதைத் தவிர காற்றாலைகளில் தயாராகும் உபரி மின்சாரத்தைக் கொண்டு மலைக்குகைகளில் அல்லது மலையைக் குடைந்து செய்யப்படும் குகைகளில், ராட்சத கம்ப்ரஸர்கள் மூலம் காற்றை அழுத்தி வைத்து தேவைப்படுகையில் அழுத்தப்பட்ட காற்றில் இருக்கும் ஆற்றலை மீட்டு எடுத்துப் பயன்படுத்துவது. நம்மூரில் அது எந்தளவு தோதுப்படும் என்று தெரியவில்லை. குன்றெல்லாம் கோயிலோ, இயேசு அழைக்கிறார் ஜெபவீடுகளோ இருக்கின்றன. அப்படி இல்லையென்றாலும் குவாரிக்காரர்கள் இருக்கிறார்கள். இது கொஞ்சம் கடினமாகத் தெரிந்தால் கொஞ்சம் எளிமையாய் ஒரு சமாசாரம் இருக்கிறது. அதே உபரி மின்சாரம் கொண்டு, நீரை ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பிரித்து தனித்தனியே சேமித்துவைத்து, தேவைப்படுகையில் இரண்டையும் மீண்டும் சேரவிட்டு ஆற்றல் பெறுவது. கிட்டத்தட்ட பேட்டரிதான். ஆனால் கிடைப்பது நீர் என்பதால் சூழலுக்குப் ‘பெரிய’ அளவில் பாதிப்பில்லை.

சூரிய சக்திக்கும் இதையே செய்யலாம். சூரியனின் சூட்டையும் வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்றும் யோசிக்கிறார்கள். வெப்பத்தைப் பாறையிலே தேக்கும் திட்டம்கூட இருக்கிறது. இரவானால் சேமித்து வைத்த சூட்டைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது.

செயல்முறையில் இப்படி முயன்று கொண்டிருக்க, கோட்பாட்டு ரீதியாக இன்னமும் துல்லியமான காற்றின் நகர்வு, மேகங்களின் நகர்வு, பருவகாலங்களின் மாறுதல் பற்றிய ஆய்வுகளும் முக்கியம். அவை, அடுத்த சில மணி நேரங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதற்கான கணித மாதிரிகள் மூலம் திட்டமிட உதவுகின்றன. மரபு சாரா உற்பத்தி பெரும்பாலும் மையத்தன்மை அற்றதாக இருப்பதால் (decentralized) ஏதேனும் ஒரு இடத்தில் உபரி உற்பத்தி இருக்கும். ஏனெனில் ஒட்டுமொத்த தமிழகமும் மழையாலோ, மேகத்தாலே மூடிவிடப் போவதில்லை. திருவிளையாடல் சிவாஜி கைகாட்டினாற்போல் காற்று அசைவின்றி நின்றுவிடப் போவதும் இல்லை. அதனால் உபரி உற்பத்தியைக் கொண்டு திட்டமிட இயலும்.

இப்போதுவரை மின் உற்பத்தியும், மின் பயன்பாடும் ஒருவழிப்பாதைதான். காரணம் காற்றாலைகளும், சூரிய ஆற்றலும் இன்னமும் நம்மை முழுதாய் ஊடுருவவில்லை. அப்படி ஊடுருவும் காலத்தில் இது இருவழிப்பாதை ஆகும். நாம் மைய மின் பகிர்மான வட்டத்திற்கு மின்சாரம் அனுப்பி வைப்போம். நாம் இதுவரை பார்த்தவை எல்லாமே இந்தக் கட்டுரை எழுதப்படுகிற நாளில் மின் இலாகாவின் தலைவலியாக இருக்கலாம். ஆனால் அது நம் தலைவலியாகவும் மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. முழுக்க முழுக்க மரபு சாரா மின்சாரத்துக்கு நகர வேண்டும் என்று நினைக்கையில் இதையெல்லாம் முட்டுக்கட்டைகளாகப் பார்க்காமல் முறியடிக்கப்பட வேண்டிய சவாலாகப் பார்த்தால் இந்த மாற்றம் நமக்குக் கொஞ்சம் எளிதாய் இருக்கும்

Posted on 1 Comment

கிடைமட்டக் கற்றல் – ஹாலாஸ்யன்


நான் புதிதாகச் சேர்ந்திருக்கிற நிறுவனத்தில் என்னோடு
சேர்ந்தவர்கள் எட்டு பேர். நாங்கள் எட்டுபேருமே ஒரே வேலைக்காகத்தான் எடுக்கப்பட்டிருந்தோம்.
ஓர் இணையவழிப் பாடத்தை வடிவமைக்கும் Project lifecycle என்கிற படிநிலைகள் சுமார்
20 தேறும். நாங்கள் எட்டுபேரும் மூன்று அனுபவமுள்ள ஆட்களுக்குக்கீழ் சேர்க்கப்பட்டோம்.
அவர்கள் தருகிற வேலைகளை முடிக்க வேண்டியதுதான் எங்களுக்கு ஆரம்பத்தில் தரப்பட்ட வேலை.
அதற்குப் பின்னரே எங்களுக்கே எங்களுக்கென்று ஒரு தனி பாடம் பிரித்துத் தரப்படும்.
எங்களுக்கு‌ மேலிருந்த அனுபவமிக்க மூன்று பேரும் வேறு
வேறு பாடங்களில் வேறுவேறு project lifecycle நிலைகளில்‌ இருந்ததால், நாங்கள் எட்டு
பேரும் வேறுவேறு நிலைகளில் பழகினோம். மொத்தமாகப் பார்த்தால் இருபது நிலைகளில் ஒவ்வொன்றுக்கும்
எங்கள் எட்டு பேரில் இரண்டு பேராவது பழகியிருந்தார்கள். நாங்கள் யாராவது புதிதாக ஒரு
நிலைக்கு அறிமுகமாகையில் உடனிருப்பவர்களிடம் இருந்து அந்த நிலையின் சவால்களைக் கேட்டறியவும்
அதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் முடிந்தது‌.
எங்களைப் பயிற்றுவிப்பவர்கள், எங்களின் மேலாளர்கள்
ஆகியோர்களிடம் இருந்து எங்களால் நிச்சயமாக இவ்வளவு விஷயங்களைக் கற்றிருக்க முடியாது.
மேலும் நாங்கள் எட்டு பேருக்கு பதில்‌ இருவர் மட்டும் இருந்திருந்தாலும் இவ்வளவு கற்றல்
சாத்தியமில்லை.
காரணம் கற்றலானது மேலிருந்து கீழ் பயணிக்கையில் ஒரு
ஈகோ இருக்கிறது. ஆசிரியர்களெல்லாம் அப்படி இல்லை என்று மல்லுக்கு வராதீர்கள். விதிவிலக்குகளை
உதாரணங்களாகக் காண்பித்து நியாயப்படுத்தமுடியாதே. அப்படி ஈகோ உடைய நிறைய ஆசிரியர்களை
எனக்குத் தெரியும். மேலும் அலுவலகச் சூழ்நிலையில் மேலாளர்களின், பயிற்றுநர்களின் நேரமும்
முக்கியம். இப்படிப்பட்டக் கிடைமட்டக் கற்றல் ஒரு அலுவலகச் சூழலில் நேரம், உழைப்பு
என்று இரட்டைச் சேமிப்பைச் சாத்தியமாக்கும். பெரும்பான்மையான கற்றல்கள் நாங்கள் ஒன்றாய்
அமர்ந்து தேநீர் அருந்துகையில், மதியம் உணவருந்துகையில் நடைபெற்றது. மேலும்‌ பரஸ்பரம்
உதவிக் கொள்ளுதலையும், மேலிடத்தில் கேட்கத் தயங்குகிற சில சந்தேகங்களை, நம்முடன் வேலைக்குச்
சேர்ந்து நம்மோடே பணியாற்றும் நபரிடம் தயக்கமின்றிக் கேட்டுக்கொள்ள முடியும்.
இதை அலுவலகங்கள் மட்டுமல்ல இயற்கையும் செய்கிறது என்றால்
என்ன சொல்வீர்கள்?
பரிணாம வளர்ச்சி என்பது ஒரு கற்றல்தான். மாறுகிற சூழ்நிலை,
இருப்பிடம், உணவுமுறை, உயிர்பிழைப்பு என்று ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு உடற்செயற்பாட்டை,
உடலின் அமைப்பை, சில விசேஷமான உறுப்புகளை, உணர்வுகளைப் பெற்று வேறு தனி ஜீவராசியாக
நிற்கின்றதுதான் அதன் செயல்முறை. ஆனால் இந்த மாற்றம் மரபணுக்கள் தன்னிச்சையாக மாற்றம்
பெற்று, சந்ததியில் வழிவழியாக வருவதற்கு ஏகப்பட்ட காலம் பிடிக்கும். சில சமயம் ஆயிரக்கணக்கான
வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் சில மரபணுக்களை சக ஜீவராசிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள
ஒரு வழி இருக்கிறது.
உடனே வல்லூறுகளின் இறகுகள் வளரும் ஜீன்களைச் செலுத்திக்கொண்டு
பறந்து, நாளையில் இருந்து பெட்ரோல் செலவையெல்லாம் குறைத்துவிட முடியாது. நம்மைப்போல
பலசெல் உயிரிகளின் இது சிக்கலான விஷயம். காரணம் நம் ஒவ்வொரு உறுப்புகளின் செல்களும்
தனித்தன்மை கொண்டவை. மூளை, சிறுநீரகம், கணையம் என்று ஒவ்வொன்றின் அமைப்பும் செயல்பாடும்
வேறுவேறு.
ஆனால் பேச்சுலர் ரூம்கள்‌ மாதிரி சகலமும் ஒரே இடத்தில்
நடக்கிற ஒற்றைச்செல் உயிரிகளில் இது மிக எளிதாக நடந்துவிடும்.
இது பாக்டீரியாக்களில்தான் நடந்திருக்கிறது. அவைகள்தான்
இங்கு முதன்முதலில் மரபணுக்களை மாற்றிக்கொண்டு கற்றுக்கொண்டவை. இந்தக் கற்றல் ஒரு சுமப்பான்
carrier மூலமாகவோ அல்லது நேரடி மரபுப்பொருள் பகிர்வு மூலமாகவோ நடைபெறலாம். எங்கோ எப்படியோ
பச்சைத் தண்ணீர் செல்லில் படாமல் (எவ்வளவு நாளைக்குதான் பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல்)
உயிர்வாழக் கற்றுக்கொண்ட ஒரு பாக்டீரியா, அதை பிற பாக்டீரியாக்களுக்கு மூன்று விதமாய்க்
கடத்தலாம்.
முத்து திரைப்படத்தில் “இரவு எட்டு மணிக்கு தோட்டத்துக்கு
வரவும். தீபாவளி பரிசு காத்திருக்கிறது” என்று எழுதிய சீட்டு எல்லோர் மேலும் விழுந்து,
மொத்த வீடும் தோட்டத்தில் திரியுமல்லவா? அதுபோல, அந்த நீரின்றி வாழத் தேவையான மரபணுவை
மட்டும் பிரதியெடுத்து, வெளியே தூக்கிப்போட அதை இன்னொரு பாக்டீரியா பிடித்து உள்ளிழுத்து
அதை தன்னோடு இணைத்துக்கொள்ளும். இதன் பெயர் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் (transformation).
அல்லது “முப்பது நாள் நீரின்றி வாழும் வித்தை! பயிற்றுவிப்பவர்
சகாராவுக்குச் சென்று வந்த சித்த பாக்டீரியா” என்பதுபோல் அந்த மரபணு இல்லாத பாக்டீரியாவுக்கு,
மரபணு உள்ள பாக்டீரியா, செல்களுக்கு நடுவே ஒரு இணைப்புப் பாலம் ஏற்படுத்தி அதன்மூலம்‌
கடத்தலாம். அதன்பெயர் காஞ்சுகேஷன் (conjugation).
மூன்றாவது வகை, அந்த மரபணுவை ஒரு சுமப்பான்
(carrier) இன்னொரு சாதாரண மரபணுவுக்குத் தந்து அதையும் நீரின்றி வாழத் தயார்ப்படுத்துவது.
இதில் ஒரு சுமப்பான் (கடத்தி) வருகிறதல்லவா? அந்தச் சுமப்பான்தான் இந்தக் கதையின் திருப்புமுனையே.
அந்த சுமப்பான்களாகச் செயல்பட்டது ஒரு வைரஸ். சுமப்பான் மூலம்‌ கடத்துவதற்குப் பெயர்
ட்ரான்ஸ்டக்‌ஷன் (transduction).
வைரஸ் என்றவுடனேயே நமக்கெல்லாம், உலகின் ஆபத்துகள்
எல்லாமே அமெரிக்காவில் மட்டுமே நடப்பதாய்க் காட்டும் ஹாலிவுட் படங்களில் ஒரு ஒளிரும்
பச்சை நிற வஸ்துவில் இருக்கும் ஜந்து, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் வாய் மூக்கு கண்
வழியாய் இரத்தம் வழியக் கோரமாய் இறந்து கிடக்கிற காட்சிதான் நினைவுக்கு வரும். அது
ஓரளவு உண்மைதான். சாதாரண சளி ஜூரம் முதல், ஆட்கொல்லியாய் இருந்து ஒழிக்கப்பட்ட பெரியம்மை
(சின்னம்மை இப்போதைக்கு ஒழியாது போலிருக்கிறது. இது அரசியல் அல்ல) போன்ற ஆட்கொல்லி
நோய்கள், திடீர் திடீரென்று வரும் பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், எபோலா, சிறுகச்சிறுகக்
கொல்லும் எய்ட்ஸ் வரை, ஆண்டுதோறும் வைரஸ் தாக்கும் நோய்களால் இறப்பவர்கள் எக்கச்சக்கம்.
ஆனால் அவை மட்டும் வைரஸ்கள் அல்ல. விலங்கினங்கள் மட்டுமின்றி, தாவரங்களைத் தாக்குகிற
வகை உண்டு. பூவன் வாழைத்தார் மாதிரி இருக்கிற டொபோக்கோ மொஸைக் வைரஸ் (Tobacco
Mosaic Virus) என்று தாவரங்களை மட்டும் சவட்டிக் களைகிற வைரஸ்கள் உண்டு. அதில் பார்த்தோமானால்
பாக்டீரியாக்களை மட்டும் தாக்கும் வைரஸ்கள் உண்டு. அவற்றிற்கு பாக்டீரியோஃபேஜ்
(bacteriophage) என்று பெயர். Phage என்னும் லத்தீனச் சொல்லுக்கு உண்ணுதல் என்று பொருள்.
அதாவது பாக்டீரியாவைத் தின்னும் வைரஸ். பார்க்க ஏதோ எதிர்கால ரோபோட் மாதிரி குச்சிக்
கால்கள் உருளையான உடல்பாகம் என்று இருக்கும். பார்க்கச் அழகாக இருக்கிறதே என்று நினைத்தால்
செயல்கள் இன்னும் ஆச்சர்யம்.
பாக்டீரியாவின் மேல்போய் அமர்ந்து அதன் மேல் ஓட்டினைத்
துளைத்து, தன் மரபணுவை உள்ளே அனுப்பும், உள்ளே போய் பாக்டீரியாவின் இயக்கங்களை நிறுத்திவிடும்.
பின்னர் அந்த பாக்டீரியாவின் செல் இயக்கத்தை முழுக்க முழுக்க அந்த வைரஸ் தன் கட்டுப்பாட்டுக்குக்
கொண்டு வந்துவிடும். பாக்டீரியாவின் மரபுப் பொருளான டி.என்.ஏ வை பிரதியெடுக்கும், புரதங்களைத்
தயாரிக்கும் எல்லாவற்றையும் வைரஸ் தன்னுடைய மரபுப் பொருளை பிரதியெடுக்கவும், அதன் வெளிப்புற
புரத அடுக்குகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தும்.
இங்கு இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. முதல்
வகையில், அந்த வைரஸ் மளமளவென பல்கிப் பெருகி அவையெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பாக்டீரியாவை
உள்ளிருந்து கிழித்துக்கொண்டு வெளிவரும். பெரிய அளவில் பார்த்தால் ரொம்பக் கொடூரமாக
இருக்கும் போல. ஆனால் எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் பார்க்க இந்தச் செயல்பாடு அழகாய்
பஞ்சு வெடித்துப் பறப்பது போல இருக்கும். இப்படி நடப்பதை லைட்டிக் சுழற்சி lytic
cycle என்கிறார்கள். இது கூலிப்படை மாதிரி. உள்ளே புகு, அடி, சிதை, மீண்டும் உள்ளே
புகு அடி இப்படித் தாக்கிக்கொண்டே போய்க்கொண்டிருக்கும்.
இரண்டாவது வகைதான் ஸ்லீப்பர் செல்கள். உள்ளே புகுந்த
வைரஸின் மரபுப் பொருள் பாந்தமாய் பாக்டீரியாவின் மரபுப் பொருளோடு ஒட்டிக் கொண்டுவிடும்.
பின்னர் ஒரு ஸ்லீப்பர் செல்போல் அந்த வைரஸ் அந்த பாக்டீரியாவுக்குள்ளேயே வளர ஆரம்பிக்கும்.ஆனால்
பாக்டீரியாவும் இறந்து போகாது. நினைவில் வையுங்கள். பாக்டீரியாவே நுண்ணோக்கிகளில் ஒரு
மாதிரி குன்ஸாகத்தான் தெரியும். ஆனால் அதற்குள்ளே நூற்றுக்கணக்கில் உயிர்கள் என்று
நினைக்கையில் இயற்கை என்னும் அதிசயத்தை நாம் வியந்தே ஆக வேண்டும். இப்படி உள்ளேயே வளர்கையில்
உள்ளே அணிவகுக்கும் புது வைரஸ்களுக்குள் கொஞ்சம் பாக்டீரியாவின் மரபுப் பொருளும் இருக்கும்.
திடீரென்று ஒரு நாள் சூழல் கூடி வருகையில் பழையபடி இங்கும் லைய்டிக் சுழற்சி ஆரம்பித்து
விடும். இம்மாதிரி பாக்டீரியாவுக்குள் காத்திருந்து, அதன் மரபுப் பொருளோடு வைரஸ் உருவாவதற்கு
லைஸோஜெனிக் சுழற்சி என்று பெயர். இப்போது அந்த பாக்டீரியாவைக் கிழித்து வெளிவந்திருக்கும்
வைரஸிற்குள் கொஞ்சம் பாக்டீரியாவின் மரபுப் பொருளும் இருக்குமல்லவா? அது நேரே இன்னொரு
பாக்டீரியாவைப் போய்த் தாக்கும்.
இங்குதான் கதையின் உச்சகட்டக் காட்சி, சில தற்செயல்களில்
அந்த வைரஸ் பாக்டீரியாவிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட மரபணுவை (நம் கதைப்படி தண்ணியில்லாக்
காட்டில் பிழைத்திருத்தல்) மட்டும் மொத்தமாய் அள்ளிக்கொள்ளவும் சாத்தியம் உண்டு. இப்படி
ஒரு குறிப்பிட்ட மரபணுவோடு போகும் வைரஸ் இன்னொரு சாதாரண பாக்டீரியாவைத் தாக்கும். இங்கு
அந்த பாக்டீரியாவுக்குள் செலுத்தப்படும் வைரஸின் மரபணு சில சிக்கலாக உயிரியல் நடைமுறைகள்
வாயிலாக பாக்டீரியாவின் மரபுப் பொருளோடு போய் இணைந்துவிடலாம். இப்போது அந்த மரபணு அந்த
பாக்டீரியாவுக்கும், அதன் சந்ததிகள் எல்லாவற்றிற்கும் கிடைத்துவிடும். இப்படித்தான்
இந்த கிடைமட்ட மரபணுப் பரிமாற்றம் வேலை செய்கிறது. சிக்கலான பகுதியைத் தாண்டிவிட்டோம்.
இனி இதன் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்.
இப்படி ஒரு வெவ்வேறு வகை பாக்டீரியாக்களுக்குள் பகிரப்பட்ட
மரபணுக்கள்,பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்காற்றின என்பதை உயிரியல் ஆராய்ச்சியாளர்கள்
எவ்வித சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள். இதன்மூலம் நமக்கு நன்மையும் நிகழ்ந்திருக்கிறது.
சோதனைகளும் வந்திருக்கிறது.
சோதனைகளை முதலில் பார்த்துவிடுவோம். மனிதனைத் தாக்க
முடியாத ஒரு பாக்டீரியாவிற்கு,மனித உடலில் நோயை உண்டாக்கக் கூடிய மரபணு இப்படிப்பட்ட
லைஸோஜெனிக் சுழற்சியால் கிடைக்கலாம். டிப்தீரியா நோயை உண்டாக்கும் ஒரு குறிப்பிட்ட
வகை பாக்டீரியா மனிதனைத் தாக்கும் திறனில்லாத பாக்டீரிய வகைக்குக் கொடுத்துவிட்டது.
இன்னொரு சாத்தியக் கூறு ஒரு குறிப்பிட்ட மருந்திற்கு எதிர்ப்புத் திறன் பெற்றுவிட்ட
பாக்டீரியா பிற பாக்டீரியாக்களுக்கு அந்த நோயெதிர்ப்பு மரபணுவைக் கடத்திவிடலாம். இது
இப்போது ஆங்கில மருத்துவத்திற்குப் பெரிய சிக்கலாக வந்து நிற்கிறது.
பாக்டீரியாக்கள் சம்பந்தப்படாத வைரஸ்களால் உண்டாகிற
சளி ஜூரம் போன்றவற்றிற்கெல்லாம் ஆன்டிபயாட்டிக்குகள் கொடுத்து கொடுத்து, பாக்டீரியாக்களை
ஆன்டிபயாட்டிக்குகளால் ஒன்றும் செய்ய முடியாத படிக்கு ஆக்கியிருக்கிறோம். இந்த ஆன்டிபயாட்டிக்குகளுக்கு
எதிர்ப்புத்திறன் பெற்றுவிட்ட பாக்டீரியாக்களுக்கு முன்னர் நாம் நிராயுதபாணிதான். அதிலும்
வான்கோமைசின், மெத்திசில்லின் என்று இரு ஆன்டிபயாட்டிக்குகளை, எல்லாவற்றிற்கும் கேக்கும்
என்று ப்ரிஸ்க்ரிப்ஷனில் எழுதித் தள்ளியிருக்கிறோம். ஸ்டாஃப் staph என்று செல்லமாக
அழைக்கப்படும் ஸ்டாஃபிலோகாக்கஸ் ஆரியஸ் Staphylococcus aureus என்னும் பாக்டீரியா இந்த
இரு ஆன்டிபயாட்டிக்குகளுக்கு ஏற்கனவே எதிர்ப்புத்திறன் பெற்றாகி விட்டது. மிர்ஸா, விர்ஸா
MRSA(Methicillin resistant Staphylococcus aureus), VRSA(Vancomycin Resistant
Staphylococcus aureus) என்று இரு வகைகள் உருவாகி உலவிக்கொண்டிருக்கின்றன. “அய்யய்யோ!
பாதுகாப்புக்கு ஆஸ்பத்திரிக்குப் போய் வைத்தியம் பாக்கலாம்” என்றால்,பொறுங்கள்!! அவை
அதிகம் புழங்குவதே அங்குதான்.
ஆனால் இந்த கிடைமட்ட மரபணுக் கடத்தல் மூலம் கிடைத்த
நன்மைகளும் அளப்பரியவை. முக்கியமாக நீரிழிவு நோயாளிகள், தினப்படி இன்ஸுலின் கிடைப்பதற்காக
ஈ. கோலி E. coli என்னும் ஒரு பாக்டீரியாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். இன்ஸுலின்
ஒரு புரதம். அதைச் சுரக்கும் மரபணுவைப் பிரித்து, அதை பாக்டீரியோஃபேஜுக்குள் செலுத்தி,
அதனை ஈ.கோலி பாக்டீரியாவை எடுத்துக்கொள்ள வைத்து பின்னர் அந்த பாக்டீரியா சுரப்பதைச்
சுத்திகரித்துத் தயாரிக்கிறார்கள். மரபணு மாற்றம் என்பது இதுதான்‌‌.
பசில்லஸ் துரங்கனிஸிஸ் Bacillus thurenginesis என்னும்
பாக்டீரியாவின் சில தாவர உண்ணிப் பூச்சிகளை விரட்டும் திறனைக் கண்டறிந்து, அதற்குக்
காரணமான மரபணுவை, வைரஸ் மூலம் நேரடியாகத் தாவரங்களுக்குத் தருவது மரபணு மாற்றம் செய்யப்பட்ட
தாவரங்களை உருவாக்கும். பி.டி BT என்பது அந்த பாக்டீரியாவின் பெயர்ச் சுருக்கம்தான்.
இதைத்தவிர அதிகம் பேசப்படாத ஒரு உபயோகம் இருக்கிறது‌.
ஆன்டிபயாட்டிக்களுக்கெதிராக பாக்டீரியாக்கள் அணிவகுத்தாயிற்று என்று பார்த்தோம் அல்லவா?
அதற்கு அந்த பாக்டீரியோஃபேஜ்களே மாற்று. ஆன்டிபயாட்டிக் என்னும் வேதி மூலக்கூறுகளைப்
புரிந்துகொண்டு பாக்டீரியாக்கள் எதிர்ப்புத் திறனை உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் ஒரு
பாக்டீரியோஃபேஜ் வைரஸ் என்பது ஒரு உயிர். பாக்டீரியா, அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஏதேனும்
எதிர்ப்புத் திறன் வளர்த்துக் கொண்டால், இந்த வைரஸ் உடனே தன்னை மாற்றிக் கொள்ளும்.
எப்படியாவது பாக்டீரியாவைத் தாக்க வழி கண்டுபிடிக்கும்.
அப்படி ஒவ்வொரு பாக்டீரியாவுக்கும் ஒரு பாக்டீரியோஃபேஜ்
வைரஸைக் கண்டுகொண்டால், கிருமித் தொற்றுகளை மனித உடலுக்கு எந்த அச்சுறுத்தலும் இன்றி
நீக்க முடியும்.
இதனை ஃபேஜ் சிகிச்சை (phage therapy) என்கிறார்கள்.
இது ஒன்றும் புதிதில்லை. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ரஷ்யா தன் இரும்புத் திரைக்கு
அடியில் இந்தச் சிகிச்சை முறையில் எக்கச்சக்க ஆய்வுகள் செய்துகொண்டிருந்தது. அலெக்ஸாண்டர்
ஃப்ளெம்மிங், ஆன்டிபயாட்டிக்குகளைக் கண்டுபிடித்தவுடன், ஃபேஜ் சிகிச்சை அம்போ என்று
விடப்பட்டது. இப்போது தூசு தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 இன்னொரு பத்து வருடத்தில், மெடிக்கல் படியேறி, “அண்ணா
தொண்டை கரகரங்குது‌. தண்ணி மாறுனதுல பிரச்சனை. ஒரு நல்ல ஃபேஜ் டானிக் குடுங்களேன்”
என்று கேட்டு வாங்கும் நாள் வந்துவிடும். காத்திருங்கள்.

Posted on Leave a comment

எங்கே செல்லும் இந்தப் பாதை – ஹாலாஸ்யன்

தன் மனைவிநாய்
வளர்ப்பதைப் பிடிக்காத கணவனைப்
பற்றிய ஒரு நகைச்சுவை சொல்வார்கள்.
தனக்குப் பிடிக்காத மனைவியின் நாயை,
கணவன் தன்காரில்ஏற்றி‌,
சுமார் இரண்டு கிமீ தள்ளிக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருகிறான்.
அந்த நாய் அவன் வரும் முன்னர் வீட்டுக்கு வழி கண்டுபிடித்து வந்துவிடுகிறது.
அடுத்த முறை ஒரு பத்து கிமீ எங்கெல்லாமோ சுற்றிச் சுற்றிப் போய் விட்டுவிடுகிறான்.
மறுபடியும் வந்துவிடுகிறது. மூன்றாவது முறை
இன்னும் ஏகப்பட்ட தூரம் போய் இறக்கி விடுகிறான்
. திரும்பி
வரும் வழி இவனுக்கு மறந்துவிடுகிறது
. மனைவியை ஃபோனில்
அழைத்து அந்த நாய் வந்துட்டுதா என்று கேட்கிறான்
. மனைவி
ஆம் என்கிறாள்
. ‘அதை அனுப்பி வை. எனக்கு
வழி மறந்துபோச்சு
என்று கணவன் சொல்வதாக அந்த நகைச்சுவை போகும்.
அதில் கவனிக்க வேண்டிய உண்மை என்னவெனில் அந்த நாய்
எப்படியோ வழி கண்டுபிடித்துவிடுகிறது
என்பதுதான்.
நாய் மட்டுமல்ல, பொதுவாகவே விலங்குகள் வழி தெரியாமல் முச்சந்தியில்
நின்று தலையைச் சொறிவதில்லை
. என்தாத்தாவின்
இளம்பிராயத்தில் அவர் யாருக்கோ விற்ற ஒரு வண்டிமாடு,
விற்றவர் வீட்டிலிருந்து கயிற்றை அவிழ்த்துக்கொண்டு நேரே வீட்டுக்கு வந்துவிட்டதாம்‌.
மன்னர்கள் கதைகளில் அவர்களின் குதிரைகள் மயக்கமுற்ற தன் எஜமானரைச் சுமந்துகொண்டு
அரண்மனைக்குத் திரும்பிய கதையெல்லாம் கேட்டிருப்போம்
. இதெல்லாம்
என்ன பிசாத்து
?
தி கிரேட் ஆர்டிக் டெர்ன் The great
arctic tern
என்னும் பறவை வலசைப் போவதற்காக வடதுருவத்தில் இருந்து
தென்துருவத்திற்கும் வலசை முடிந்து ஒரு ரிட்ர்ன் ட்ரிப்பும் அடிக்கிறது
‌‌.
அசகாய சூரத்தனம். கடல்மேல் பறக்கையில்சட்டென்று
நீருக்குள்
பாய்ந்து ஒரு மீனை கவ்விக்கொண்டு அந்த மீனை காற்றிலேயே
தூக்கிப்போட்டுப் பிடித்துப் பறக்கையிலேயே விழுங்கிவிடும்
. டெர்ன் பறவைகள் தமிழில் ஆலாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஓயாமல் பறக்கிற அவற்றின் பெயராலேயே ஆலாய்ப் பறக்கிறான்
என்ற சொலவடை வந்திருக்கக்கூடும்
.

அதேபோல சாலமன் மீன்கள் இனப்பெருக்கப் பருவம் வந்ததும்,
கடலில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் எதிர்நீச்சல் போட்டு,
தான் பிறந்த நதிப் படுகைக்குப் போய் இனப்பெருக்கம் செய்து முட்டையிடுகின்றன.
புறாக்கள் தம் காலில் கட்டிய ஓலையை, கச்சிதமாய்ச்
சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டு
ஏப்பா!!
ரிப்ளை ஏதும் போடுவியா?” என்று பதில் ஓலையையும் வாங்கிக்கொண்டு வந்து சேர்கின்றன.
சாணத்தை உருட்டி எடுத்துப்போய்ச் சேகரிக்கும் வண்டுகள்  உருட்டிக்கொண்டு வழி மாறாமல் தன் இருப்பிடம் சேர்கின்றன.


 விலங்குகள், பறவைகள்
மற்றும் பூச்சிகள் திசை அறியும் நுட்பம் மிகமிகச் சுவாரசியமானது
‌.
அவை இயற்கையைப் பலவாறாகத் தங்களுக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்துகின்றன.
அவற்றுள் முக்கியமானது சூரியன். சூரியன் இருக்கும்
இடத்தையும்
, அப்போதைய நேரத்தை வைத்தும் வழி கண்டுபிடிக்கின்றன.
தேனீக்கள் இந்த வித்தையில் கில்லாடிகள். பூ
எங்கிருக்கிறது என்று ஃபீல்ட் விசிட்டுக்குப் புறப்படும் தேனீ
,
பூக்களைக் கண்டவுடன் திரும்பி வந்துசூரியனுக்கு
எதுத்தாப்புல அஞ்சு டிகிரி லேசா சாஞ்சு போனா ஒரு நந்தவனமே இருக்கு

என்று வழி சொல்கின்றன. பறவைகள் சூரியனை நம்புகின்றன.
அதைத்தவிர வானம் மப்பும்மந்தாரமுமாய் இருக்கையில் பூமியின் காந்தப்புல மாறுதல்களை
வைத்து இடம் கண்டுபிடிக்கின்றன
. இந்த காந்தப்புல மாறுதல்களை வைத்து திசை கண்டுபிடித்தல்,
பறவைகளில் மட்டுமல்ல, பாக்டீரியாக்களிலும் உள்ளது.
அவற்றின் உடலினுள் சிறு இரும்புத் தாது அதனை ஒட்டிச் சில புரதங்கள்,
காந்தப்புல மாறுதலால் அந்த இம்மி இரும்புத் தாதுவில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றி
இருக்கும் புரதங்களையும் பாதித்து அதன் மூலம்
ஏ வேடந்தாங்கல்
வந்தாச்சு
, லேண்ட் ஆகுஎன்று
பறவைகள் இறங்கும்
. இதையும் தவிர க்ரிப்டோக்ரோம்
(cryptochrome)
என்னும் புரதங்களின் மூலமும் காந்தப்புல மாறுதல்களை
அறிய முடியும்
. அந்தப் புரதங்கள் காந்தப்புல மாறுதலால் ஒளியில் ஏற்படும்
மாறுதல்களை வைத்து வழி கண்டுபிடிக்கின்றன
. பழக்கடைகளில்
மாம்பழங்களை மொய்க்கும் பழ வண்டுகள் இந்த க்ரிப்டோக்ரோம்களைத்தான் வழிகாட்டியாகக் கொண்டுள்ளன
.
சாணத்தை உருட்டி எடுத்துப் போகும் வண்டுகள் உண்மையில் எல்லா ஜீவராசிகளையும்
தலைகுனிய வைக்கின்றன
. அவை பால்வீதியின் நட்சத்திரங்களை,
இரவு வானில் அவற்றின் இருப்பிட மாறுதல்களைக் கொண்டு சாணத்தை உருட்டி இருப்பிடம்
எடுத்துப்போகின்றனவாம்
. சாலமன் மீன்கள் ஞாபகத்தின் மூலமாகவும் வாசனையின் மூலமாகவும்
தாம் பிறந்த நதிப்படுகையை அடைகின்றன
. ஆனால் நாம்?
நாமும் சளைத்தவர்கள் அல்ல. இந்த
உலகத்தில் வாழிடத்துக்காகவும்
, பிழைப்புக்காவும் இடம்பெயரும் ஜீவன்களில் மனிதர்களும்
அடக்கம்
. ஆப்பிரிக்காவில் தொடங்கி, கண்டம்,
தீவுகள் எனத் தாறுமாறுகாக இடம் பெயர்ந்திருக்கிறோம்.
கிட்டத்தட்ட நடந்தே போய்ப் பல கண்டங்களில் குடியேறியிருக்கிறோம்.
ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கெல்லாம் எப்படிப்போனோம் என்பது இப்போது வரை பெரிய
பிரமிப்புதான்
, காந்தப்புலத்தை அறியும் அளவுக்கு நமது மூளைக்குத் திறமையில்லை
என்றாலும்
, இந்த நகர்தலுக்கு நம் மூளை பழக்கப்பட்டதுதான்.
இன்னும் பார்த்தால் வேட்டைச் சமூகக் காலத்தில் எதையாவது துரத்திப்போய் அடித்துக்கொண்டு
மீண்டும் வீடோ
, குகையோ திரும்புதல் என்பது உயிர்வாழ்தலுக்கு அத்தியாவசியமான
ஒன்று
. நமது மூளையில் அதற்கு உரிய பங்கு இருக்கிறது. மூளையின்
இரண்டு அரைக்கோள
ங்களுக்கு அடியிலும் குர்குரே சிப்ஸ் போன்ற ஒரு வடிவத்தில்
மூளையின் ஒரு ஏரியா இருக்கிறது
. அந்த ஏரியாவின் பெயர் ஹிப்போகாம்பஸ்
(Hippocampus).
ஹிப்போகாம்பஸ் குறுகிய கால ஞாபகத் திறன்,
நெடுங்கால ஞாபகத் திறன் மற்றும் பரிமாண ஞாபகங்களை நிர்வகிக்கக் கூடியதாக இருக்கிறது.
புதிதாக ஒரு இடத்துக்குப் போகையில் அந்த இடத்தைப் பார்வையால்
அளந்து அதன் பரிமாணங்களை
, நம்மால் எங்கெல்லாம் நகர முடியும் என்று ஹிப்போகாம்பஸ்
ஒரு திட்டம் வைத்துக்கொள்ளும். பார்வையற்றோருக்கு
வேறு புலன் உள்ளீடுகளால் அந்த இடைவெளி நிரப்பப்படும்
. அந்த
இடத்தின் வழியாகத் திரும்ப வரவேண்டி இருக்குமெனில் அதைக் குறுகிய கால ஞாபகத்திலேயே
வைக்கும்
. அடிக்கடி வந்து போகிற இடமெனில் நெடுங்கால இலாகாவிற்கு
மாற்றிவிடும்
. இதனைத் தவிரபாஸ்
இங்கேர்ந்து செவுறு ஏறிக் குதிச்சா
, நேரா சாப்புட்ற
இடத்துக்கு வந்துடலாம் பாஸ்
என்பதுபோல முப்பரிமாணத்தில் வரைபடம் தயாரிக்கிற பரிமாண
ஞாபகங்களையும் அதுவே நிர்வகிக்கிறது
,
அறிவியல் சம்பிரதாயப்படி எலிகளை வைத்துச் சோதனை செய்ததில்
அவற்றின் ஹிப்போக்காம்பஸின் இடம் கண்டுபிடித்தலுக்கான சிறப்பான ந்யூரான்கள் இருப்பதைக்
கண்டுபிடித்திருக்கிறார்கள்
. எலிகள் ஒரு அறைக்குள் நகர்கையில் ஒவ்வொரு இடத்துக்கும்
ஒவ்வொரு ந்யூரான்கள் செயல்பட்டிருக்கின்றன
. ஒரு
புது அறைக்குள் விடப்படுகையில் அந்த அறையின் பரிமாணங்களை அறிந்துகொள்ளவும்
,
ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ந்யூரான் என்று நிறுவவும் வேண்டியிருப்பதால் ஹிப்போகாம்பஸ்
அதிகம் செயல்படுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள்
.
பாலூட்டிகளின் மூளை அமைப்பில் ஏகப்பட்ட ஒற்றுமைகள்
இருப்பதால் நமக்கும் இதே ந்யூரான் நேர்ந்துவிடல்கள் உண்டு
. ஆரம்ப
காலத்தில் வழி கண்டுபிடிக்க எந்த உபகரணமோ
, உதவியோ
இல்லாதபோது இந்த வழிகளெல்லாம் செவிவழிச் செய்திகளாய்
, அந்தக்
குழுவின் மூத்த
, பழுத்த அனுபவமுடைய ஒரு மனிதரால் கடத்தப்படும்.
வானியல், காற்று வீசும் திசை, நீரோடும்
திசை இவற்றையெல்லாம் நாம் பயன்படுத்தி வழிகண்டுபிடிக்கத் தொடங்குகையில் மூளையும் அந்தக்
கருவிகள் சார்ந்த தரவுகளைத் தொடர்ச்சியாகச் சேமித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தது
.
அந்தக் கண்டுபிடிப்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்தான் வரைபடங்கள்.
வரைபடங்கள் வாழ்வை எளிதாக்கியிருக்கின்றன.
பெரிய நிலப்பரப்புகளை ஆளவும், கடக்கவும் ஏன்
அழிக்கவும் பயன்பட்டிருக்கின்றன
. Cartography என்கிற வரைபடவியல்
மிகவும் சுவாரசியமான ஒரு இயல்
. வரைபடங்களை எப்படி வரையவேண்டும்,
அவற்றின் அளவீடுகள் என்ன மாதிரியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்.
நாம் தட்டையான பேப்பரில் பார்க்கிற வரைபடங்கள் உருச்சிதைந்தவையே.
கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவிற்குத் தம்பி போல வரைபடத்தில் தெரிய வரும் க்ரீன்லாந்து,
உண்மையில் அளவீட்டில் ஆப்பிரிக்காவிற்குப் பக்கத்தில் கூட வர முடியாது.
ஆனால் ஒரு கோளத்தை தட்டையான இருபரிமாணத் தாளில் தருவது என்கிற இடியாப்பச் சிக்கலில்
இதுவே பெரிய விஷயம்
.
நாம் வழிமாறிப் போகாமல் திரும்ப வருவோம்.
வரைபடங்கள் மிக அதிகம் பயன்பட்டது கடலோடிகளுக்குதான்.
வெறும் நட்சத்திரங்களையும், தொலைநோக்கிகளையும்
வைத்துக் குத்துமதிப்பாகப் போய்க்கொண்டிருந்த கப்பல்கள் துல்லியமாய் இலக்கை நோக்கிப்
பயணிக்க ஆரம்பித்ததில் உலக வரலாற்றிலும் வர்த்தகத்திலும் பெரும் திருப்பங்களுக்குக்
காரணமானது
. ஆனால் வரைபடங்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை அல்ல.
அவற்றின் மேற்பக்கம் எப்போதுமே வடக்கைப் பார்த்துதான் இருக்கும்.
உனக்கு வேணும்னா நீ திரும்பி பாத்துக்கோஎன்கிற
கதையாய் முரண்டு பிடிக்கும்
. அப்படி வேறு ஒரு பொருளை, இந்த
இடத்தில் வடக்கு திசையை ஆதாரமாய்க் கொண்டிருப்பதால் இவ்வகையான வரைபடங்களை அல்லோசெண்ட்ரிக்

(Alocentric)
என்று அழைக்கிறார்கள்.
நன்றாக வரைபடத்தை அலசத் தெரிந்த ஒரு ஆளுக்கு ஹிப்போக்காம்பஸ்
கொஞ்சம் கூடுதலாய் வேலை செய்யும்
. ஒரு நகரின் வரைபடத்தைப் பார்க்கையில் ஒவ்வொரு சாலையும்
எங்கு போகிறது
, இடையில் வரும் முச்சந்தி, நாற்சந்திகள்
எங்கெல்லாம் போகின்றன என்று நாம் இருக்கும் இடத்தையும்
, அந்த
வரைபடத்தையும் ஒப்பிட்டு ஹிப்போகாம்பஸ் ஒரு வரைபடத்தைத் தனக்குத் தானே தயாரித்துக்கொள்ளும்
.
சத்யம் தியேட்டர் போணுமா? அண்ணா சாலை ட்ராபிக்கா? பீச்
ரோடு புடிச்சு சுத்தி உள்ள போய்க்கலாம்
என்று சூழ்நிலைகளுக்கு
ஏற்ப முடிவுகளையும் எடுக்கும்
.
ஆனால் பாருங்கள், இந்த
கூகுள் மேப்ஸ் போன்ற வழிகாட்டும் செயலிகளின் வரைபடங்கள் இஷ்டத்துக்கு திரும்பும்
.
அதாவது நீங்கள் முக்கியம். வடக்கு தெற்கெல்லாம் இல்லை.
உங்களுடைய இடது, வலது, முன்,
பின் இவைதான் திசைகள். இப்படி தன்னை முன்னிலைப்படுத்தலுக்கு ஈகோசெண்ட்ரிக்
(egocentric)
என்று பெயர். ஈகோ
செண்ட்ரிக் வரைபடங்களில் ஹிப்போகேம்பஸ் திணறும்
. நாம்
திரும்புவதற்கு ஏற்ப அதுவும் சுழன்று கொண்டே இருப்பதால் லேசாய்க் கடுப்பாகும்
.
Turn right at
என்று திரும்பச் சொல்கிற கணினிப் பெண்குரலை கிட்டத்தட்ட
தன் சக்களத்தியாகவே பார்க்கும்
. அந்தக் குரல் ஒலிக்கையில் அது ந்யூரான்களைப் பயன்படுத்தும்
தேவையின்றிப் போவதால் ஹிப்போகாம்பஸ் கிட்டத்தட்ட அணைக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன
.
ஒரு ஆய்வில், கலந்துகொண்டவர்களை,
லண்டன் நகரத்தின் கணினி மாதிரி ஒன்றில் டாக்ஸி ஓட்டுநர்களாக இருக்கச்சொல்லி
இவ்வளவு வாடிக்கையாளர்களை அவர்கள் சொல்லும் இடத்தில் இறக்கிவிட வேண்டும் என்று விளக்கிச்
செய்ய வைத்தனர்
. ஒரு சாரார் வழிகாட்டும் செயலிகளைப் பயன்படுத்தலாம்.
மற்றொரு சாரார் பயன்படுத்தக்கூடாது. அந்த
ஆய்வு நடக்கையிலேயே அவர்களை மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் வழிகாட்டும் செயலிகளைப்
பயன்படுத்துபவர்களின் ஹிப்போகாம்பஸ் பெரிதாகச் செயல்படவில்லை எனவும்
,
அதுவே தானாய் வழிகண்டுபிடித்த ஆட்கள் குறைவான வேகத்தில் செயல்பட்டாலும்,
அவர்களின் ஹிப்போகாம்பஸ் சுறுசுறுப்பாக இயங்கியது.
இதில் ஆச்சரியம் என்னவெனில் லண்டன் டாக்ஸி டிரைவர்களுக்கு
ஹிப்போகாம்பஸ் சராசரியைவிட அளவில் பெரியதாக இருந்தது
. லண்டன்
நகரத்தில் கார் வைத்திருந்து
, ஓட்டத் தெரிந்திருந்தால் மட்டும் டாக்ஸி நடத்திவிட
முடியாது
. பத்தாயிரத்திற்கும் அதிகமான அந்த நகரின் தெருக்களை,
இண்டு, இடுக்குகளை ஞாபகம் வைத்துக்கொண்டிருக்க வேண்டும்.
தகுதித் தேர்வெல்லாம் உண்டு. அதனால் அவர்களின்
ஹிப்போகாம்பஸ் அளவில் சற்றே பெரிதாய் இருந்திருக்கிறது
. அதே
நேரம் வழிகாட்டும் செயலிகளைத் தொடர்ச்சியாய்ப் பயன்படுத்துவோரின் ஹிப்போகாம்பஸ் அளவில்
லேசாய்ச் சுருங்கி இருந்தது
, இந்தத் திறனெல்லாம் use it or
lose it
வகையைச் சேர்ந்ததுபயன்படுத்தாவிடில்
அந்த இடம் லேசாய் வேறு ஒரு மூளையின் பாகத்திற்குக் கொடுக்கப்படும்
.
காரணம் மொத்த மூளையும் அந்த மண்டை ஓட்டுக்குள்ளேதானே இருந்தாக வேண்டும்.
சரி, எவ்வளவோ திறன்களை
இழந்தாயிற்று
. இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே என்று இருக்கலாம்தான்.
நாம் எல்லா வேலைகளையும் திறன்களையும் தொழில்நுட்பத்திற்கு அவுட்சோர்ஸ் செய்து
வருகிறோம்
. கால்குலேட்டர்கள் மிகச் சிறந்த உதாரணம்.
ஏற்கெனவே பார்த்தபடி ஹிப்போகாம்பஸ் ஞாபகத்திறனில் சம்பந்தப்படுவதால் அந்தப்
பகுதி டிமெண்டியா
dementia, அல்ஸைமர்
alzheimer
போன்ற வியாதிகளில் முதலில் பாதிக்கப்படும் பகுதியாக
இருக்கிறது
, முதியவர்கள் வழிதவறிச் செல்லுதல்,
வழிதெரியாமல் சுற்றிச் சுற்றி வருதல் இதெல்லாம் ஹிப்போகாம்பஸ் சிதைவின் வெளிப்பாடு,
அதனால் இந்தப் பகுதியை சுறுசுறுப்பாக வைத்திருந்தால் பின்னாளில் இந்த மாதிரியான
சிதைவு நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு
. அப்படி சுறுசுறுப்பாக
வைக்க என்ன செய்யலாம்
?
     வாரமிருமுறை உங்களுக்கு அருகில்
உள்ள
, நீங்கள் சென்றிருக்காத ஒரு பகுதிக்கு எந்த வழிகாட்டியும் இல்லாமல் போய் வாருங்கள்.
(
நாய் விரட்டினால் நான் பொறுப்பல்ல.)
     போய் வந்த இடத்தின் வரைபடத்தைத்
தோராயமாய் வரைய முடிகிறதா என்று முயற்சியுங்கள்
. எத்தனை
இட
, வல திருப்பங்கள் போன்றவை.
     அலுவலகத்துக்குப் போகையிலோ வருகையிலோ
இதுவரை முயன்றிருக்காத ஒரு வழியில் சென்று பாருங்கள்
.
     ஜிபிஸ் உதவியுடன் செயல்படும் செயலிகளைப்
பயன்படுத்த வேண்டிய சூழல் வந்தாலும் அதை மட்டுமே நம்பி இருக்காமல்
,
கொஞ்சம் வழிகாட்டும் பலகைகளையும் பார்த்து ஓட்டுங்கள்.
இது ஒரு ஒட்டுமொத்தமான மூளைக்கான பயிற்சியாகவும் அமையும்.
ந்யூரான்கள் செயல்பாடு ஒழுங்குபடுத்தப்படும்மூளைச் சிதைவு நோய்களைத் தள்ளிப் போடவும் முடியும்.
ஏனெனில் ஒரு தொழில்நுட்பத்திடம் எதை இழக்கிறோம் என்ற புரிதலும் அதை எப்படி வேறுவிதத்தில்
தக்க வைக்கலாம் என்ற தேடலும் இன்றைய உலகின் அத்தியாவசியத் தேவையாகி விட்டது
.

Posted on Leave a comment

டயட் – ஹாலாஸ்யன்

சமீபகாலமாக அனேகம் அடிபடுகிற ஒரு சொல். உணவுக் கட்டுப்பாடு என்ற இடத்தில் இருந்து நகர்ந்து அது இன்றைக்கு ஒரு கொள்கைபோல உயர்ந்துவிட்டது. மதத்தைப் போல இன்று பல டயட்டுகளுக்கு குருமார்கள் இருக்கிறார்கள். அறிவியல் ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் இதில் தொடர்ச்சியான விவாதங்களும், புதுமைகளும் நிகழ்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த சமூகத்திற்கு உடல்நலத்தின் மீதான அக்கறை அதிகரிக்கிறது. தன் வாழ்க்கை முறையும், வேலை முறையும் உடல்நலத்திற்கு உகந்ததாக இல்லை என்று தனியாக மெனக்கெட ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான அறிகுறிதான்.

ஆனால் டயட் என்பதை நாம் உணவைத் தாண்டிப் பேச வேண்டியதாய் இருக்கிறது. என்ன பேத்தல் டயட் என்றாலே உணவுதானே என்கிறீர்களா? டயட் என்பதை கட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கம். சுருங்கச் சொன்னால் பத்தியம் என்பது அகராதி சொல்லும் விளக்கங்களில் ஒன்றுதான். டயட் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடம், மொழியைச் சேர்ந்த இனக்குழுவின் தனிப்பட்ட உணவுப் பழக்கம் என்ற பொருளும் வருகிறது. இன்றைய டயட்டுகள் ஏற்கனவே இருக்கும் உடல் உபாதைகளைக் களையவும், வருமுன் காக்கவுமே கைக்கொள்ளப்படுகின்றன.

 மொழியைப் போலவே உணவும் மக்களின் அடையாளம்தான். காரணம் அந்த உணவுப் பழக்கத்தின் தோற்றுவாய் அந்த மக்கள் இருந்த இடம், தட்ப வெப்பம், விளைபொருள், ஊட்டத்தேவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது. ஒரு இனக்குழுவின் உணவு முறையில் சமைக்கும் விதத்தில் நடைபெற்ற சோதனைகள், எந்த சமகால அறிவியல் அறிஞரையும் மிஞ்சியது என்றே சொல்லலாம். சோதனை, அதற்கான வெளிப்பாடு, அதன் விளைவாக ஏற்படும் புரிதல் என்பது சமகால அறிவியலின் experiment, observation and inference என்கிற கோட்பாட்டோடு ஒத்துப்போகிறது. உணவுப்பொருட்களின் வேதியியல் மூலக்கூறுகளை எப்படிக் கொடுத்தால் உடல் அதிகம் உறிஞ்சுகிறது என்ற bioavailability பரிசோதனைகளின் இறுதி வடிவமே சமையல் முறைகள்.

மேலும் உணவு என்பதற்கான உலகப் பொது விளக்கம் என்பதைக் கொடுக்க முடியாது. நமக்கிருக்கும் இறைச்சி என்ற சொல்லுக்கான புரிதலும், மேற்கு ஆசிய மக்களுக்கு இருக்கும் புரிதலும் நிச்சயம் வேறானவை. போர்கள் போன்ற அரசியல் காரணங்களால், எப்படி மொழி தாக்குதலுக்கு உள்ளாகிறதோ அதுபோலவே உணவுப் பழக்கமும் தாக்குதலுக்கு உள்ளாகும். ஒரு இனக்குழுவின் உணவு வரலாற்றை அரசியல் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். மிகச்சிறந்த உதாரணமாக நம்முடைய இனிப்பு வகைகள் மற்றும் இறைச்சி உணவு வகைகளில் முகலாயத் தாக்கம் நிறைந்திருக்கும். இது ஒரு சிக்கலான வலைப்பின்னல். உணவு என்பதை வெறும் தட்டில் வந்து விழுவதாக மட்டும் கொள்ள முடியாது. உணவு என்பது

● உணவுக்கான விளைபொருட்கள் விளையும் இடம். திருநெல்வேலியில் கிடைக்கும் திருநெல்வேலி அல்வா தாமிரபரணி நீரைப் பயன்படுத்துவதால் அந்தச் சுவை. சில சீஸ் வகைகளை உலகில் இன்னின்ன இடங்களில் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று சட்டங்கள் இருக்கின்றன
● உணவு தயாரிக்கப்படும் விதம். ஆம்பூர் பிரியாணியின் சுவைக்குக் காரணம் அதன் ஜீரக சம்பாவும் தம் கட்டுதலும்
● உணவு பரிமாறப்படும் விதம்
● மேலும் அதன் பின்னுள்ள கலாசார விழுமியங்களையும் உள்ளடக்கியது.

அப்படிப் பார்த்தால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உணவு முறைகள் இருக்கின்றன. உணவுகளின் பரிச்சயத்தைக் கொண்டு கணக்கிட்டால் பர்கர் வகையறா நிறைந்த அமெரிக்க முறை, ப்ரெட் முட்டை ஜாம் என்று காலை உணவை முடிக்கிற ஆங்கிலேய முறை, பீட்ஸா, ஸ்பகெட்டி, பாஸ்தா, லஸாக்னா என்னும் இத்தாலிய முறை, இறைச்சிகள் நிறைந்த அரேபிய முறை, நூடுல்ஸ், செஷ்வான் வகைச் சீன முறை, இப்போது எத்தியோப்பிய உணவு வகைகள் கிடைக்கும் ஹோட்டல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

ஏன் உலகம் வரை போக வேண்டும்? துணைக்கண்டம் என்ற பெயருடைய நம்நாட்டிலேயே மாநிலத்திற்கு ஒரு உணவு முறை உண்டே. ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி உணவகங்கள், ஆந்திரா மெஸ்கள், கேரள உணவகங்கள் நம் ஊரில் சக்கைப்போடு போடுகின்றன. ஒவ்வொரு நூறு நூற்றைம்பது கிமீக்கும் ஒரு உணவு முறை இருக்கிறது நம் நாட்டில்.

இப்படி உலகம் முழுக்க உணவுப் பழக்கங்களைத் தேடியதில் மிக ஆரோக்கியமான உணவுப் பழக்கமாய் மத்தியத் தரைக்கடல் Mediterranean பகுதியைச் சேர்ந்த மக்களின் உணவுப் பழக்கம் சிக்கியிருக்கிறது. மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த க்ரீஸ் போன்ற நாடுகளில் இருக்கிற உணவுப் பழக்கத்தைச் சொல்கிறார்கள்.

நம் இட்லி சாம்பாரையும், வெண்பொங்கல் வடகறியையும் ஐநா சபை உலகிலேயே சிறந்த காலை உணவாக அறிவித்திருக்கிறது என்று வாட்ஸாப்பில் வதந்திகள் வரும். ஞாபகம் இருக்கிறதா? ஐநா சபைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் யுனெஸ்கோ என்ற ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் பண்பாட்டுக் கூட்டமைப்பு பண்பாடு சார்ந்த சில விஷயங்களை கலாசார அடையாளங்களாக அங்கீகரிக்கிறது. நானூற்றி சொச்சம் விஷயங்களில் இந்தியாவில் இருந்து ஒரு பன்னிரண்டு விஷயங்களை அங்கீகரித்திருக்கிறார்கள். கேரளாவின் குதியாட்டம், ராம்லீலா நாடகம், யோகா, பஞ்சாப்பில் ஒரு இடத்தில் மட்டும் பிரத்யேக முறையில் நடைபெறும் செம்பு மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் தயாரிப்பு என்று பட்டியல் நீள்கிறது. அந்த யுனெஸ்கோ இந்த மத்தியத் தரக்கடல் பகுதியின் மெடிட்டரேனியன் டயட்டை meditteranean diet கலாச்சாரச் சின்னமாக அங்கீகரித்திருக்கிறார்கள். அவர்கள் அந்த வலைப்பக்கத்தில் இந்த உணவு முறைக்குக் கொடுத்திருக்கும் விளக்கம் பிரமிக்க வைக்கிறது.

“The Mediterranean diet involves a set of skills, knowledge, rituals, symbols and traditions concerning crops, harvesting, fishing, animal husbandry, conservation, processing, cooking, and particularly the sharing and consumption of food. The Mediterranean diet emphasizes values of hospitality, neighbourliness, intercultural dialogue and creativity, and a way of life guided by respect for diversity.

அப்படி என்ன நளபாகம், பீமபாகம் பண்ணுகிறார்கள் என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. வறுக்க, பொரிக்க, வதக்க, தாளிக்க, குழைக்க என்று எல்லாவற்றிற்கும் ஆலிவ் எண்ணை. நிறைய பச்சைக் காய்கறிகள், அதி முக்கியமாக மீன். பாலூட்டிகளின் மாமிசங்கள் அறவே கிடையாது, அல்லது மிகக் குறைந்த அளவு. முத்தாய்ப்பாய் ஒரு கிளாஸ் ஒயின். தவிர கிரேக்க மரபுப்படி வருடத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நாட்கள் விரதத்திற்காக ஒதுக்கப்பட்டவை. ஆனால் மருத்துவப் புள்ளிவிவரங்கள் சொல்வது என்னவென்றால் அந்த மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. மேலும் அனைவரும் பழம் தின்று கொட்டை போட்டு அந்தக் கொட்டைகளெல்லாம் செடியாய் முளைக்கிற வரை உயிரோடிருந்தார்கள். உலகச் சராசரி வாழ்நாளை விட குறிப்பிடத்தகுந்த அளவு அதிகம். இத்தனைக்கும் அந்த நாடுகள் மருத்துவ வசதிகளில் பின் தங்கியே இருக்கின்றன.

மருத்துவ வசதி இல்லாமல், இப்படி ஒரு எளிமையான உணவைத் தின்றால் உடல்நிலைக்கு ஒரு குந்தகமும் வராதா என்று, தேவையைத் தவிர உடலை ஒரு இம்மி கூட அசைக்க மாட்டாத, உண்ணும் உணவிற்கும் செய்கிற வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவாறு வாழும் வர்க்கம், இந்த உணவு முறையை, க்ளைமாக்ஸில் காலில் விழும் ஹீரோயின் கணக்காய் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டது. 1960கள் முதலே இந்த மெடிட்டரேனியன் டயட் மேற்குலகில் பிரபலம். ஆலிவ் ஆயில் பேரல் பேரலாகக் கொள்முதல் செய்யப்பட்டது. உடற்பருமன், இருதய நோய் போன்றவை வந்த, எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எச்சரிக்கப்பட்ட ஒரு சமூகம் இந்த டயட்டிற்கு அடிமையானது. வண்டி நல்லா ஓடும் என்று பெட்ரோல், டீசலுக்கு பதிலாய் ஆலிவ் ஆயில் ஊற்றி ஓட்டாத குறை. காரணம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, அதிகச் சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் இவையெல்லாம் அந்தச் சமூகத்தை எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் வைத்திருந்தது. ஆனால் 1960ல் இருந்து இந்த உணவு முறை மேற்குலகில் புழக்கத்தில் இருந்தாலும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்கள் ஏறிக்கொண்டுதான் போகின்றனவே தவிர இறங்கவில்லை.

இது ஏதோ திருவிழா சந்தையில் முறுக்கு பிழியும் மிஷின் வாங்கின கதையாகப் போய்விட்டது. அவன் கால் விரலால் பிழிந்தாலும் முறுக்கு வரும். வீட்டுக்கு வந்து மாவு போட்டு அழுத்தினால், ம்ம்ஹூம் பெங்களூரூவின் சில்க் போர்ட் டிராபிக் போல நகர மாட்டேன் என்று முரண்டு பிடிக்குமல்லவா? இந்த டயட், கருப்புத் துண்டுக்காரரின் ஆதர்ச நாடுகளான கிரேக்கத்திலே, ஏதென்ஸிலே இருப்பவர்களுக்கெல்லாம் வேலை செய்கிறது. ஏன் நமக்கு வேலை செய்யவில்லை என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள்.

விடை இதற்கு யுனெஸ்கோ பாடிய துதியைக் கவனித்தால் இருக்கிறது. …particularly the sharing and consumption of food. The Mediterranean diet emphasizes values of hospitality, neighbourliness, intercultural dialogue and creativity, and a way of life guided by respect for diversity. ஆக இந்த ஒட்டுமொத்த டயட்டை தட்டு நிறைய வைத்துக்கொண்டு வம்சம் சீரியல் பார்த்து வில்லனைத் திட்டிக்கொண்டு தின்றால் கொழுப்பும் குறையாது; இதய நோயில் இருந்து பாதுகாப்பும் கிடைக்காது. முக்கியமான விஷயம் உணவைப் பகிர்ந்து சாப்பிட வேண்டும். கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டு, கிண்டலோடு சிரித்து, ஒருவரின் கவலைகளை பகிர்ந்துகொண்டு, அடுத்தவர் தட்டில் என்ன குறைகிறது என்று பார்த்து பரிமாறி என ஒவ்வொரு வேளை உணவையும் கூடி உண்கிறார்கள்.

இது வெறும் சப்பைக்கட்டு அல்ல. அறிவியல் ரீதியாய் மருத்துவ ரீதியாய் நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம். சந்தோஷங்களை, துக்கங்களைப் பகிர்ந்து கொள்கையில் அது மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது. மன அழுத்தம், கிட்னியின் மேலிருக்கும் அட்ரீனல் சுரப்பிகளில் இருந்து ஹார்மோன்களை இரத்த ஓட்டத்தில் கலக்க வைக்கிறது. இவை நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதோடு மட்டுமில்லாமல், நோயெதிர் மண்டலத்தின் சீர்மையைக் குலைக்கின்றன. இந்தப் பகிர்தல் உடலளவிலும், மன அளவிலும் ஒரு மனிதனை வலிமையானவனாக்குகிறது. மேலும் ஆலிவ் ஆயில் தேவையில்லாத அடர்த்தி குறைந்த லிபிட்டை (low density lipoprotein) சேர விடாமல் தடுக்கிறது. பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துகளையும் வைட்டமின்களையும் வழங்குகின்றன. புரதத்துக்கு மீன் இருக்கிறது. சிகப்பு மாமிசம் red meat என்று அழைக்கப்படும் பாலூட்டிகளின் மாமிசம் மிகக் குறைவாக எடுப்பதால் free radicals என்னும் நச்சுகள் உடலில் சேர வாய்ப்பு மிகக் குறைவு, அப்படியே சேர்ந்தாலும் நடுநடுவே சப்பிக்கொள்கிற ஒரே ஒரு கோப்பை ஒயினில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் வெளியேற்றி விடுகின்றன.

ஆக இந்த டயட்டை, ஹோட்டலில் வாங்கிவந்தெல்லாம் சாப்பிட முடியாது. இது வெறும் உணவு முறை அல்ல. ஒரு வாழ்க்கை முறை. அப்போதுதான் அதன் முழுமையான பலன்கள் கிடைக்கும். ஆண்டாள், திருப்பாவையில் முழங்கை வரை நெய் ஒழுகுகிற அக்கார அடிசிலை “கூடி இருந்து குளிர்ந்தேலொர் எம்பாவாய்” என்றுதான் சொல்கிறாள். கூடிக் குளிர்வதால் உடல் மற்றும் மனதிற்குக் கிடைக்கும் நன்மைகளுக்கு முன்னர், முழங்கை வரை நெய் வடியும் அக்கார அடிசில் எதுவும் செய்யாது. அடுத்த பாசுரத்தில் “கறவைகள் பின்சென்று கானம் சேர்த்து உண்போம்” என்கிறாள். திருமூலர் “ஆர்க்கும் இடுமின். அவர் இவர் எண்ணன்மின்’ என்கிறார். இதுபோல பல உதாரணங்கள் சொல்லலாம். உணவை மத கலாசார சடங்குகள் நிமித்தமாய் அல்லது வேலை செய்யும் இடத்தே அமர்ந்து பிரித்து உண்ணுகிற பழக்கம் நம் மண்ணிலும் இருந்திருக்கிறது. கிராமத்துப் பள்ளிக் கூடங்களில் மதிய உணவு வேலையில் பெரிய வட்டமாய் அமர்ந்து உண்பார்கள். ஊர்த் திருவிழாவுக்கு ஒருவர் வீட்டிலும் அடுப்பெரியாமல் பெரும் சமையலாய்ச் செய்து ஒன்றாய் உண்கிற மரபு நமக்கு இருக்கிறது. வெகு தீவிரமாய், உணவு சமைத்தலை, பரிமாறலை, உண்ணுதலைப் பற்றிய புரிதல் நமக்குக் கடத்தப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அந்த மரபுதான் ஆப்பத்துக்குத் தேங்காய்ப்பால், அடைக்கு வெல்லம் என்று வக்கனையைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் வேலைச் சூழல், குடும்பச் சூழல் இந்த கூடி உண்ணுதற்குச் சில சமயம் தடை போடுகிறது. ஆனால் சில பழக்கங்களை வழக்கமாக்கினால் உடல் மற்றும் மன நலம் பேணப்படும்.

அ. வழக்கமான உணவுப்பழக்கத்திற்குச் சொல்லப்படும் அறிவுரைதான். உணவில் எல்லா சத்துக்கும் இடம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பச்சைக்காய்கறிகளும் பழங்களும் முக்கியம். ஆலிவ் ஆயில் இருந்தால் நன்று. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஏனெனில் அது விலை அதிகம். இதை எழுதிய ஆள் வாங்கச் சொல்லியிருக்கிறார் என்று யாரிடமாவது என்னை வாங்கிக் கட்டிக்கொள்ள வைத்து விடாதீர்கள்.

ஆ. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை விரதம் இருக்கப் பழகுங்கள். விரதம் எனில் சுத்த விரதம். நீர் மட்டும் குடியுங்கள். செரிமான மண்டலம் தன்னைத் தானே பழைய நிலைக்குக் கொண்டுவர இந்த அவகாசம் அவசியம். (இது குறைந்த இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளர்களுக்கு அல்ல.)

இ. இறைச்சி உண்பவர்கள் எனில் வெகுநாள் பதப்படுத்தப்பட்டதை வாங்கி உண்ணாதீர்கள்.

ஈ. ஒரு வேளை உணவாவது குடும்பத்தினருடனோ, வெளியில் தங்கியிருப்பவர்கள் எனில் உடன் தங்கி இருப்பவர் உடனோ அமர்ந்து உண்ணுங்கள்.

உ. அந்த உடனமர்ந்து உண்ணும் பொழுதை தொலைக்காட்சியோ, கைபேசியோ களவாடாமல் இருக்கட்டும். ஏனெனில் அந்த உணவை விட அந்தப் பொழுதில் நடக்கும் பரிமாறல் முக்கியம். சோறு பரிமாறல் அல்ல உணவு பரிமாறல்.

ஆரம்பத்தில் ஆண்டிராய்டில் இருந்து தலை நிமிர்த்துவது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். பின்னர் அந்த நேரத்தின் அழகு புரியும். இந்த டயட்டை பழக்கத்திற்குக் கொண்டு வாருங்கள். உடலுக்கும் மனதுக்கும் வலு சேருங்கள்.

Posted on Leave a comment

மறைநீர் – ஹாலாஸ்யன்

என் உயர்நிலைப்பள்ளி வேதியியல்
ஆசிரியர், நீரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கையில் ரொம்ப அழகாக ஒரு வாக்கியம் சொன்னார்.
“Water has no business to be a liquid.” நீரானது திரவ நிலையில் இருக்க வேண்டிய அவசியமே
இல்லை. சால்கோஜென்ஸ் chalcogens என்று அறியப்படுகிற ஆக்ஸிஜன் தொகுதித் தனிமங்களில்
ஆக்ஸிஜன் மட்டும் அந்தக் குடும்பத்தின் சட்ட திட்டங்களுக்குள் அடங்காமல் திரிகிறது.
அத்தொகுதித் தனிமங்கள் ஹைட்ரஜனோடு வினைபுரிந்து கிடைக்கிற மூலக்கூறுகள் எல்லாம் வாயுக்களாக
இருக்கவேண்டும் என்னும் கட்டுப்பாடு இருக்கையில், ஹைட்ரஜன் பிணைப்பு hydrogen
bonding என்னும் ஒரு விந்தையின் காரணமாக இதன் கொதிநிலை மட்டும் நூறு டிகிரியாகி அறை
வெப்பநிலையில் நீரை ஒரு திரவமாக நிலைநிறுத்தியிருக்கிறது. அந்தப் பண்பு இல்லாமல் நீரானது
ஒரு வாயுவாக இருந்திருந்தால் பூமி எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை கூடச் செய்து
பார்க்க முடியாது. கடல்கள் இல்லை, பாசிகள் தாவரங்கள் இல்லை, ஒளிச்சேர்க்கை இல்லை, கிட்டத்தட்ட
உயிர்களே இல்லை. ஆதலால் நீர், பூமியில் உயிருக்கு ஆதாரமாக இருக்கிறது. இன்று வரை பிற
கோள்களில் நாம் திரவ நிலையில் நீர் இருக்கிறதா என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறோம். காரணம்
நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் நீர் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. உயிர்களுக்கு
மட்டுமில்லை; பூமியின் வெப்ப நிலையைக் கட்டுக்குள் வைப்பது, பருவக்காற்றுகள், நில அமைப்பு
என நீர் நம் பூமிக்கு மிகவும் அவசியமானது.

இதெல்லாம் அதிகபட்சம் பன்னிரண்டாங்கிளாஸ்
படித்த ஆளுக்குத் தெரிந்திருக்கும். ஐந்தாவது படிக்கும் ஒரு குழந்தையிடம் நீரை எதற்கெல்லாம்
நாம் பயன்படுத்துகிறோம் என்று கேட்டால், குடிக்க, குளிக்க, சமைக்க, துலக்க என்று பதில்
எழுதி மார்க் வாங்கிக்கொண்டு போய்விடும். தண்ணீரின் பயன்பாடு என்பது நமக்குத் தெரிவது
அவ்வளவுதான். உலகம் முழுக்க நீரின் உபயோகத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். வேளாண்மை,
தொழிற்சாலை, வீட்டு உபயோகம். இந்த மூன்றுக்குள் எப்படியும் எல்லாப் பயன்பாடும் வந்துவிடும்.
சுழலும் ஏர்ப்பின்னது உலகம் என்பதால் 70% நீர் வேளாண்மை சார்ந்த செயல்பாடுகளுக்குச்
செலவழிக்கப்படுகிறது. சுமார் 22% தொழிற்சாலை, 8% சதவிகிதம் மட்டுமே வீட்டு உபயோகம்.
இதெல்லாம் உலகளாவிய புள்ளி விவரங்கள்.
சரி. கொஞ்சம் யதார்த்தம் பேசுவோம்.
இரண்டு உழக்கு சாதம் வைக்க எவ்வளவு நீர் தேவைப்படும்? என்ன அரிசி என்று எதிர்க்கேள்வியெல்லாம்
கேட்கக்கூடாது. எப்படியும் ஆளுக்கு ஒரு கணக்கு சொல்வார்கள். உண்மை என்ன தெரியுமா. தோராயமாய்
1000 லிட்டர். இரண்டு உழக்கு அரிசிக்கு குக்கரில் 1000 லிட்டர் தண்ணீர் வைக்க முடியாதுதான்.
ஆனால் இந்தக் கணக்கு, வயலுக்கு நீர்ப் பாய்ச்சி, உழுது, விதைத்து, மருந்தடித்து, தீட்டி,
உறைபோட்டு, கடையில் இருந்து வாங்கி வந்து, கடைசியில் நீங்கள் குக்கரில் அரிசியோடும்,
குக்கரிலும் ஊற்றும் நீரையெல்லாம் சேர்த்துதான். குக்கர் வைக்க மட்டும் ஆகும் நீரை
கணக்கில் இருந்து ஒதுக்கினாலும் அது பெரும் அளவல்லவா? இப்படி நம்மைச் சுற்றி இருக்கும்
ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நீர் மறைந்திருக்கிறது. அது அதன் உற்பத்தியில் செலவாகி இருக்கலாம்.
கழுவிச் சுத்தப்படுத்துதலில் செலவாகி இருக்கலாம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக்
கொண்டு போகையில் செலவாகி இருக்கலாம். வாகன எரிபொருட்களாக நாம் பயன்படுத்தும் பெட்ரோல்,
டீசல் இப்படி எல்லாமே எண்ணெய் வயல்களில் நீரை உட்செலுத்தி உறிஞ்சப்படுபவைதானே. அதிலும்
நீர் செலவாகி இருக்கிறதல்லவா? ஆக பெட்ரோலியத்தையும் தண்ணீரால் அளக்க முடியும். இப்படி ஒவ்வொரு பொருளுக்குள்ளும்
நீர் மறைந்திருக்கிறது. அது வெளியே தெரியாது. இதைத்தான் மறைநீர் என்கிறார்கள்.
Virtual water.

இந்தக் கோட்பாட்டை முதன்முதலில்
அறிமுகப்படுத்தியது ஜான் ஆந்தனி ஆலன் அல்லது டோனி ஆலன். லண்டனின் கிங்ஸ் கல்லூரியில்
பேராசிரியர். அடிப்படையில் அவர் ஒரு நிலவியல் அறிஞர். இந்த மறைநீர்க் கோட்பாட்டை நிறுவியது
அவர்தான், மத்தியக் கிழக்கு நாடுகளில், உணவை இறக்குமதி செய்வது மூலம் நீரைச் சேமிக்கலாம்
என்று சொன்னவர். இந்தக் கோட்பாட்டுக்காக அவருக்கு 2008ம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோம் வாட்டர்
ப்ரைஸ் வழங்கப்படுகிறது. அந்த விருது ஒரு சூழியலுக்காக வழங்கப்படுகிற நோபல் பரிசு போல.
நீர் உபயோகத்தை மறைநீர்க் கோட்பாடு
மூன்று விதமாகப் பிரிக்கிறது. நீலநீர் blue water, பச்சை நீர் green water, சாம்பல்
நிற நீர் gray water. இந்த நிறங்களின் பெயரால் சொல்லப்படும் லிட்டர் கணக்கு அளவீடுகள்
திரும்பப் பயன்படுத்த முடியாமையைக் குறிக்கின்றன. நீல நீர் என்பது பூமியின் பரப்பில்
அல்லது நிலத்துக்கு அடியில் கிடைக்கிற நன்னீர். ஆறு, குளம், கிணறு, ஏரி இவையெல்லாம்.
பச்சை நீர் என்பது மழை நீர். மறைநீரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு நிச்சயம் பச்சை
நீர்க் கணக்கு வரும். சாம்பல் நிற நீர் என்பது ஏதேனும் ஒரு காரணியால் மாசுபடுகிற நீர்.
அது பூச்சிக்கொல்லி உரம் என வேளாண்மை சார்ந்ததாகவோ அல்லது வேதிப்பொருள், கழிவு எனத்
தொழிற்சாலை சார்ந்ததாகவும் இருக்கலாம்.
சில மறைநீர் கணக்குகள் பிரமிக்க
வைப்பவை‌. ஒரு பொருளின் உற்பத்திக்கு எப்படியும் எங்கேயாவது நீர் தேவைப்படுகிறது. நாம்
விலையாகக் கொடுப்பது பணம் மட்டுமல்ல, நீரும்தான்.

ஓர் உதாரணம் பார்ப்போம். போகிற
போக்கில் எடுத்து மாட்டிக்கொண்டு போகிற ஒரு பருத்திச் சட்டை. பருத்தி உற்பத்திக்குத்
தேவையான பச்சை நீரும், நீல நீரும் ஆயிரக்கணக்கான லிட்டர். மேலும் உணவுப் பயிர்களை விடப்
பணப் பயிர்கள் அதிக நீர் வேண்டுபவை. காவிரி தமிழகத்திற்குக் கிடைக்காமல் போனதில் மாண்ட்யா
பகுதிகளில் சிறுதானியம் விளைந்த வயல்களில் கரும்பு ஆகியவை விளைவிக்க ஆரம்பித்ததுதான்.
அவை மழைநீர், நிலத்தடி நீர், பிற பாசன நீர் போன்றவற்றை பகாசுரனாய் உறிஞ்சும். பார்க்கப்போனால்
பருத்தி ஒரு கார்போஹைட்ரேட். செல்லுலோஸால் ஆன இழைகளைக் கொண்டது. அந்த செல்லுலோஸ் உருவாகும்
ஒளிச்சேர்க்கை வினையில் நீர் ஒரு முக்கியமான வினைபொருள். நீர் இல்லாமல் செல்லுலோஸ்
வராது. இதைத்தவிர அள்ளி இறைக்கப்படுகிற உரம், பூச்சிக்கொல்லிகள் சாம்பல் நிற நீர் கணக்கில்
வரும். அடுத்தாக அறுவடை செய்த பருத்தியை விளைநிலத்தில் இருந்து ஆலைகளுக்குக் கொண்டு
செல்லுதல், அங்கு பருத்தியைக் கழுவுதல், mercerization எனப்படும் பருத்தியை மிருதுவாக்கும்
வினைக்குச் செலவாகும் நீர், பின்னர் சாயமேற்றி நெய்தல் ஆகியவற்றில் செலவாகும் நீர்,
கடைகளுக்குக் கொண்டு செல்ல ஆகும் எரிபொருளின் பின்னிருக்கும் நீர், இவை எல்லாம் ஒரு
பருத்திச் சட்டைக்குப் பின்னால் இருக்கும் மறைநீர். இவை எல்லாவற்றையும் கூட்டிக் கணக்குப்
போட்டால் ஒரு சட்டைக்கு 2,700 லிட்டர்
தண்ணீர் கணக்கு வருகிறது. இது உற்பத்திக்கு மட்டும். இதனை இன்னும் அந்தச் சட்டையின்
ஆயுட்காலம் முடியும் வரை இழுத்தாலும் அது இன்னும் ஓர் ஆயிரம் லிட்டர் வரை கணக்கு வரலாம்.
சட்டைக்குள் 2700 லிட்டர்.

உண்மையில் பகீரென்று இருப்பது இறைச்சிதான்.
மறைநீர்க் கோட்பாட்டில் இறைச்சி
என்பது இரட்டை வேலை. ஏற்கெனவே உணவுப் பொருள் உற்பத்தி என்பது ஏகப்பட்ட ஆயிரம் லிட்டர்களைக்
குடித்திருக்க அதை ஒரு மிருகத்திற்குப் போட்டு வளர்த்து அதன் இறைச்சியை உண்பது என்பது
சிக்கலே. ஆனால் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் சைவ சாப்பாடு என்பது கட்டுப்படியாகாது.
இடமில்லை என்பது நிதர்சனம். ஆனால் இறைச்சிகளுக்காக இயங்கும் பண்ணைகள்தான் எமன்கள்.
மாட்டிறைச்சி என்ற உதாரணத்தை எடுத்துக்கொண்டால், பிறந்ததில் இருந்து கொல்லப்படும் வரையில்
ஒரு மாடு தோராயமாய் 1,300 கிலோ தானியங்களைத் தின்கிறது. அதைத்தவிர 7,200 கிலோ வைக்கோல்
மற்றும் பிற தீவனங்களைத் தின்கிறது. இந்த இரண்டிற்கும் மறைநீர் கணக்கு 30,60,000 லிட்டர்கள்.
இதனைத்தவிர அது நீராகவே 24,000 லிட்டர் நீரை அருந்துகிறது. கொன்று, இறைச்சியைப் பதனப்படுத்துதலுக்கு
ஒரு 7,000 லிட்டர்கள். மறைநீர் மட்டும் 30,91,000 லிட்டர்கள். இத்தனையும் செய்தால்
ஒரு மாட்டில் இருந்து 200 கிலோ இறைச்சி கிடைக்கும். வகுத்தால் ஒரு கிலோ இறைச்சிக்கு
15,400 லிட்டர் மறைநீர். சென்னையில் ஓடுகிற ஒரு தண்ணீர் லாரி 12,000 லிட்டர்கள். ஒரு
கிலோ இறைச்சிக்கு ஒரு லாரிக்கு மேல் தண்ணீர் செலவாகிறதல்லவா? சடாரென்று சமணராகி மொத்த
உலகையும் கொல்லாமைக்கு மாற்றக் கட்டளையிடும் முன்னர் சற்றுப் பொறுங்கள்.
தினம் காலை டபுள் ஸ்ட்ராங்குக்கும்
கூடுதலாய் மேலே கொஞ்சம் டிகாக்ஷன் ஊற்றி, கொதிக்கக் கொதிக்கக் தொண்டைக்குள் ஊற்றிக்கொள்கிறோமே
காபி, அதனிடம் மாட்டிறைச்சிப் பண்ணைகள் பிச்சை வாங்க வேண்டும். ஒரு கிலோ காப்பிப் பொடிக்கு
18,900 லிட்டர் மறைநீர். பில்டரில் ஊற்றுகிற வெந்நீரை விட இந்தக் கணக்கு சுடுகிறதோ?
செம்மறி ஆடு – 10,400 லிட்டர்
பன்றி – 6,000 லிட்டர்
ஆடு -5,500 லிட்டர்
கோழி -4,200 லிட்டர்
சீஸ் – 3,180 லிட்டர்
அரிசி – 2,500 லிட்டர்
சோயா – 2,145 லிட்டர்
கோதுமை -1,830 லிட்டர்
சர்க்கரை – 1,780 லிட்டர்
பார்லி – 1,425 லிட்டர்
சோளம் – 1,200 லிட்டர்
மேலே உள்ளவை எல்லாமே ஒரு கிலோவுக்கு
செலவாகும் மறைநீரின் அளவு, லிட்டர்களில்.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும்
இப்படி மறைநீர் விலை போட முடியும். இதனைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் லேப்டாப்பில
சுமார் 60 லிட்டர் மறைநீர். இது அச்சேறப்போகும் தாளில் கிலோவுக்கு சுமார் 10 லிட்டர்.
அப்படி இப்படி மொத்தமாய் ஒரு நாளுக்கு
ஒருவருக்குக் குடிக்க, குளிக்க என சுமார் முந்நூறு லிட்டர் நேரடியாக நீரைப் பயன்படுத்துகிறோம்.
மறைநீரையும் சேர்த்தால் ஒருநாளுக்கு எவ்வளவு தெரியுமா தலைக்கு மூவாயிரத்து இருநூறு
லிட்டர்கள்.
 ரொம்ப விஜயகாந்த் படம் மாதிரி போகாமல், இதில் என்ன
சிக்கல் என்று பார்க்கலாம். பத்தாயிரம் வருடப் பழக்கத்தில் என்ன பிரச்சினை? இறைச்சியும்
வேளாண்மையும் ஆதிகாலத்தில் இருந்து நாம் செய்ததுதானே. ஏன் இதனைப் புதிதாக ஒரு பிரச்சினையாகப்
பார்க்கவேண்டும் என்று கேள்வி வரும். அன்றெல்லாம் உணவுப் பொருள் ஏற்றுமதி இந்த அளவில்
கிடையாது. ஏன், உடை ஏற்றுமதியே இந்த அளவு கிடையாது. தேவையைத் தவிர உபரிதான் ஏற்றுமதி
செய்யப்பட்டது. ஆனால் இன்று பொருளாதாரங்கள் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தைச் சார்ந்திருக்கின்றன.
அவை அரசியலைப் பாதிக்கின்றன. வேளாண்மை, உற்பத்தி என்று இருந்த ஒரு பொருளாதாரத்தின்
அச்சு இன்றைய தேதிக்கு நாடுகளுக்கிடையேயான வணிகத்தை அச்சாகக் கொண்டு சுழன்றுகொண்டிருக்கிறது.
அதாவது, பொருளாதாரம் விரிவடையும்
முன்னர், சென்னையில் உற்பத்திக்குச் செலவான மறைநீர் சென்னையிலேயே பெரும்பான்மையாகக்
கொள்முதல் செய்யப்பட்டது. அதிகபட்சம் அந்த நாட்டின் தலைநகர் வரை செல்லும். மிகச்சிறிய
அளவிலான பொருட்களே கடல்கடந்து சென்றன. ஆனால் இன்று உலகம் முழுக்க பல நகரங்கள் ஏற்றுமதியை
மட்டுமே நம்பி இருக்கின்றன. அவை கப்பலில் ஏற்றி அனுப்புவது பொருள் மட்டுமல்ல. நீரும்
சேர்ந்துதானே. அதாவது என் நகரத்தில்
இருந்து ஒரு பொருளை நான் ஏற்றுமதி செய்கையில் என் நகரத்து நீரையும் நான் ஏற்றுமதி செய்கிறேன்.
இஸ்ரேல் நாட்டில் வளமெல்லாம் இருந்தும்,
ஆரஞ்சுகள் பயிர் செய்யப்படுவதில்லை. காரணம் ஒரு க்ளாஸ் சாறு தரும் ஆரஞ்சை உற்பத்தி
செய்ய ஆறு க்ளாஸ் நீர் வேண்டியிருக்கிறது. அதனால் இஸ்ரேல் ஆரஞ்சுகளை இறக்குமதி மட்டுமே
செய்கிறது. இதன் மூலம் அது தன் மறைநீரைச் சேமிக்கிறது. அதனால் நாம்பாட்டுக்கு அன்னியச்
செலாவணி கிடைக்கிறதென்று ஏற்றுமதி செய்துகொண்டே போனால் நீரும் காணாமல் போகுமல்லவா?
அப்பொழுது அதற்கு என்ன செய்யலாம்?

     அரசு சில கொள்கைகளை இதனைப் பொருத்து மாற்றி அமைக்க
வேண்டும். மறைநீர் அதிகம் செலவாகும் பொருட்களை விடக் குறைவாகச் செலவாகும் பொருட்களை
ஊக்கப்படுத்தலாம். அவர்களுக்கு மானியம் அளிக்கலாம்

     நம் தேவை அதிகமின்றி ஏற்றுமதியை மட்டும் நம்பியிருக்கும்
உணவுப் பயிர்களை, பணப்பயிர்களைக் குறைத்துக்கொண்டு வேறு மாற்றுகளை யோசிக்கலாம்

     பெரும்பண்ணைகளில் இருந்து வருகிற பதப்படுத்திய இறைச்சியை
விட, அந்த அந்த ஊரின் இறைச்சிக் கடைகளில் இறைச்சி கொள்முதல் செய்யலாம். சிறிய அளவிலான
இறைச்சிக் கூடங்கள் பண்ணைகள் அளவுக்கு நீரை உறிஞ்சுவதில்லை

     சில பொருட்களைச் செலவானால் போகிறது என்று இறக்குமதி
செய்துவிடலாம். பணம் நாளை திரும்ப வரலாம். ஆனால் நீர் வருமா என்பது சந்தேகமே.

     ஏற்றுமதி வாணிபத்தை மட்டுமே நம்பியிருக்கிற நிலையை
மாற்றிக்கொள்ள வேண்டும். கார் உற்பத்தி போன்ற மறைநீர் முழுங்கி மகாதேவன்களைக் கொஞ்சம்
கட்டுக்குள் வைக்கவேண்டும்.

     எரிபொருள் உற்பத்தியிலும் நீர் இருப்பதால், எவ்வளவுக்கு
எவ்வளவு எரிபொருள் சேமிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நீரையும் சேமிக்கிறோம் என்று அர்த்தம்.

     தொழிற்சாலைகள் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த முடியாத
சாம்பல் நிற நீரை வெளியிடுவதால் அவற்றின் தரக்கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க வேண்டும்.
நீர் சுத்திகரிப்புச் சட்டங்களையும் தண்டனைகளையும் இன்னும் கடுமையாக்க வேண்டும்.

     இதனைத்தவிர நேரடிப் பயன்பாட்டில் இருக்கும் நீரையும்
முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்

இதுதான் நாட்டுக்கும் நாமிருக்கும்
பூமிக்கும் நல்லது. நாம் ஒரு நாளில் போர் போட்டு உறிஞ்சுகிற, பம்ப் போட்டு இறைக்கிற,
கழிசடையாய் ஆக்கி அனுப்புகிற நீரை, பூமி அதே அளவு கீழே கொண்டு போய்ச் சேர்க்க சில மாமாங்கங்கள்
ஆகும். ஆகவே மறைநீரையும் கொஞ்சம் மனதில் வைப்போம்.
Posted on Leave a comment

அதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு – ஹாலாஸ்யன்

உயிர் என்ற ஒன்று தோன்றிய போதில் இருந்தே அந்த உயிருக்கு எதனோடாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் இருந்திருக்கும். அது, இங்கே உணவு கிடைக்கிறது என்பதாக இருக்கலாம். உணவு என்னுடையது என்பதாக இருக்கலாம். இது என் பேட்டை, நீ ஏன் உள்ளே வந்தாய் என்ற மிரட்டலாம் இருக்கலாம். இணைசேரக் கூவுதலாய் இருக்கலாம். ஓர் உயிர் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எதையேனும் தொடர்புகொள்ள முயன்றுகொண்டே இருந்திருக்கும். கூட யாருமே இல்லாத முதல் உயிரி என்ன செய்திருக்கும்? யாருடன் அல்லது எதனுடன் பேசியிருக்கும்? என்ன சொல்ல எத்தனித்திருக்கும்? அனைத்தையும் கேட்கும் திறன் கொண்ட காதுகள் இருப்பின் இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் உயிர்களும் நிற்காமல் பேசுவது கேட்கும். மனிதனான நாம் சைகைகள், குகை ஓவியங்கள், ஓலமிடுதல் தொடங்கி, மொழி உருவாகி, பேச்சு, இசை, மொழி, நடனம், கூத்து என்று எல்லாமே ஏதோ ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

தொடர்பு கொள்ள வேண்டும் என்பதன் நீட்சிதான் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப், வீடியோ ஆடியோக்கள் எல்லாம். பார்க்கப்போனால் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் பசி‌, தாகம், உறக்கம், காமம் போன்ற இயற்கை உந்துதலில் சேர்க்கலாம். NLP (Neuro Linguistic Programming) என்னும் மனிதர்களின் தொடர்புகளைப் பற்றிய இயலில் ஓர் அடிப்படைக் கோட்பாட்டைச் சொல்வார்கள்‌, we are always communicating என்று. தான் கண்ணால் பார்க்க முடிந்தவர்களிடம்‌ மட்டும் பேச ஆரம்பித்த மனிதன் தொழில்நுட்பத்தால் உருவமின்றி ஒலிகள் மூலம் ‌பேச ஆரம்பித்தான். இன்று இரண்டையும் கலந்து வீடியோ கால் பேசுகிறான். ஒரு யூட்யூப் வீடியோ மூலம் பல்லாயிரக்கணக்கான பேரைப் போய்ச் சேர முடிகிறது. அந்தத் தொடர்பு வேட்கை உந்தித்தள்ள ஒரு‌ கட்டத்தில் இயந்திரங்களோடு பேச ஆரம்பித்தான். ஐஃபோனில் சிரி, ஆண்ட்ராய்டில் கூகுள் அஸிஸ்டென்ட், ஹைக்கில் நடாஷா என்று போய்க்கொண்டிருக்கிறான். தன்னைச் சுற்றி இருக்கும் கருவிகள் எல்லாமே தன்னோடு பேச வேண்டும், தன் பேச்சைச் கேட்க வேண்டும் என்ற அடிப்படை ஆசை மனிதனுக்கு உண்டு. அப்படி எல்லாக் கருவிகளும் ஒருங்கிணையும் ஒரு தளமாக இணையம் இருக்கிறது. தேர்ப்பாகன் கையில் எல்லாக் குதிரைகளின் லகானும் இருப்பதுபோல எல்லாக் கருவிகளையும் இணையம் கோத்து நம் கையில் கொடுத்திருக்கிறது.
கம்பி வழி இணையத்தில் ஒரு சிக்கல் நாம் எல்லாரும் அறிந்ததுதான். அது கிடைக்கும் இடத்தில் நாம் உட்கார்ந்திருக்க வேண்டும். கம்பிவழி இணையம் நம்பகத்தன்மை உடையது, அதனாலேயே இன்னமும் அலுவலகங்களில் அதையே பயன்படுத்துகிறார்கள். இன்னமும் RJ45 எனத் தொழில்நுட்ப வட்டங்களில் அறியப்படும் ஈதர்நெட் கம்பிகள் கோலோச்சிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கையடக்கக் கருவிகளுக்கு இந்தக் கம்பிவழி இணையம் தோதுப்படாது. நாம் நமக்கு விரும்பியவாறு அமர்ந்தோ, நடந்தோ, படித்தோ இணையத்தில் மேய முடியாது. மேலும் தற்போது காபி மேக்கர், அடுப்பு, கார், வீட்டில் உள்ள பிற எலெக்ட்ரிக் சாதனங்கள் எல்லாமே இணையத்தில் நுழைந்து நம் கைக்குள் வரும் internet of things யுகத்தில் கம்பிவழி இணையம் நிச்சயம் பழங்கஞ்சிதான்.
நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. ஏற்கனவே வைஃபை என்ற ஒன்றை வைத்திருக்கிறோம். Wireless Fidelity என்பதன் சுருக்கமே WiFi. பதினேழு வருடங்களுக்கு முன் சந்தைக்கு வந்த இந்தத் தொழில்நுட்பம் வயரில்லா இணையத்தை வழங்குவதில் தற்போதைக்கு ஜித்தன். வயர்கள் மூலமாக மோடத்திற்கு (modem) வந்து சேரும் இணையத்தை ரேடியோ அலைகளில் ஏற்றிக் காற்றில் பரவவிடுகிறது. விண்வெளியில் சிறு புள்ளிகளாய் உருவாகி வெடிக்கும் கருந்துளைகளைத் தேடும் ஒரு சோதனை தோற்றுப்போக, அந்தச் சோதனையில்தான் வைஃபையின் அடிப்படைத் தொழில்நுட்பம் கிடைத்துக் காப்புரிமை பெறுகிறார்கள். தோராயமாய் இருபது மீட்டர் வரை அந்த ரேடியோ அலைகள் மூலம் நாம் இணையத்தை அணுகலாம். ரேடியோ அலைவரிசையில் 2.4 GHz மற்றும் 5 GHz (முறையே நொடிக்கு 240 கோடி அல்லது 500 கோடி அதிவெண் கொண்ட அலைகள்) என்ற இரு அதிவெண்களில் இயங்கும் இந்தத் தொழில்நுட்பம் இப்போது நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. வைஃபை அலைவீச்சால் உடல்நலத்திற்கு எதுவும் பாதிப்பில்லை என்றாலும் பின்வருபவை வைஃபையின் குறைபாடுகள்
1.    ரேடியோ அலைகள் சுவர்களைத் தாண்டியும் பயணிப்பதால் அவற்றை நம்மை அறியாமல் இன்னொருவர் பயப்படுத்த முடியும். வீட்டின் சுவருக்கு வெளியில் இருந்து நம் வைஃபையின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உடைத்து உட்புகுந்து தகவல் திருட முடியும். இதன் பாதுகாப்பு அடுக்ககளாகக் கூறப்படும் WPA, WEP போன்ற எல்லாமே வலு குறைந்தவைதான்
2.    சில இடங்களில் இந்த ரேடியோ அலைகள் பிற கருவிகளின் செயல்பாட்டில் குறுக்கிடும். உதாரணமாக மருத்துவமனையின் உயிர்காக்கும் உபகரணங்கள், அணு உலைகள். இங்கிருக்கும் கருவிகளோடு வைஃபையின் ரேடியோ அலைக் குறுக்கீடு பெரும் ஆபத்தாக முடியும்.
3.    வைஃபை பயன்படுத்தும் ரேடியோ அலைவரிசை அளவில் குறுகியது. பல கருவிகள் இணைய இணைய, ட்ராபிக் ஜாம் ஆன சாலை போல வேகம் குறைந்து விடும். ஆனாலும் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல் வேறு மாற்று எதுவும் இல்லாததால் நாம் வைஃபையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில்தான் ஜூலை 2011ல் ஒரு TED சொற்பொழிவில், எடின்பரா பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத்துறை பேராசிரியர் திரு. ஹரால்ட் ஹாஸ், ஏன் ஒளியைத் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு தளத்தை திறந்து வைக்கிறார். அவருடைய யோசனை என்னவெனில் உட்கட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் விளக்குகளை வைத்து ஏன் தகவல்களை அனுப்பக்கூடாது என்பதுதான். அதே சொற்பொழிவில் அவர் ஒளியுமிழிகள் (LED – Light Emitting Diode) தரும் ஒளியில் தகவலை ஏற்றி அதைக்கொண்டு ஒரு காணொளியை ஓட வைக்கிறார். வைஃபை போல அவர் லைஃபை LiFi (Light Fidelity) என்னும் சொல்லை உருவாக்குகிறார்.
 ஒளியைக் கொண்டு தகவல் தொடர்பு என்பது மனித குலத்திற்குப் புதிதில்லை‌‌. தீப்பந்தங்களின் அசைவுகளில் போர் வியூகங்கள் வகுத்திருக்கிறோம். இன்றுவரை கலங்கரை விளக்கங்களில் உச்சியில் இருக்கும் ஒளிகள் கப்பல்களுக்கு ஏதோ ஒரு தகவலைப் பரிமாறுகின்றன. இன்றைய உலகில் தொன்னூறு சதவிகித தகவல்தொடர்பைக் கைக்குள் வைத்திருக்கும் கண்ணாடி இழைக் கம்பி (OFC – Optical Fibre Cable) வழித் தகவல் தொடர்பு என்பது ஒளியால் நிகழ்வதுதான். அதன் அடிப்படைக் கோட்பாடு முழு அகப் பிரதிபலிப்பு. Total Internal Reflection என்பார்கள். இப்படி ஒளியால் தொடர்பு‌கொள்ளும் வழிமுறைகளுக்கான தொழிற்கட்டுமானத்தை VLC (Visible Light Communication) என்கிறார்கள்‌. அதனுடைய ஒரு பகுதியாகத்தான் இந்த லைஃபையை அறிமுகப்படுத்துகிறார்கள்‌.
நாம் பயன்டுத்தும் மின்விளக்குகளில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. ஆரம்பக்கட்ட குண்டுபல்புகள், பின்னர் குழல் விளக்குகள், சி.எஃப்.எல் விளக்குகள், இப்போது சமீபகாலமாய் எல்.ஈ.டிக்கள் என்று அறியப்படும் ஒளியுமிழிகள். இந்த வகைகளில் எல்.ஈ.டியைத் தவிர மீதி இருப்பவை எல்லாம் மின்சார (எலக்ட்ரிகல்) சாதனங்கள். ஆனால் எல்.ஈ.டி என்பது ஒரு மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) சாதனம். அதாவது அதிவேகமாக அந்த விளக்குகளின் ஒளியுமிழ்த் திறனைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு இருக்கையில் நம்‌ வாசல் வரை வரும் இணையத்தை வீட்டுக்குள் இருக்கும் கருவிகளுக்கு ரேடியோ அலைகளில் ஏற்றாமல் கண்ணால் காணக்கூடிய ஒளி அலைகளில் ஏற்றி அனுப்புதல். விளக்கின் பிரகாசத்தைக் கூட்டியோ குறைத்தோ அல்லது அவற்றை அணைத்துப் போடுதல் போன்றவற்றால் தகவலை ஒளியில் ஏற்றுதல்.
பிரகாசத்தைக் கூட்டிக் குறைத்து அனுப்புதல் என்றவுடன் அக்னி நட்சத்திரம் படத்து க்ளைமேக்ஸ் மாதிரியெல்லாம் இல்லை. சொல்லப்போனால் நாம் வீட்டில் பொருத்தியிருக்கும் குண்டு பல்பு நொடிக்கு ஐம்பது முறை அணைந்து அணைந்து எரிகிறது. ஆனால் அது நம் கண்களுக்குத் தெரியாது அல்லவா? அது அப்படி துடிப்பதற்குக் காரணம், நாம் பயன்படுத்தும் மாறுதிசை மின்னோட்டத்தில் அதிர்வெண் அதுதான். நொடிக்கு ஐம்பது முறை தன் திசையை மாற்றிக்கொள்ளும். அதனால்தான் ட்ரான்ஸ்பார்மர்களில் 50 Hz என்று குறிப்பிட்டிருப்பார்கள். நாம் தகவல் பரிமாறும் வேகம் இதையெல்லாம்விட அதி‌கம். ஒளியின் அதிர்வெண் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணை விடப் பல மடங்கு அதிகம். லைஃபைக்கான உட்கட்டுமானம் மிக எளிதானது. வீட்டின்‌ உத்திரங்களில் அல்லது படுக்கையை ஒட்டிய விளக்குகளை எல்.ஈ.டிக்களாக மாற்றி அவற்றோடு தகவல்களை ஒளியில் ஏற்ற பிரகாசத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்யும் கருவியை இணைத்துவிடுவது.
நியாயமாக சில சந்தேகங்கள் வரவேண்டும். நம்மைச்சுற்றி சாதாரணமாக ரேடியோ கதிர்கள் இல்லை. அதனால் வைஃபை மோடம் அனுப்பும் ரேடியோ கதிர்களை நம் கருவிகள் எளிதில் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் நம்மைச்சுற்றி எப்போதும் ஒளி இருக்கிறதல்லவா? அது இந்த ஒளியோடு குறுக்கிடுமே?
இந்த விளக்குகள் அளிக்கும் தகவல்களைப் பெறுவதற்கு அவர்கள் சிறிய அளவிலான போட்டோ டிடெக்டார்ஸ் எனப்படும் ஒளிவாங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவை பிரகாசம் மாறாமல் எரிகிற விளக்குகளின் ஒளியைக் கண்டுகொள்ளாது. அதாவது ஒரு இசைக்கச்சேரியில் ஸ்ருதிப்பெட்டியை யாரும் ரசித்துக் கேட்பதில்லை‌ அல்லவா? அதுபோலவே அந்த ஒளிவாங்கிகள் தகவல் சுமந்து வரும் ஒளிகளை‌‌ மட்டும் கண்டுகொள்ளும். மற்றதைப் பரிசீலிக்காது.
அடுத்ததாய் லைஃபையைப் பயன்படுத்த வேண்டுமெனில் எப்போதும் விளக்கு எரிந்தபடியே இருக்க வேண்டுமே என்று. ஆம். ஆனால் டே அன்ட் நைட் கிரிக்கெட் போட்டிகளில் எரியும் நியான் விளக்குகளைப் போல பிரகாசமாய் எரியத் தேவையில்லை. நைட் லேம்ப்‌ போல எரிந்துகொண்டிருந்தாலும் போதும்.
மிக முக்கியமான சந்தேகம் நேரு காந்தி போன்றவர்கள் மெழுகுவர்த்தி ஒளியில், தெருவிளக்கு ஒளியில் படித்தார்கள் என்று சொல்கிறாற்போல் நாமும் விளக்கின் அடியிலேயே நிற்கவேண்டுமா? இதற்கும், சார்ஜ் ஏற்றிக்கொண்டே பயன்படுத்த ப்ளக் பாயிண்டின் அடியில் நிற்பதற்கும் என்ன வித்தியாசம் என்று? நாம் விளக்குக்கு அடியிலேயே நிற்கத் தேவையில்லை. சுவரில் பட்டு பிரதிபலிக்கும் ஒளியே இன்றைய அதிவேக இணையம் அளவுக்கு வேகத்தைத் தரக்கூடியது.
லைஃபை அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. லைஃபையின் சிறப்பம்சங்கள் என்னவெனில்
1.    நம் சுவர்கள் பெரும்பாலும் ஒளிபுகாத தன்மை கொண்டதால் நம் இணையத்தை வெளியாள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. எதுவாக இருந்தாலும் வீட்டுக்குள் மட்டுமே இயங்கும். ஒரு அறைக்குள் இருக்கும் விளக்கு அந்த அறைக்குள் மட்டுமே இணைய சேவையைத் தரும். அறைக்கு நான்கு விளக்குகள் வைத்துவிட்டால் குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றிச்சுற்றி வந்து பயன்படுத்தலாம்.
2.    கண்ணால் காணக்கூடிய ஒளியின் அலைவரிசை அளவு. ஒட்டுமொத்த ரேடியோ அலைவரிசையின் அகலத்தை விட ஒளியின் அலைவரிசை ஐம்பது சதவிகிதம் அதிகமானது. வைஃபை என்பது ஒத்தையடிப்பாதை எனில் லைஃபை நூறடி ரோட்டிற்குச் சமம்.
3.    வேகம். வைஃபை தருகிற வேகத்தை விட லைஃபை எக்கச்சக்க மடங்கு வேகமானது. சோதனை முயற்சிகளில் லைஃபை 224 gigabits per second வேகத்தைச் சாத்தியப்படுத்துகிறது‌. அந்த வேகம் நொடிக்கு 27 ஜிபி என்ற கணக்கு வரும். புரியும் கணக்கில் சுமார் பதினெட்டு ஹெச்.டி படங்களை ஒரு நொடியில் பதிவிறக்கலாம். ஆனால் இதற்கு நம் இணைய சேவை வழங்கும் நிறுவனம் அவ்வளவு வேகமாக இருக்கவேண்டும். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
4.    லைஃபையை எந்தக் கவலையும் இன்றி மருத்துவமனைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஒளி அங்கெல்லாம் எந்தவிதக் குறுக்கீடும் செய்யாது.
5.    நீருக்கடியில் ஆராய்ச்சிக்காக இறங்கும் கருவிகளும், நீர்மூழ்கிகளும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தமுடியாது. காரணம், அவற்றை நீர் உறிஞ்சி விடும். ஒலியைப் பயன்படுத்தினால் அவை நீர்வாழ் பாலூட்டிகளான திமிங்கிலம், டால்பின் போன்றவற்றைப் பாதிக்கின்றன. ஆனால் ஒளிமூலம் தொடர்பு கொள்ளலாம். பிரச்சினையில்லை
இம்மாதிரியான நன்மைகள்தான் லைஃபையை எப்போ வரும் என்று தொழில்நுட்ப ஆர்வலர்களை காத்திருக்க வைக்கிறது. 2011 TED சொற்பொழிவுக்குப் பின்னர் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் Purelifi என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கி இதைச் சந்தைப்படுத்த நிதி திரட்டியிருக்கிறார்‌. அவர் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பும் நிதியும் கிடைத்தன. ஜப்பானிய சீன நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் தயாராகியிருக்கின்றன. சோதனை முயற்சியாக சில அலுவலகங்களில் உள்ள கருவிகளை லைஃபை மூலம் இணைத்திருக்கிறார்கள்‌‌. எல்லாமே போலாம் ரைட் என்று விசில் கொடுத்திருக்கின்றன.
2016ல் மற்றொடு TED சொற்பொழிவில் சூரிய சக்தித் தகடுகள்‌ மீது தகவல் பொதிந்த ஒளியை விழச்செய்வது மூலம் தகவல் தொடர்பைச் செய்து காண்பித்திருக்கிறார். இதன் மூலம் கம்பி‌வழி‌ இணையம் சாத்தியப்படாத இடங்களில் இந்தத் தகடுகள் மீது தகவல் பொதிந்த லேசர் ஒளியை விழச்செய்து இணையத்தைக் கொண்டுசேர்க்க முடியும் என்று நிறுவியிருக்கிறார். Harold Haas TED talks என்று இணையத்தில் தேடிப் பாருங்கள்.
லைஃபை எங்கெல்லாம் பயன்படலாம்?
    வீடுகளுக்குள் இருக்கும் கருவிகளை internet of things மூலம் ஒருங்கிணைக்க உதவும்
    தெருவிளக்குகளை எல்.ஈ.டிக்களாக மாற்றினால் அதன் மூலம் அந்தத் தெருவைப் பற்றிய தகவல்களைப் பயனருக்கு அளிக்க முடியும்.
    ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் ஒன்றோடொ‌ன்று தொடர்பு கொள்ள இது அதிவேக முறையாக இருக்கும்‌. பத்தடியில் ஒரு பாதாள சாக்கடைப் பள்ளம் எனப் பின்னால் வரும் வண்டியைச் சட்டெனெ எச்சரிக்கலாம்.
    கடல்‌ ஆராய்ச்சியில் தொடர்புக்கு இது ஒரு வரப்பிரசாதம்
    பல்பொருள் அங்காடிகளில் அந்தந்தப்பகுதி விளக்குகளை லைஃபை ஆக்குவதன் மூலம் பொருட்களைப் பற்றிய தகவல்கள், விளம்பரங்கள், கடையில் இருக்கிறதா இல்லையா போன்ற தகவல்களை உடனுக்குடன் வாங்குபவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்
    நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் கேபிள் பதித்து இணையத்தைக் கொண்டுசேர்க்க முடியாத இடங்களில் சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளால் இணையத்தைக் கொண்டு சேர்க்க முடியும். இதன்மூலம் டிஜிட்டல் டிவைட் என்னும், இணையம் கிடைக்கும் மற்றும் கிடைக்காத மக்களுக்கிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடியும்
அலாவுதீன் கதைகளில் வரும் அற்புத விளக்கை நாம் எல்லாருமே கதைகளில் கேட்டிருப்போம். அவனுக்குக் கைகட்டி சேவை செய்து வேண்டியதையெல்லாம் பெற்றுத்தரும் பூதம், அந்த விளக்குக்குள் இருப்பதைப்போல், நம் வேலைகளில் முக்கால்வாசியைச் செய்யும் இணையம் எதிர்காலத்தில் இப்படி விளக்குகள் வழியாகத்தான் வெளிவரப்போகிறது. அந்த அற்புத விளக்கிற்குக் காத்திருப்போம்.


Posted on Leave a comment

பீவர்களின் அணை – ஹாலாஸ்யன்


சிறுபிராயத்தில் வாழைப்பழம் ஒன்றை மரத்தினுள் வைத்துவிட்டு எடுக்க முடியாமல் திணறிய ஒரு குருவியின் கதையை எனக்குச் சொல்வார்கள்.

தாத்தா… தாத்தா…
அரைக்காசுக்கு ரெண்டு வாழைப்பழம் வாங்கினேன்
ஒண்ணைத் தின்னேன் ஒண்ணை பொந்துக்குள்ள வச்சேன்
பொந்தும் பொந்தும் பொருதிப் போச்சு
பொந்த வெட்டித் தராத தச்சன்
தச்சன அடிக்காத ராஜா
ராஜா காட்டை அழிக்காத மான்
மானைப் பிடிக்காத வேடன்
வேடன் வலையைக் கடிக்காத எலி
எலியைப் புடிக்காத பூனை
பூனையைக் கட்டி வைக்காத பாட்டி
பாட்டியை அடி தாத்தா

பழத்தை எடுக்கவும், எடுக்க வைக்கவும் ஒவ்வொரு ஆளாகக் குருவி மேல்முறையீடு செய்யும். ஒவ்வொரு ஆளிடமும் கதையைத் தொடக்கத்தில் இருந்து சொல்லும். குழந்தைகள் இதைக் கேட்கையில் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி நினைவு வைத்துக்கொள்ளும் ஆற்றல் வளரும்.

தச்சனில் இருந்து பாட்டி வரை செய்ய மறுத்ததை தாத்தா கருணைகொண்டு செயல்படுத்துவார். தாத்தா பாட்டியை அடிக்கப்போக, பாட்டி பூனையைக் கட்டிப் பிடிக்க, அது எலியைத் துரத்த, வேடனுடைய வலையை எலி கடிக்க என்று பின்னாலேயே போய், கடைசியில் தச்சன் குருவிக்கு மரப்பொந்தைத் திறந்து வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்து விடுவான். கேட்க மிகவும் சுவாரசியமாய் இருக்கும் இந்தக் கதையில், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது.

உணவுச் சங்கிலி (food chain) பற்றிப் படித்திருப்போம். தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் கரியமில வாயுவை நீருடன் சேர்த்து கார்போஹைட்ரேட்களை உற்பத்தி செய்யும்.  அவற்றைத் தாவர உண்ணிகள் சாப்பிட, மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகளை வேட்டையாடி உண்பதன் மூலம், தாவரங்கள் உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெறுகின்றன. இவை எல்லாம் இறந்த பின்னர் வல்லூறு போன்ற பிணந்தின்னிகள் (scavengers) அந்த உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாமிசத்தை உண்ணும். மீதம் கிடக்கும் எலும்பு உரமாகும். இப்படித்தான் உணவுச் சங்கிலி நிறைவடையும். இந்தச் சங்கிலியில் எந்த உயிரினத்தின் எண்ணிக்கை குறைந்தாலும் சிக்கல்தான். உதாரணமாய் புலிகள் குறைந்தால் தாவர உண்ணிகளுக்குக் கொண்டாட்டம். அவை ஏகத்துக்கும் பெருகி காடு முழுக்க மேயும். மரமாக எதையும் வளர விடாமல் செடியிலேயே மொட்டையடிக்கும். மண்ணில் புல்லோ செடியோ இல்லையெனில் மண் அரிக்கப்படும். சத்து நிறைந்த மண் அரிக்கப்பட்டுவிட்டால் தாவர வளர்ச்சி பாதிக்கப்படும். இதை எப்படிச் சரிசெய்வது என்பதன் ஒரு வழியைத்தான் நாம் முதலில் சொன்ன கதையில் பார்த்தோம். அதில் நாம் பார்த்த தச்சன், ராஜா என எல்லோரையும் ஒன்றன்மேல் ஒன்றாய் இருக்கும் உணவுச் சங்கிலிபோல் எடுத்துக் கொள்வோம். பிரச்சினை உள்ள ஒரு சங்கிலியில், அதன் மேல்மட்ட ஆளை சரிசெய்கையில் எல்லாம் வழிக்கு வருகிறதல்லவா? உணவுச் சங்கிலியில் இப்படிப்பட்ட மேல்மட்ட ஆளை apex predator என்கிறார்கள். ஆற்றலை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுகையில், அதிக உயிரிகள் இருக்கும் பாதையையே இயற்கை தேர்ந்தெடுக்கும். நிறைய வயிறுகள் நிறைகையில் அது சமநிலையுடன் இயங்கும். அப்படிக் கொன்று புசிக்கும் ஓர் உயிரினம் மறையத் தொடங்கினால் அது சூழியலுக்குப் பெரும் சேதமாக முடியும்.

 இவ்வாறு வேட்டையாடும் ஒரு விலங்கின், உணவுச் சங்கிலியின் மேல்மட்டத்தில் இயங்கும் ஒரு விலங்கின் எண்ணிக்கை மாறுவது, அடிமட்டம் வரை பாதிக்கும். இதனை trophical cascading என்கிறார்கள். Troph என்னும் சொல் உணவு தொடர்பானது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் ஓநாய்களின் எண்ணிக்கை சில காரணங்களால் குறையத் தொடங்கியது. ஓநாய்களின் உணவான கடமான்கள் (Elk) அதிகம் வேட்டையாடப்பட்டதால் உணவு குறைந்தும், பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை வேட்டையாடப் போகையில் சுடப்பட்டும் ஓநாய்கள் நூற்றுக் கணக்கில் இறந்தன. இதன் காரணமாய்க் கடமான்களை உணவாகக் கொள்ள ஆளில்லாமல், வசவசவென்று பெருகி புல்வெளிகளையெல்லாம் மேய்ந்து தீர்த்தன. வில்லோ மரங்களின் கன்றுகளை அவை  தின்றதால், புதிதாய் மரங்கள் இன்றி, மண் அரிப்பும் பறவைகள் இடம் பெயர்வதும் நடந்தது. கொல்ல ஆளில்லை என்னும் கர்வத்தில் அவை பேட்டை வஸ்தாது போல் திரிந்தன. கொரித்துண்ணி (Rodents) வகைகளில் காடுகளின் நலனுக்கு முக்கியமானதாய்க் கருதப்படும் பீவர்கள் (Beavers), மரங்களின் அடிப்பாகத்தைக் கொறித்துக் கொண்டு போய் அணை கட்ட, மரம் இல்லை. அணை இல்லாமல் நீர் தேங்காததால் மீன்வளம் பாதிக்கப்பட்டது.  பீவர்கள் கட்டும் அணையில் தேங்கும் நீரே மண்ணின் ஈரப்பதத்துக்கு ஆதாரம். அணையும் எனவே நீரும் இல்லாததால் மண்ணில் ஈரப்பதம் குறைந்தது. இது மண்ணின் நுண்ணுயிரி விகிதத்தைப் பாதித்தது.  அங்குள்ள வ்யோமிங் (Wyoming) மாகாணத்தின் Yellowstone National Park  இந்தச் சூழியல் சிக்கலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் சூழியல் ஆராயப்பட்டு, வனவியல் மற்றும் சூழலியர் அறிஞர்கள் Trophical Cascadingஐ நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டனர். அதற்காக அருகில் இருக்கும் காடுகளில் இருந்து 41 ஓநாய்கள் இங்குக் கொண்டு வந்து விடப்பட்டன. அதன்பிறகு நடந்த மாற்றங்கள் ஆச்சரியமூட்டுபவை.

1.    ஓநாய்கள், அங்குப் பல்கிப் பெருகியிருந்த கடமான்களை வேட்டையாடின. இதனால் அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்தது.
2.    தன்னை வேட்டையாடும் ஓர் உயிரினம் இருப்பதை உணர்ந்த அந்த மான்கள், இடம்விட்டு இடம் நகர்ந்துகொண்டே இருந்தன. அதனால் ஒரு மரம் முழுவதுமாக மொட்டையடிக்கப்படுவது நின்று போனது.
3.    மாட்டிக்கொண்டால் தப்புவதற்கு கடினமான பள்ளத்தாக்குகளும் தாழ்வான பகுதிகளும் ஆபத்து என்று உணர்ந்து, அங்கெல்லாம் செல்வதை மான்கள் தவிர்த்தன. இதனால் அங்குப் புற்களும் மரங்களும் செழித்து வளர்ந்தன.
4.    மரங்கள் வளரத் தொடங்கி, மண்ணை வேர்கள் பிடித்துக் கொண்டதால், காற்றாலும் நீராலும் ஏற்படும் மண் அரிப்பு தடுக்கப்பட்டது.
5.    செழித்து வளர்ந்த மரங்கள், வண்டுகளையும் தேனீக்களையும் அழைத்துவந்தன. அவற்றால் நிறையப் பழங்கள் உருவாகவும், கரடிகளும் பறவைகளும் வந்தன.
6.    மரங்களின் அடிப்பாகத்தைக் கொறித்துப்போய் பீவர்கள் அணைகட்டின. பீவர் அணைகளுக்கு வில்லோ மரங்கள் முக்கியம். நிறைய வில்லோ மரங்கள் இருக்கவும் அவை நிறைய அணைகள் கட்டின. அங்குத் தேங்கிய நீரில் மீன்கள் வளர்ந்தன. மண்ணை அரிக்காத நதி தன் பாதையை சீர்செய்துகொண்டு அழகாகப் பாயத்தொடங்கியது. ஓநாய்கள் வருவதற்கு முன் ஒரே ஒரு பீவர் அணை இருந்த பூங்காவில் இன்று ஒன்பது அணைகள் இருக்கின்றன.

இப்படி கண்ணுக்குத் தெரிய பல மாற்றங்கள். அந்த ஓநாய்கள் பல மிருகங்களைக் கொன்று தின்பது மட்டும்தான் நாம் அறிவோம். ஆனால் அவை ஏகப்பட்ட உயிர்களை வாழ வைக்கின்றன. புல் நுனியில் இருந்து பூதாகரமான கரடிகள் வரை. 2015ம் வருடத்தில், ஓநாய்கள் கொண்டுவந்து விடப்பட்ட பத்தாவது ஆண்டில், அந்தப் பூங்கா ஆச்சர்யப்படத்தக்க வகையில் மாறியிருக்கிறது. வெறும் 41 ஓநாய்களை அங்கு விடுதல் என்பது ஒரு முழு உணவுச் சங்கிலியை மீட்டெடுத்துக் கொண்டுவந்திருக்கிறது.

ஓர் உயிரினத்திற்கு வலுவான சந்ததி உண்டாவது வலுவான பெற்றோரால் மட்டுமே சாத்தியம். அப்படி வலுவில்லாத ஓர் உயிருக்குப் பிறக்கும் உயிரும் வலுவில்லாமல்தானே இருக்கும். அதைச் சரிசெய்ய, வேட்டையாடுகையில் வலுவில்லாத விலங்கைக் குறிவைத்து வேட்டையாடி உண்டு, அந்த விலங்கின் ஜீன் தொகுப்பை (gene pool) ஓநாய்கள் செறிவூட்டி வைக்கும்.

இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நமக்குள் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

●     நம்முடைய காடுகளையும், தேசியப் பூங்காக்களையும் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்?
●      மேற்குத் தொடர்ச்சி மலைகள், சுந்தரவனக் காடுகள் – இப்படித் தனிச்சிறப்பு வாய்ந்த காடுகளின் உணவுச் சங்கிலியை நாம் பதிவு செய்து வைத்திருக்கிறோமா?
●     ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருக்கும் மரங்கள் மற்றும் உயிரிகளை (Endemic species) பற்றியும் அவற்றின் உணவுச் சங்கிலிப் பங்களிப்பு பற்றியும் ஆய்வுகள் இருக்கின்றனவா?
●      இருக்கிறதெனில் சமநிலை பிறழ்ந்த வனங்களில் இதுபோன்ற trophic cascading செய்ய வாய்ப்புகள் உண்டா என்று ஆராய்ந்திருக்கிறோமா?
●      குறிப்பிட்ட உயிரினங்களின் முக்கிய உணவாக (staple food) இருக்கும் மரங்களையும், குறிப்பிட்ட உயிர்களாலேயே பரப்பப்படும் மர விதைகளையும் பற்றிய பட்டியல் இருக்கிறதா?

வெறுமனே விலங்குகளையும் காடுகளையும் காப்பாற்ற வேண்டும் என்று குரல்கொடுப்பது வேலைக்காகாது. வனவியல் அறிஞர்கள், காட்டில் வாழும் காட்டை வீடாகக் கொண்ட பூர்வகுடிகளின் தொல்லறிவோடு கை கோக்காத வரை இதற்குத் தீர்வு கிடைக்காது. அறுப்பதற்கு அல்லாமல் கொஞ்சம் அணைப்பதற்கும் நம் கைகள் வனங்களை நோக்கி நீளட்டும். அங்கிருந்து கிளைகள் எல்லாம் ஆதூரமாக நம்மை நோக்கி நீளும். அதுதான் நாம் அந்த இயற்கை அன்னைக்குச் செய்யும் உண்மையான கைம்மாறு.