Posted on 1 Comment

என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்

எழுத்து என்பது நிலத்தடியில் உள்ள நீரூற்று போல. நீரூற்றுள்ள நிலம் சில்லென்றிருக்கும். எறும்புப் புற்றைப்போல் அங்கே வடிவமற்ற கற்பனைகள் உருவாகிக் கொண்டிருக்கும். இதை ஆழ்ந்து கவனிப்பவர், உள்ளுக்குள் இருக்கும் நீரோட்டத்தைத் துளையிட்டு வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபடுவர். அம்புலிமாமா வாசிக்கும் காலத்திலேயே அடிமனசில் ஒளிந்திருந்த இந்த நீரூற்றை நானும் அறிந்தேன். Continue reading என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்

Posted on 1 Comment

இமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்


பகுதி 2

குஞ்சி நோக்கி செல்லும்
வழியெங்கும் தேவதாரு மரங்களும் பைன் மரங்களும் தென்படுகின்றன. தவிர காற்றோடு ஏதோ ஒரு
நறுமணம் பரவுகிறது. வாசனை மரங்கள் பலவும் இங்கிருப்பதாக அறிந்தோம். தவிர இங்கு போஜ்பத்ரா
மரங்களும் அதிகம். இந்த மரத்தின் பட்டையில்தான் விநாயகர் பாரதம் எழுதினாராம். போஜ்பத்ரா
மரப்பட்டைகளை இங்கு விற்கிறார்கள். இது வீட்டில் இருப்பது நல்ல அதிர்வுகளைத் தரும்
என்றார்கள். அதில் ஏதேனும் படம் வரையலாமென்று நானும் கொஞ்சம் மரப்பட்டைகள் வாங்கிக்
கொண்டேன்.
நம் பயணத்தில் பல
இடங்களில் பாலங்களின் மூலம் நதியைக் கடந்து நேபாள பகுதியிலும் கூட பயணிக்கிறோம். புத்தியிலிருந்து
குஞ்சி செல்லும் பயணப்பாதையும் கடுமையாகவே இருக்கிறது. மலையின் விளிம்பில்தான் பயணம்
தொடர்கிறது. குதிரைகள் நம்மைப் பயமுறுத்துவது போல மிகவும் விளிம்பில்தான் செல்லும்.
கீழே பார்த்தால் தலைசுற்றும். குதிரை சற்று தடுமாறினாலும் நம்கதி அதோகதிதான். சிலநேரம்
குதிரைக்காரர் குதிரையைப் பிடித்துக் கொள்ளக்கூட மாட்டார். எனக்கோ இந்தி தெரியாது.
பயமாக இருக்கிறது என்று சொல்லத் தெரியாமல் டர்ர் டர்ர் என்பேன். அவர் சிரித்தபடி என்னிடம்
ஏதோ சொல்ல, எனக்குப் புரியவில்லை. ஹிந்தி தெரிந்த ஒருவர் அதை மொழி பெயர்த்தார். குதிரை
மீது நம்பிக்கை வைக்கச் சொல்கிறார். அது பத்திரமாகவே அழைத்துச் செல்லுமாம். உண்மைதான்
மூன்றாம் நாள் குதிரைப் பயணம் பழகி விட்டது.
தினமும் காலையில்
ஓட்ஸ் கஞ்சி, ரொட்டி போன்ற எளிய சிற்றுண்டி நமக்கு அளிக்கப்படும். பின்னர் பயணத்தின்
நடுவழியில்தான் ஏதேனும் ஓரிடத்தில் கிராமவாசிகளிடம் நமக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
சிறிய தகரம் வேய்ந்த உணவகம் இருக்கும். இரண்டு மூன்று மர பெஞ்சுகளும், நீண்ட மேசைகளும்
இருக்கும். அங்கே யாரேனும் இருவர் நமக்கு சிரித்த முகத்தோடு உணவு தருவார்கள். சிலநேரம்
இளம் பெண்களும் சிறுவர்களும் கூட உணவளிப்பார்கள்..
படிக்கிற வயதில்
அவர்கள் இவ்வேலையைச் செய்கிறார்களே என்று நினைத்தபோது உடன் வந்தவர் அவர்களிடம் பள்ளிக்கு
செல்ல மாட்டீர்களா என்று கேட்டார். இன்று பள்ளி விடுமுறை என்றான் அச்சிறுவன். ஒரு கால்
ஊனமான மாற்றுத் திறனாளியாகவும் இருந்தான். பள்ளி எங்கே இருக்கிறது என்று கேட்க அவன்
சொன்ன பதில் வியக்க வைத்தது. டார்ச்சுலா வரை அவர்கள் தினமும் இதே மலைப்பாதையில் நடந்து
பள்ளிக்குச் செல்கிறார்கள் என்றதும் எனக்கு மயக்கமே வந்தது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு
போகவர நாற்பது கி.மீ தூரம். அப்படியென்றால் எப்போது கிளம்புவார்கள், எப்போது பள்ளி
முடிந்து வருவார்கள் என்று யோசித்தால் தலை சுற்றியது. அதுவும் அந்தப் பையன் கால் வேறு
சரியில்லாதவன். ஆனால் அவர்கள் இதுகுறித்து அலட்டிக் கொள்ளவேயில்லை. எங்களுக்கு மலைப்பாதையில்
நடந்து பழகிவிட்டது. என்ன… நிலச்சரிவு ஏதும் ஏற்படாத வரை கவலையில்லை என்று சர்வசாதாரணமாக
அவன் சொன்னதும் எனக்கு சாப்பிடக்கூட முடியவில்லை. உள்ளே குறையொன்றுமில்லை என்று எம்.எஸ்.ஸின்.
குரல் கேட்டது. வாழ்கிற இடத்திற்குத் தேவையானவாறு அவர்களது உடலமைப்பும், உள்ளுறுப்புகளும்
பலமாகவே இருக்கும் போலும். இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டால் அதை எதிர்கொள்வதற்கான
சக்தியும் தானாகக் கிடைத்து விடுமோ?
சியாலேக்கிலிருந்து
குஞ்சி செல்லும் கடுமையான வழியில் கர்பியாங் என்ற கிராமம் இருக்கிறது. கடுமையான மலையேற்றத்தில்
இந்த கிராமத்தைக் கடக்கிறோம். வீடுகள் வரிசையாக இருக்கின்றன. பல வீடுகள் இரண்டடுக்கு
மாடிகளோடு கூட இருக்கின்றன. வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய கதவுகள், ஜன்னல்கள் என்று
பார்க்கவே அழகாக இருக்கிறது. மிஞ்சிப்போனால் மொத்த மக்கள்தொகையே அறுநூறு பேர்களுக்குள்தான்.
உருளைக்கிழங்கு, வெங்காயம், கோஸ் போன்றவற்றைப் பயிரிடுகிறார்கள். ஆண்கள் குதிரைக்காரர்களாகவும்
இருந்து யாத்ரிகர்களை அழைத்துச் செல்கிறார்கள். பெண்கள் கம்பளி ஆடைகள் பின்னி விற்கிறார்கள்.
மக்கள்தொகை குறைவாக இருந்தாலும் இங்கு படித்தவர்களின் எண்ணிக்கை தொண்ணூறு சதம் என்கிறது
சென்சஸ் கணக்கு. கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. வீட்டின் மாடிகளுக்கு செல்ல, தடித்த மூங்கில்
மரங்களைக் குடைந்து அதனுள் படிக்கட்டுகள் போல செய்து ஏணி மாதிரி சார்த்தி வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகள் ரோஜாப்பூ போல சிவந்த கன்னங்களோடு, கம்பளி குல்லாவும், காலில் கிழிந்த ஷூவும்
அணிந்து அழகிய சிரிப்புடன் நம்மைப் பார்க்கிறார்கள். குழந்தைகளைக்கூட இரண்டு மூன்று
வயதிலேயே மலைப்பாதையில் நடந்து செல்ல பழக்கி விடுவார்களாம்.
ஆனால் இந்த கிராமத்தை
மூழ்கும் கிராமம் என்கிறார்கள். ஏனெனில் பெருகி ஓடும் காளி நதி இந்த கிராமத்தின் நிலப்பரப்பை
அரித்துச் செல்வதாகவும், ஆண்டுக்கு ஒன்றிரண்டு சென்டிமீட்டர் இந்த கிராமம் பூமிக்குள்
அழுந்தி வருவதாகவும் கூறுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் நிலச்சரிவு, எப்போதும்
பெய்யும் மழை, மண் அரிப்பு என்ற ஆபத்தான சூழலில் வறுமை இவர்களை அன்போடு தழுவிக் கொண்டிருக்கிறது.
அத்யாவசியப் பொருட்களுக்காக கர்பியாங், குட்டி, குஞ்சி, நாபிடாங் போன்ற ஏழு எல்லையோர
கிராமங்கள் நேபாளம் மூலம் வரும் சீன உணவுப் பொருட்களைத்தான் நம்பியிருக்கின்றன. அல்லது
மலைப்பாதையில் ஐம்பது கி.மீ தூரம் நடந்து சென்று டார்ச்சுலாவிலிருந்து வாங்கி வரவேண்டும்.
அதைவிட நேபாளம் சென்று சீனப் பொருட்களை வாங்கி வருவது அத்தனை கடினமல்ல என்று நினைக்கிறார்கள்.
மூன்று நாடுகளின் எல்லையோரத்தில் இருப்பதால் சொந்த நாட்டிலேயே அனாதைகள் போல தாங்கள்
வாழ்ந்து வருவதாக இங்குள்ள கிராமத்து முதியவர் ஒருவர் வருத்தப்படுகிறார். இந்திய அரசு
தங்களுக்கு ரேஷன் பொருட்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் கர்பியாங்
சந்தை மிகவும் புகழ் பெற்றது. மிகச்சிறந்த முறையில் இவர்கள் வியாபராம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களது பொருட்களை நேபாளம் சீனா போன்ற நாட்டினர் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
1962ல் நடந்த இந்திய சீனப் போருக்குப் பிறகு இந்நிலை தலைகீழாக மாறி விட்டது. இத்தனை
கஷ்டத்திலும் வெகுதூரம் சென்று இங்குள்ள குழந்தைகள் கல்வி கற்பதை நிறுத்தவில்லையென்பது
எத்தனை பெருமையான விஷயம்! எல்லா வசதிகள் இருந்தும்கூட நாம் சுற்றி இருப்பவர்களையும்,
அரசையும் எத்தனை குறைகள் கூறுகிறோம்!
குஞ்சியை அடைவதற்கு
முன்னமே ஓரிடத்திலிருந்து ஆதிகயிலாயத்தின் சிகரம் தெரியும். அதைப்பார்த்தபடி, நாங்கள்
அனைவரும் அரைமணி ஓய்வெடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவழியாக் குஞ்சி முகாமை அடைந்தோம்.
எல்லைக்காவல் படையினர் தேநீர் கொடுத்து வரவேற்றார்கள். அரைவட்டமாக ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை
கவிழ்த்து தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. உள்ளே தரை முழுவதும் மெத்தைகளும் தலையணைகளும்
ரஜாய்களும் இருந்தன. தங்குமிடத்திற்கு அருகிலேயே உணவுக் கூடம். அங்கேயே பிரார்த்தனைகள்
செய்யவும் வசதி உண்டு.
குஞ்சி முகாமிலிருந்து
இரவு பகல் எந்நேரமும் அன்னபூர்ணா மலைத் தொடரை ரசிக்கலாம். சுற்றிலும் பசுமை போர்த்திய
மலைகள் சூழ, குஞ்சி முகாம் இந்த யாத்திரையில் ஒரு முக்கிய இடம். ராணுவ முகாமும் கூட
அது. தவிர, குஞ்சியிலிருந்து இரண்டு பயணப் பாதைகள் பிரிகின்றன. ஆங்கிலத்தில் Y என்று
எழுதினால் அதில் இடப்பக்கம் மேல்நோக்கி செல்வது ஆதிகயிலாயம் நோக்கியும், வலப்புறம்
மேல்நோக்கி செல்வது ஓம் பர்வதம் அமைந்திருக்கும் நாபிடாங் நோக்கியும் செல்கிறது.
இந்திய வழிமூலம்
கயிலாயம் செல்பவர்கள் நடுவழியிலேயே தென்படும் ஆதிகயிலாயக் காட்சியை தரிசித்துவிட்டு
குஞ்சியிலிருந்து காலாபானி வழியாக நாபிடாங் சென்று அங்கிருந்து லிப்புலேக் கணவாய் வழியாக
இந்திய எல்லை கடந்து சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் தக்ளகோட் வழியே கயிலை மானசரோவர்
செல்வார்கள். உத்தர்கான்ட் மாநில அரசு மூலம் ஓம் பர்வதம் செல்லும் நமக்கு எல்லை தாண்ட
அனுமதியில்லை.
நாங்கள் குஞ்சியிலிருந்து
காலாபானி நோக்கி சென்றோம். காலாபானி (கருப்பு நதி) என்னும் இடத்தில்தான் நாம் வழியெங்கும்
கண்ட ஆக்ரோஷமான, பெயருக்கேற்றாற்போல் பிரவாகமாக ஓடும் காளி நதி உற்பத்தியாகிறது. காவேரி
நதி போலதான் காளி நதியும் ஒரு சிறிய தொட்டி போன்ற இடத்தில் உற்பத்தியாகிறது. அந்த இடத்தையே
ஒரு கோவிலாகக் கட்டியிருக்கிறார்கள். கோவிலுக்கு வெளியே இரு பெரிய தொட்டி போன்ற இடத்திலும்
காளி நதி நிரம்பியிருக்கிறது.
இந்தக் கோவிலின்
எதிர்ப்புறமிருக்கும் ஓங்கி உயர்ந்ததொரு மலைத்தொடரின் மேற்புறம் சிறிய வட்டவடிவ துவாரம்
தெரிகிறது. இதை வியாச குகை என்றார்கள். அதனுள் கொடி மரம் போல சிறிய குச்சி தெரிகிறது.
இந்த குகையில்தான் வியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதம் எழுதியாக நம்பப்படுகிறது. யாருமே
அந்த இடத்திற்கு செல்லமுடியாது. ஆனால் ராணுவ வீரர் ஒருவர் ஹெலிகாப்டர் உதவியோடு அதன்
மேற்புறம் சென்று, நூலேணியின் உதவியோடு அந்த குகைக்கு சென்றதாகவும் அவர்தான் அங்கே
அடையாளமாக ஒரு கழியை நட்டு வைத்திருப்பதாகவும் ஒரு இராணுவ வீரர் தெரிவித்தார்.
காலாபானியில் நாங்கள்
தங்கியிருந்த முகாமிலிருந்து சூர்யோதயத்தில் தகதகவென இரண்டு மலைச் சிகரங்களைக் கண்டோம்.
விண்ணில் இரண்டு பாம்புகள் படமெடுத்தாற்போல் தெரியும் அம்மலைகளை நாக பர்வதங்கள் என்றே
அழைக்கிறார்கள். ஒன்று நாக் பரவத். மற்றொன்று நாகினி. வியக்க வைக்கிறது இதன் அழகு.
காலாபானியில் வெந்நீர் ஊற்றுகளும் உள்ளன.
காலாபானியிலிருந்து
நாபிடாங் நோக்கி செல்லும் வழி சற்று சமவெளிதான் என்றாலும், வெயில் கொளுத்தியது. பாதை
முழுவதும் சிறிதும் பெரிதுமாகப் பாறைக் கற்கள் குவிந்திருந்தன. இவற்றின் மீதுதான் குதிரைகள்
செல்ல வேண்டும்.
சரி, நாபிடாங் என்ற
பெயருக்கு என்ன அர்த்தம்? இங்குள்ள ஒரு மலையின் பனிபடிந்த வடிவம் பார்வதி தேவியின்
தொப்புளாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே நாபிடாங் எனப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து
11,000 அடி உயரம். இரண்டு மூன்று அடுக்கு உடை, ஜெர்க்கின் என அனைத்தையும் தாண்டி உடல்
குளிரில் விரைக்கிறது..
எங்கள் முகாமிற்கு
எதிர்ப்புறமாகத்தான் ஓம் பர்வதம் இருந்தது. சரிந்தவாக்கில் பலகை மாதிரி இருக்கும் ஒரு
மலைமீது இயற்கையாகவே தேவநாகரி வடிவில் ஓம் என்று எழுதியது போல பனி படர்ந்திருக்கிறது.
நமக்கு இடப்புறமாக இரண்டு மிகச்சிறிய கோவில்களும் இருக்கின்றன.
சற்று தூரத்தில்
உடைந்து கிடந்த ஒரு சிறிய விமானம் அல்லது ஹெலிகாப்டர் எங்கள் கண்ணில்பட, அதன் அருகே
சென்றோம். எண்பதுகளின் இறுதியில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இந்த இடத்தில் விபத்துக்குள்ளான
போது இங்கு சுற்றிலும் பனி மூடியிருந்திருக்கிறது. அதிலிருந்த மூன்று இராணுவ வீரர்கள்
எந்த உதவியும் கிடைக்காத நிலையில் ஈசனைத் தஞ்சமடைந்து பிரார்த்தித்திருக்கிறார்கள்.
பின்னர் உயிர் பிழைத்திருக்கிறார்கள். அது ஈசனின் அருளால் என எண்ணியவர்கள் அதற்கு நன்றி
தெரிவிக்கும் விதமாக இங்கே சிவனுக்கு இரண்டு சிறிய கோவில்களைக் கட்டியுள்ளார்கள். அதனுள்
இருக்கும் சிவன் அத்தனை அழகு. மனதைக் கொள்ளை கொள்கிறார். ஒருபக்கம் இக்கோவில்கள், அதற்கு
எதிரே பார்வதியின் தொப்புளாக கருதப்படும் நாபிடாங் சிகரம், மறுபக்கம் ஓம் பர்வதம் என்று
இந்த இடத்தின் அழகும், அமைதியும், தெய்வீகமும் சொல்லி மாளாது. இந்திய எல்லைப் பகுதி
என்பதால் இங்கு இராணுவ கெடுபிடிகள் அதிகம் என்றாலும் யாத்ரிகர்களிடம் மிகவும் அன்பாக
பேசுகிறார்கள்.
அடுத்த நாள் மீண்டும்
குஞ்சி நோக்கிப் பயணம். அதற்கு மறுநாள் எங்கள் பயணம் ஆதி கயிலாயம் நோக்கி. குஞ்சியிலிருந்து
இரண்டாவது பாதை மூலம் நாங்கள் சென்றது குட்டி என்ற இடத்தை நோக்கி. பாண்டவர்களின் தாயான
குந்திதேவி பிறந்த இடம் இது. குந்தி என்ற பெயர் நாளடைவில் மருவி குட்டி என்றாகிவிட்டது.
மிகவும் கடுமையாக இருந்தது பயணம். பல நதிகளைக் கடந்து குறுகிய பாதையில் செல்ல வேண்டியிருந்தது.
நதிகளைக் கடக்க சில இடங்களில் வெறும் மர ஏணி மாதிரி குறுக்கே வைக்கப்பட்டிருக்கிறது.
நாம் நடந்துதான் இந்த இடங்களைக் கடக்க முடியும். உதவியாளர் வெகு பத்திரமாக நம் கரம்பற்றி
அழைத்துச் செல்வதால் கவலையுமில்லை,
எங்கேயோ இமயத்தில்
ஒரு மூலையில் இருந்தாலும் குட்டியில் உள்ள கிராம வீடுகள் வியக்க வைத்தன. இரண்டடுக்கு
மாடி வீடுகள் கூட இருந்தன. அவற்றின், கதவு மற்றும் ஜன்னல்களின் வேலைப்பாடுகள் கலையம்சத்துடன்
இருந்தன. குந்தி பிறந்த இடத்தில் தாங்களும் பிறந்திருப்பதில் அந்த கிராமவாசிகளுக்கு
அத்தனை பெருமிதம். நதிக்கு இக்கரையிலும் அக்கரையிலுமாக இரண்டு இடங்களில் எங்களுக்கான
தங்குமிடங்கள் அமைந்திருந்ததால் நாங்கள் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தோம். மாலை
நேரம் அங்கு கிராமத் திருவிழா ஆரம்பித்திருந்தது. எங்களையும் கலந்து கொள்ளச் சொன்னார்கள்.
கிராமத் தலைவர் ஒருவரது
வீட்டின் முன்புதான் விழா நடந்தது. யாரோ ஒருவர் வெள்ளைத் துணிகள் போர்த்தப்பட்ட ஒரு
பெரிய மூட்டையை எடுத்து வந்து அங்கிருந்த திண்ணை போன்ற அமைப்பின் மீது வைத்தார். பிறகு
சிறுசிறு மண் விளக்குகள் இதர சமாசாரங்கள் எல்லாம் வர, கிராமவாசிகள் கைதட்டியவாறு பிரார்த்தனை
பாடல்கள் பாட ஆரம்பிக்க, நாங்களும் அவர்களோடு அமர்ந்து உற்சாகமாக கை தட்ட ஆரம்பித்தோம்.
எங்களோடு எங்கள் குதிரைக்காரர்கள், உதவியாளர்கள் எல்லோருமே அமர்ந்து உற்சாகமாய்ப் பாடினார்கள்.
மொழி புரியாவிட்டாலும் செவிக்கு இனிமையாக இருந்தன அவர்களது நாட்டுப்புறப் பாடல்கள்.
“உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளது. ஆண்டுக்கொருமுறை நடக்கும் கிராமத் திருவிழாவில் நீங்கள்
கலந்து கொள்கிறீர்கள்” என்றார் ஒரு குதிரைக்காரர். அந்த வெள்ளைத்துணி போர்த்திய மூட்டைக்குள்
இருப்பது சிவன் உருவமாம். ஆண்டுக்கொரு முறை அதன் மீதுள்ள துணிகளை மாற்றுவதைத்தான் விழாவாகக்
கொண்டாடுவார்களாம். சிவனைக் காணமுடியவில்லை.
விழாவின் முடிவில்
எங்கள் அனைவருக்கும் மண் குடுவையில் ஏதோ ஊற்றி பிரசாதமாகக் கொடுத்தார்கள். நாங்கள்
தயங்கினோம். குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். எங்கள் குழுவில் சிலர் வாங்கிக்கொள்ள,
அதற்குள் உதவியாளர் ஒருவர் ஹிந்தியில் ஏதோ சொல்ல, ஒருவர் மொழி பெயர்த்தார். குடுவையில்
இருப்பது நாட்டு மதுவாம். அதுதான் பிரசாதமாம். அப்பாடா பிழைத்தோம் என்று எல்லோரும்
சிரித்தோம்.
குட்டியில் பாழடைந்த
ஒரு கோட்டையும் அதன் மீது சிதிலமடைந்த ஒரு கட்டடமும் இருக்கின்றன. அதுதான் குந்தியின்
அரண்மனையாம். அந்த இடத்திற்கு யாரும் செல்லமாட்டார்களாம். அங்கிருந்து ஒரு கல்லை எடுத்தால்கூட
குட்டி கிராமப்பகுதியின் சீதோஷ்ண நிலை மாறி பெரும் ஆபத்தேற்படும் என்று நம்புகிறார்கள்.
தூரத்திலிருந்தே அந்த கோட்டையைப் பார்த்தபடி சென்றோம் நாங்கள்.
மறுநாள் நாங்கள்
சென்றது ஆதிகயிலாயம் நோக்கி. உத்தர்காண்டின் பிதாரகர் மாவட்டத்தின் ஜோலிங்காங் என்ற
இடத்தில்தான் ஆதிகயிலாயம் அமைந்துள்ளது. இந்திய பகுதியாக இருந்த திபெத்தில் இருந்த
ஆதிகயிலாயம், சீன ஆக்கிரமிப்பிற்கு மாறிய பிறகு, எல்லை கடந்து சென்று கயிலாயம் மானசரோவரை
தரிசிக்க முடியாதவர்களுக்கு, நம் எல்லைக்குள்ளேயே இருக்கும் ஆதிகயிலாயம் ஒரு வரம்.
திபெத்தில் இருக்கும் கயிலாயம் போலவேதான் இதுவும் பனி போர்த்திய பிரமீடு வடிவில் இருக்கும்.
அங்கு மானசரோவர் ஏரி உள்ளது போலவே இங்கும் பார்வதி சரோவரம் உள்ளது. அங்குள்ளது போலவே
இங்கும் கயிலை மலையை ஒட்டி கௌரி குண்டம் என்ற ஏரியும் இருக்கிறது. மிகமிக புனிதமான
இடம் இது. இங்கிருக்கும் புனித அதிர்வுகளும், அமைதியும் நம்மை என்னவோ செய்கின்றன. சலனமற்றிருக்கிறது
பார்வதி சரோவரம். நல்ல காலநிலை இருந்தால் ஆதிகயிலையின் பிம்பத்தை இதில் காணலாம். சரோவரத்தின்
அருகில் ஈசனுக்கு கோவிலும் கட்டப்பட்டிருக்கிறது. திபெத்தில் இருக்கும் கயிலையை படா
கைலாஷ் என்றும் இதனை சோட்டா (சிறிய) கைலாஷ் என்றும் அழைக்கிறார்கள்.
நாங்கள் எங்கள் தங்குமிடத்தை
அடைந்ததுமே அங்கிருந்து சற்று தொலைவு நடந்து சென்று ஆதிகயிலாயத்தை தரிசிக்கும்போது
வானம் சற்று தெளிவாகவே இருந்தது. இந்த அழகையும், தெய்வீகத்தையும் கான்பதற்காகத்தானே
இத்தனை சிரமப்பட்டு வந்திருக்கிறோம் அவனருளால் என்று நினைத்தபடி அங்கே வெகுநேரம் அமைதியாக
அமர்ந்திருந்தேன். ஆதிகயிலாயத்திற்கு எதிர்ப்புறம் பார்வதி சரோவரம் செல்லும் வழியில்
ஒரு மலைமுகடு உள்ளது. ஒரு கிரீடம் போல இருக்கும் இதனை பார்வதி தேவியின் கிரீடம் என்ற
பொருளில் பார்வதி முகுட் என்கிறார்கள்.
ஜோலிங்காங்கிலிருந்து
ஆதி கயிலை நோக்கி ஐந்தாறு கி.மீ தூரம் உட்புறமாக மலையேறிச் சென்றால் கௌரி குண்டத்தைக்
அடையமுடியும். அமைதியான கௌரி குண்டத்தில் பனிப்பாறைகள் மிதந்து கொண்டிருக்க தேவலோகம்
போலிருக்கிறது அந்த இடம். செல்லும் வழியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்க, உதவியாளர்களின்
உதவியுடன் அவற்றைக் கடந்து சென்றோம்.
மீண்டும் அதே கடினமான
மலைப்பாதை, குதிரைப்பயணம், என பதினான்காம் நாள் டார்ச்சுலாவை அடைந்ததுடன் எங்கள் பயணம்
முற்றுப்பெற்றது.
யாத்திரை என்பது
பக்தியை மட்டுமல்ல, பக்குவத்தையும், பரந்துபட்ட பார்வையையும் அளிப்பதாக எண்ணுகிறேன்.
இமயத்தின் விளிம்பில், ஆபத்து சூழ வாழும் மக்களின் வாழ்வையும், அவர்களது தன்னம்பிக்கையும்
சிரிப்பையும் காணும்போது நம் கர்வம் அழிகிறது. அவர்களைக் காட்டிலும் நாம் எவ்வளவு நல்ல
நிலையில் இருக்கிறோம் என்று புரிகிறது.
(நாபிடங் சிகரம்)
(ஓம் பர்வதம்) 
(வியாசர் குகை) 
(காளிநதியின் பிறப்பிடம்) 
 

(நிறைவு)

Posted on Leave a comment

ஆதி கைலாஷ் யாத்திரை – இமயத்தின் விளிம்பில் (பகுதி 1) | வித்யா சுப்ரமணியம்

எத்தனை எட்டாத உயரத்தில் தெய்வங்கள் இருந்தாலும், அங்கே செல்வது மிகமிகக் கடினம்
என்றாலும், சில நேரம் உயிருக்கே உத்தரவாதமில்லை என்றாலும் கூட, சர்க்கரைக் கட்டியைத்
தேடிச்செல்லும் எறும்புக் கூட்டம் போல சாரிசாரியாக மலை மீது ஊர்ந்து சென்று, பலவித
சிரமங்களையும் தாங்கிக் கொண்டு அந்த தெய்வத்தைத் தரிசிக்க மனிதர்கள் தயாராகி விடுகிறார்கள்.
சிறிய மலையோ, பெரிய மலையோ, கோவில்களை மலை உச்சியில் நம் ஆச்சார்யர்கள் கட்டி வைத்ததற்குக்
காரணம் இருக்கிறது. மலையேறுகையில் மூச்சு வாங்கும். எண்ணங்கள் ஒடுங்கும். ஒரு கட்டத்தில்
நம் ஆழ்மனம் திறக்கும். ஆழ்மனம் திறக்கையில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் நூறு சதம்
ஈடேறும். இதைத்தான் ஆங்கிலத்தில் ஆல்ஃபா மைன்ட் பவர் என்கிறார்கள். நம் ஆழ்மனத்தின்
எண்ணங்களை பிரபஞ்ச சக்தி ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றி வைக்கும் என்பார்கள். இதை
அடிப்படையாக வைத்துதான் பல கோவில்கள் மலைமீது கட்டப்பட்டுள்ளன.
தெற்கே பொதிகை மலை, சதுரகிரி, பர்வதமலை, கொல்லிமலை, உட்பட பல மலைகளுக்கும் ஏறிச்
சென்று வழிபட்டிருக்கிறேன். வடக்கே திபெத்தில் உள்ள கைலாஷ், இந்திய எல்லையில் உள்ள
ஆதிகைலாஷ், ஓம் பர்வத், கேதார் பத்ரி என இமயத்தின் பல இடங்களுக்கும் சென்றிருக்கிறேன்.
மலையேற ஏற எண்ணங்கள் ஒடுங்குவதை அனுபவ ரீதியாக உணர்ந்துமிருக்கிறேன். ஒவ்வொரு யாத்திரையும்
பல்வேறு அனுபவங்களையும், பரந்துபட்ட பார்வையையும் நமக்குத் தருகிறது. பல்வேறு மனிதர்களின்
வாழ்வியலை அறிந்து கொள்ள உதவுகிறது.
திருப்பதி மலையை ஏறிச்சென்று வழிபட்ட ஒரு நாளில்தான் ஆதிகைலாஷ் யாத்திரை செல்வதென்று
எங்கள் குழுவினர் தீர்மானித்தோம். அப்போது என் நண்பர் ஒருவர் ஆதிகைலாஷ் செல்வதற்கு
உங்களுக்கு உடல் தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்றார். எப்படி
எனக் கேட்டேன். பொதிகை மலை ஏறிக் காட்டுங்கள், ஆதி கைலாஷ் அழைத்துச் செல்கிறேன் என்றார்.
நானும் சிரித்தபடி ஏறினா போச்சு என்றேன்.


(ஆதிகைலாயத்தின் முன்பாக)

அதே போல் 2008 ஏப்ரல் மாதம் 28ம் தேதி நெல்லை பாபநாசம் சென்ற நாங்கள் மறுநாள்
காரையார் அணை கடந்து பொதிகை ஏற ஆரம்பித்து மே ஒன்றாம் தேதி ஆறாயிரத்து ஐநூறு அடி உயரத்தில்
உள்ள அகத்தியரை வழிபட்டோம். என் சக்தியை நானறிந்த தினம் அன்று. ஏனெனில் பொதிகை மலை
ஏறுவது மிகவும் சவாலான விஷயம். சில இடங்களில் நாம் குரங்கு போல கை கால் எல்லாவற்றையும்
உபயோகப்படுத்தி, தொற்றிக் கொண்டு கூட ஏற வேண்டி வரும். சூரிய ஒளியே படாத பொதிகையின்
பல்லுயிர்க் காடுகளைக் கடந்து செல்வது புதியதொரு அனுபவம்.
என்னைத் தூண்டி விட்ட நண்பர் ஆதிகைலாஷ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்தார். நானும்
என் இருபது வயது இளைய மகளும் சேர்ந்தே ஆதிகைலாஷ் செல்வதெனத் தீர்மானித்தோம். இந்திய
எல்லையோரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது ஆதி கயிலாயம். இதனை தரிசிக்க மிகவும்
கடினமானதொரு யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு மூலம் கயிலாயம் மானசரோவர்
செல்லும் அதேவழியில்தான் இந்த யாத்திரையும் மேற்கொள்ளப்படும். ஆனால் இதை அந்த மாநில
அரசே நடத்துகிறது. கிட்டத்தட்ட ஐம்பபத்து மூன்று பேர் கொண்ட எங்கள் குழு, உத்தரகாண்ட்
அரசின் குமான் மண்டல் விகாஸ் நிஹாம் நிறுவனம் மூலம் இங்கிருந்து டெல்லிக்கு முதலில்
சென்றோம்.
டெல்லியிலிருந்து அன்றிரவே பேருந்து மூலம் 415 கி.மீ தூரம் பயணித்து ஜாகேஷ்வர்
நோக்கிச் செல்லும் வழியில் கங்கா ஆரத்தியும் காணக் கிடைத்தது. இந்த யாத்திரையில் நங்கள்
கண்டது ஜாகேஷ்வர், பாதாள் புவனேஸ்வர், நைனிடால் எனப் பல இடங்கள் என்றாலும், இந்தக்
கட்டுரையில் ஆதி கைலாஷ் மற்றும் ஓம் பரவத் யாத்திரை பற்றி மட்டும் பார்ப்போம்.


(காளி நதியின் பிறப்பிடம்)

ஜாகேஷ்வரிலிருந்து பாதாள் புவனேஸ்வர் வழியாக முந்நூற்று சொச்ச கி.மீ தூரம் மலைப்பாதையில்
பேருந்தில் பயணித்து நாம் அடையும் இடம் டார்ச்சுலா. இதுதான் ஆதி கைலாஷ் யாத்திரையின்
ஆதார முகாம். இங்கிருந்துதான் ஆயத்தங்கள் தொடங்கும். இரவு நேரம் என்பதால் எல்லோரும்
தூங்கிவிட்டோம். மறுநாள் காலை கண்விழிக்கும் போதே ஏதோ ஒரு பேரிரைச்சல் கேட்க என்னவென்று
புரியாமல் அறையின் பால்கனிக்கு வந்து பார்த்த நான் மலைத்துப் போனேன். எங்கள் ஹோட்டலை
ஒட்டி பொங்கிப் பிரவாகமாய் காளி நதி பெரும் இரைச்சலோடு ஓடிக் கொண்டிருந்தது. 
இந்தியாவையும்
நேபாளத்தையும் பிரித்தபடி ஓடுகிறது. நதிக்கு அந்தப் பக்கம் நேபாளம். இரு நாடுகளையும்
இணைக்கும் பாலம் இருக்கிறது. அடையாள அட்டையுடன் காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை
இந்த பாலத்தைக் கடந்து நேபாளிகள் இந்தியாவிற்கும், இந்தியர்கள் நேபாளத்திற்கும் செல்லலாம்.
மலையேறும் போது ஊன்றி நடப்பதற்கான கம்புகள் இங்கே விலைக்குக் கிடைக்கின்றன. குதிரைகளில்
செல்ல முடியாத இடங்களில் நாம் நடந்துதான் செல்ல வேண்டும் என்பதனால் இந்தக் கம்பைக்
கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.


(டார்ச்சுலா நேபாளத்தை இணைக்கும் பாலம்)

டார்ச்சுலாவிலிருந்து மாங்தி என்னும் இடம் வரை 21 கி.மீ நம்மைப் பேருந்தில்
அழைத்துச் செல்கிறார்கள். பேருந்தில் செல்லும் இந்த மலைப் பயணம் ரம்யமானது. தூரத்து
அருவிகளும், பசுமை போர்த்திய மலைகளும் தவழும் மேகங்களும் மனதை மயக்கும். மலைப்பாதையில்
நிலச்சரிவுகள் ஏற்படுவது சர்வசாதாரணம். காளி நதியின் ஆக்ரோஷமான வேகம் பிரமிக்க வைக்கும்.


(மாங்கிதியில் இருந்து காலா நோக்கி கடினமான மலைப்பாதையில் பயணம்)

மாங்தியில்தான் நாம் குதிரையேற வேண்டும். அங்கே நம்மை வழியனுப்பி வைக்க இந்திய
திபெத் எல்லையோரக் காவல் படையினர் புன்சிரிப்புடன் காத்திருக்கிறார்கள். அந்தக் குளிரிலும்,
பனியிலும் அவர்கள் அங்கே பணியாற்றுவதால்தான் நாம் பாதுகாப்பாக இங்கே எல்லா சுகங்களையும்
அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 


(மாங்தியில் இந்திய திபெத் எல்லையோர காவல் படையினருடன்)

இந்த யாத்திரை முழுவதும் இந்த காவல் படையினர் நமக்குச்
செய்யும் உதவிகள் ஏராளம். மாங்தியிலிருந்து, ஓம் பர்வத் மற்றும் ஆதிகயிலாயம் வரையுள்ள
98 கி.மீ தூரத்தை அடைய ஆளுக்கொரு குதிரையும், உதவியாளரும் வைத்துக் கொள்வது நல்லது.
நாங்கள் சென்ற சமயம், குதிரைகளுக்கு ஒரு கி.மீ தூரத்திற்கு ரூ.45ம் உதவியாளருக்கு ஒரு
கி.மீ தூரத்திற்கு ரூ.39ம் கட்டணமாக வசூலித்தார்கள். தற்போது அது பலமடங்காக அதிகரித்திருக்கக்கூடும்.
குதிரைக்காரர் நம்மைக் குதிரை மீது அமரவைத்து அழைத்துச் செல்வார். நடந்து செல்ல வேண்டிய
இடங்களில் உதவியாளர், நம்மை பத்திரமாக அழைத்துச் செல்வதோடு, நம் கைப்பை, கம்பு முதலியவற்றையும்
சுமந்து வருவார். ஒரு செட் மாற்று உடை, மழை கோட்டு போன்ற அத்தியாவசியமான பொருட்களைக்
கைப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும். இடுப்புப் பட்டை இருந்தால் அதில் பணம், அடையாள
அட்டை போன்றவற்றைப் பத்திரப்படுத்தி இடுப்பில் கட்டிக் கொள்ளலாம். மலையேறும் போது கண்டிப்பாகத்
தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தாகமிருக்கிறதோ இல்லையோ, அவ்வப்போது கண்டிப்பாக
நீரருந்த வேண்டும். முதல் இரண்டு நாட்கள் வழியில் நாம் செல்லும் பாதையிலேயே வழியெங்கும்
சிறிதும் பெரிதுமான அருவிகள் தென்படும். சுத்தமான தண்ணீர் கிடைக்கும். பாட்டில் நீர்
தீர்ந்துவிட்டால் பிடித்துக் கொள்ளலாம்.
மாங்தியில் குதிரையேறியபின் காலா என்ற இடம் நோக்கி நம் பயணம் ஆரம்பிக்கிறது.
இடைப்பட்ட தூரம் எட்டு கி.மீ. பல இடங்களில் குதிரை செங்குத்தாக ஏறுவது போல இருக்கும்.
குதிரையில் அமரும்போது ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தால் சௌகரியமாகச் செல்லலாம்.
அதாவது குதிரை ஏற்றத்தில் செல்லும்போது நாம் முன்புறமாக அதன் மீது சாய்ந்து கொள்ள வேண்டும்.
இறக்கத்தில் செல்லும்போது நாம் நம் உடலைப் பின்புறமாகக் கொண்டு சென்று ஒருகையால் அதன்
வளையத்தைப் பற்றிக் கொண்டு ஒரு கையைப் பின்னால் கொண்டு சென்று நாம் அமர்ந்திருக்கும்
இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் ஏற்ற இறக்கங்களில்
முன்பாரமும் பின்பாரமும் சமமாவதால், குதிரைக்கும் சங்கடத்தை அளிக்காது. ஏனெனில் மிகக்
கடினமான பயணம் இது. குதிரைக்கே கூட பல இடங்களில் மூச்சிரைத்து மேற்கொண்டு நம்மைச் சுமக்க
இயலாமல் சண்டித்தனம் செய்யும்.


(காலாபாணி)
மாங்தியிலிருந்து காலா பயணம் இனியது. நடுவில் தேநீர்க் கடைகள் தென்படுகின்றன.
இமயத்தில் தேநீர் அருந்தும் சுகம் பின்னர் கிடைக்குமா? எனவே குதிரையிலிருந்து இறங்கி
ஆற அமர தேநீரைச் சுவைத்துப் பருகிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்து, பிற்பகலில் காலாவை
அடைந்தோம். அன்றிரவு அங்குதான் தங்க வேண்டும். தங்குமிடத்திலிருந்து சுற்றிலுமிருந்த
மலைகளைக் காண்பது திகட்டாத விஷயம்.
காலாவிலிருந்து புத்தி என்ற இடம் வரை செல்லும் இரண்டாம் நாள் பயணம்தான் இந்த
யாத்திரையில் மிகவும் சவாலானது. மிக நீண்டது. சுமார் 21 கி.மீ தூரம் கொண்டது. இந்த
இரண்டாம் நாளில் இந்த பயணம் துவங்கும் போது குதிரைகளின் மீது 7000 அடி உயரத்தில் மலைவிளிம்பில்
பயணிக்கும் நம்மை ஒருசில கி.மீ தூரம் சென்றதும் ஓரிடத்தில் குதிரைகளில் இறக்கி விட்டு
விடுவார்கள். அங்கிருந்து சுமார் 4440 அடிகள் நாம் கீழ்நோக்கி இறங்கி நடக்க வேண்டும்.
இறக்கங்களில் குதிரைமீது பயணிக்க இயலாது. கடினமான இறங்குமுக பயணத்தின் முடிவில் மலையிலிருந்து
இறங்கி காளி நதியின் கரையோரத்திற்கு நதியைத் தொடுவது போல வந்திருப்போம். இந்த இரண்டாம்
நாள் பயணம் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும். கடுமையானது மட்டுமல்ல, இனிமையானதும்
கூட. நாம் செல்லும் பாதையில் நூற்றுக்கணக்கில் சிறிதும் பெரிதுமான அருவிகள் நம்மை வரவேற்கும்.
மேகக் கூட்டங்கள் நம்மை உரசிச் செல்லும். உருவமே தெரியாத அளவுக்குப் பனிமூட்டங்கள்
இருக்கும்.
புத்தி செல்லும் பயணப் பாதையில்தான் லகன்பூரை அடுத்து மால்பா என்ற இடத்தைக்
கடப்போம். இந்த மால்பா என்ற பெயரைக் கேட்டால் இப்போதும் எல்லோருக்கும் அடிவயிறு கலங்கும்.
1998ம் ஆண்டு கயிலாயம் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பி வரும் வழியில் இங்கு தங்கியிருந்த
யாத்ரீகர்கள், உதவியாளர்கள், குதிரைகள் உட்பட சுமார் இருநூறு பேர் மற்றும் கிராமவாசிகள்
எனப் பலநூறு உயிர்கள் இங்கு ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானார்கள். ஒரு கிராமமே
புதையுண்டு போனதாகக் கூறப்படுகிறது. பாதிபேரின் உடல்களைக்கூட வெளியில் எடுக்க இயலவில்லையாம்.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரில் பிரபல நாட்டிய மேதை புரோதிமா பேடியும் ஒருவர்
என்பது வேதனையான விஷயம். இந்த இடத்தில் குதிரைக்காரர்கள், உதவியாளர்கள் அனைவரும் சிலநிமிடம்
நின்று மௌனமாக அஞ்சலி செலுத்தி பிரார்த்திக்க, நாங்களும் அவர்களோடு அங்கு சிலநிமிடம்
மௌன அஞ்சலி செலுத்தினோம். அந்த நிலச்சரிவின் சுவடு மாறாமல் அப்படியே இருக்கிறது அங்கு.
இறந்தவர்களுக்காக ஒரு நினைவுச் சின்னமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நம்மை அதிகநேரம்
இருக்க விடுவதில்லை குதிரைக்காரர்கள். இது நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான இடம் என்பதால்
மிகுந்த பாதுகாப்பாக நம்மை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
நாம் பயணிக்கும் பாதை மிகக் குறுகலானது. பாறைக்கற்கள் நிறைந்தது. நீர்வீழ்ச்சிகளில்
நனைந்தபடிதான் நடந்து செல்ல வேண்டியிருக்கும். மலை பல இடங்களில் குடையப்பட்டு நமக்குக்
குடை பிடித்தாற்போல இருக்கிறது. அந்தக் குடையின் மேற்புறமாக அருவி வழிந்து கொட்ட, நீர்த்திவலைகள்
நம் மீது தெறிக்க நடுவில் நடந்து செல்வோம். காளி நதியின் ஆக்ரோஷத்தை வெகு அருகில் காணமுடியும்.
பழுப்பு நிற காளி நதியோடு வெள்ளை நிறத்தில் உள்ள டிங்கர் நதி சங்கமிக்கும் அழகையும்
நடுவே ஓரிடத்தில் காணமுடியும்.


(குடை பிடிக்கும் மலையும் அதன் மீதிருந்து கொட்டும் அருவியும்)
ஒருவழியாக மாலை மயங்கும் நேரத்தில் புத்தி முகாமை அடையும் நம்மை அன்போடு சூடான
தேநீர் கொடுத்து வரவேற்கிறார்கள் இந்திய திபெத் எல்லையோரக் காவல் படையினர். நமக்கான
உணவும் அங்கே சூடாக தயார் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை தூரம் நடந்து வந்த
களைப்பை மறந்து எல்லோரும் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டோம். இரவு உணவுக்குப்
பின் உடல்வலி தெரியாதிருக்க மாத்திரைகள் உட்கொண்டு ஜாலியாகச் சிரித்து பேசியபடி, அடுத்தநாள்
மிக மிகக் கடினமான ஒரு மலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதறியாமல் தூங்கிப்போனோம்.
*
புத்தி முகாமிலிருந்து மறுநாள் விடியல் நேரத்திலேயே தேநீர் அருந்திவிட்டுக்
கிளம்பினோம். குதிரையில் அமர்ந்தாயிற்று. சகதிக் குளமாக இருந்த பாதையில் ஒரு கி.மீ
தூரம் சென்றபிறகு குதிரைக்காரர் ஹிந்தியில் ஏதோ சொன்னார். ஹிந்தி மாலும் நஹி என்றேன்.
சிரித்தவர் என்னருகில் வந்து என் முதுகை முன்புறமாகத் தள்ளி என்னை முன்புறமாகச் சாய்த்துவிட்டுக்
குதிரையை நடத்தினார். எனக்குப் புரியவில்லை. நானும் முன்புறமாக சாய்ந்து அமர்ந்திருந்தேன்.
அடுத்த பத்தாம் நிமிடம் அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பதற்குக் காரணம் புரிந்தது.
நாங்கள் சென்ற பாதை வெகு செங்குத்தாக மேலேறியது. பார்க்கவே திகைப்பாக இருந்தது. சிறிதும்
பெரிதுமான பாறைக்கற்கள் ஒழுங்கற்ற உயரங்களில் படிக்கட்டு அமைத்தாற் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
குதிரை அதில் ஏற ஆரம்பித்ததும் பயத்தில் சற்றே என் அடிவயிறு குழைந்தது. பின்புறமாகக்
கீழே விழுந்து விடுவேனோ என்று பயப்படும் அளவுக்கு குதிரையின் முன்புறம் மேல்நோக்கியும்
பின்புறம் சரிந்துமிருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட ஐந்து கி.மீ. தூரம் இந்த
செங்குத்துப் பயணம் தொடர்ந்தது. குதிரைக்கே நக்கு தள்ளும் மலையேற்றம். குதிரை மூச்சிரைத்தபடி
ஆங்காங்கே மேற்கொண்டு ஏராமால் சண்டித்தனம் செய்ய, குதிரைக்காரர்கள் வெகு லாகவமாக அதன்
பின்புறத்தைப் பிடித்துத் தள்ளி மேலேற்றினார்கள். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரம்
இந்த மலையேற்றம் தொடர்ந்தது. நாங்கள் குதிரையின் முன்புறம் பல்லி மாதிரி சரிந்து படுத்து
ஒட்டிக் கொண்டிருந்தோம். இத மலையேற்றத்தில் யாரும் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத
நிலை. நாக்கு வறண்டு போயிற்று. எப்போது சமவெளியை அடையப்போகிறோம் என்று தோன்ற ஆரம்பித்தது.
குதிரைக்காரர்கள் ஒரு வினாடி அசந்தாலும் யாரேனும் குப்புற விழக்கூடும். ஆனால் அவர்கள்
மிக லாகவமாகக் குதிரைகளை மேலேற்றினார்கள். சமவெளி வந்ததும் எங்களைக் குதிரை மீதிருந்து
இறக்கி விட்டார்கள். நாங்கள் அத்தனை பேரும் அவர்களோடு கைகுலுக்கி அவர்களைப் பாராட்டி
நெகிழ்ந்தோம். நான் என் குதிரைக்காரர் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டேன். மிகவும்
கூச்ச சுபாவம் கொண்ட அவர் லேசாக என் கண் கலங்கியிருப்பதைப் பார்த்துக் குழந்தை மாதிரி
சிரித்தார்.
ஒருவகையில் ஹிமாலயப் பயணம் என்பது வாழ்க்கைப் பயணத்தை ஒத்ததுதான். மலைக்க வைக்கும்
ஏற்ற இறக்கங்களும், இதைக் கடந்து செல்வோமா என்று பயமுறுத்தும் சூழல்களும் நம் வாழ்விலும்
எதிர்ப்படுகிறது. நம்மை பத்திரமாக அவற்றைக் கடக்கச் செய்வது கண்டிப்பாக நாம் வணங்கும்
கடவுள் என்னும் குதிரைக்காரன்தான். நம் கர்மாதான் குதிரைகளாக இருந்து நம்மைச் சுமந்தபடி
ஒவ்வொன்றாகக் கடந்து செல்கிறதோ என்று எனக்குத் தோன்றியது.
மிகவும் அபாயகரமானதொரு ஏற்றத்தைக் கடந்துவிட்டோம் என்று சந்தோஷப்பட்டு விட முடியாது.
இன்னும் பயணம் இருக்கிறது. ஏற்ற இறக்கங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் குதிரைக்காரர்
இருக்க கவலை எதற்கு?
புத்தியிலிருந்து ஐந்து கிமீ. செங்குத்தான மலையேற்றத்தைக் கடந்து நாங்கள் வந்து
சேர்ந்த இடம். சியாலேக் சமவெளி. நாங்கள் குதிரையிலிருந்து இறங்கிய இடத்திலிருந்து சற்று
தூரம் நடந்தால் ஒரு செக்போஸ்ட் இருக்கிறது. எல்லையோரக் காவல் படையினர் அங்கே அமர்ந்து
நம்மைப் பற்றிய விவரங்களை ஒரு பதிவேட்டில் எழுதிக் கொண்டு, நமது அடையாள அட்டைகளைச்
சரிபார்த்த பிறகுதான் மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்கிறார்கள்.
சியாலேக் பகுதி மிக அழகான இடம். எல்லைகடந்த நேபாளத்தில் உள்ள பனி போர்த்திய
அன்னபூர்ணா சிகரங்களின் முதல் தரிசனம் இங்குதான் நமக்குக் கிடைக்கிறது. இந்த இடத்திற்கு
மலர்களின் சமவெளி என்றும் ஒரு பெயருண்டு. எங்கு நோக்கினும் பல்வேறு நிறங்களில் அழகிய
மலர்கள் சிரிக்கின்றன.


(அன்னபூர்ணா மலைத்தொடர்)

எங்கள் குதிரைப்பயணம் தொடர்ந்தது.
(பயணம் தொடரும்)