Posted on Leave a comment

ஆயிரம் பள்ளிகள் மூடல் – ஒரு யோசனை | ராமசந்திரன் கிருஷ்ணமூர்த்தி



நல்லெண்ணம்
என்ற படிக்கட்டின் மீதேறி நரகத்திற்குப் போகலாம் என்று சொல்வார்கள். அநேகமாக நம் நாட்டில்
உள்ள பல திட்டங்களும் சட்டங்களும் அப்படித்தான் இருக்கின்றன.
கல்வி
என்பது வியாபாரம் அல்ல, அது சேவை என்று வரையறை செய்து அரசும் லாபநோக்கிலாத டிரஸ்ட்களும்தான்
கல்விக்கூடங்களை நடத்தலாம் என்பது விதி. கல்வி நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கக்
கூடாது என்பது சட்டம். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் என்று தனியார்ப் பள்ளிகள்
25% இடங்களைப் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கவேண்டும்,
அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என்ற திட்டத்தில், ‘எல்லா மிருகங்களும் சமம்,
ஆனால் பன்றிகள் மட்டும் கொஞ்சம் கூட’ என்றும் ‘விலங்குப் பண்ணை’யில் கூறுவதுபோல. மொழிவழி/
மதவழிச் சிறும்பான்மைக் கல்வி நிலையங்களுக்கு விலக்கு.
அரசு
கல்வி நிலையங்களை நடத்துகிறது, தமிழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள்
என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் நடுத்தரவர்க்கம் அரசுப் பள்ளிகளைக் கைவிட்டுத்
தனியார்ப் பள்ளிகளுக்குப் போய் குறைந்தபட்சம் முப்பது வருடங்களாவது இருக்கும். தரமான
கல்வியை அரசு பள்ளிகள் அளிக்கவில்லை என்ற கருத்தை இன்றுவரை மாற்றிக்கொள்ள காரணங்கள்
இல்லை.
இதற்கு
நடுவில் ஆயிரம் பள்ளிகளுக்கு மேலாக மாணவர் சேர்க்கை இல்லை என்று மூடப்போவதாகத் தகவல்.
‘இல்லை, அதனை நூலகமாக மாற்றப் போகிறோம்’ என்று அரசு கூறுகிறது.
இன்று
கல்வி என்பது அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் தனியார் என்று மூன்று
வகையில் இயங்குகிறது. இதில் அரசுப் பள்ளிகளில் மட்டும் ஒரு சிறிய மாறுதலை ஏற்படுத்தலாம்.
கல்வி
என்பதை சேவை என்றல்லாது, வியாபாரம் என்று வகைப்படுத்திவிடலாம். லாப நோக்கோடு கல்வி
நிலையங்களை நடத்தலாம் என்று மாற்றி விட வேண்டும். குறைந்தபட்சம் தனியார்ப் பள்ளிகள்
வாங்கும் பணத்திற்குச் சரியான கணக்கும் அதற்கான வரியும் வெளிப்படையாக இருந்தால் போதும்.
கட்டாயக்
கல்வி உரிமைத் திட்டம் என்பது ஒரு வடிகட்டிய மோசடி. 25% இடங்களை ஹிந்துப் பள்ளிகள்
மட்டும் அளிக்க வேண்டும் என்ற கருத்தே தவறு. அது போக, அந்த மாணவர்களுக்கான பணத்தை இப்படி
இடம் அளித்த பள்ளிகளுக்குத் தருவதிலும் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. எனவே பள்ளிகள்
இந்த மாணவர்களுக்கான செலவை மற்ற மாணவர்களுக்குமேல் ஏற்றி வசூலிக்கிறது.
அரசுப்
பள்ளிகளை கைவிட்டுத் தனியார்ப் பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்
படி போகிறார்கள் என்றால் அரசுப் பள்ளிகள் செயல் இழந்துவிட்டன என்று அரசே ஒப்புக்கொள்கிறது
என்பதுதான் பொருள். யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் இருக்கும் சட்டத்தை இன்னும்
வைத்துக்கொண்டிருப்பது அறிவுடைய செயலா?
தற்போது
ஒரு மாணவனுக்கு தமிழக அரசு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ இருபதாயிரம் ரூபாய் செலவு செய்கிறது.
ஏறத்தாழ ஐம்பத்தி ஐந்து லட்ச மாணவர்கள் முப்பத்தி ஏழாயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.
நேர் சராசரியாக எடுத்தால் பள்ளிக்கு நூற்று ஐம்பது மாணவர்கள்.
மாணவர்கள்
சேர்க்கை இல்லாமல் மூடும் நிலையில் உள்ள பள்ளிகளைத் தனியார் வசம் ஒப்படைத்து விடலாம்.
நிலமும் கட்டடங்களும் உள்கட்டமைப்பு வசதியும் அரசின் பங்கு. நிர்வாகம் செய்வது தனியார்.
பள்ளியை நடத்தப் பொறுப்பேற்கும் தனியார், அரசு நிர்ணயித்த தகுதி உள்ள ஆசிரியர்களைத்
தேர்வு செய்து அவர்களுக்குப் பணி வழங்கவேண்டும். அவர்கள் அரசுப் பணியாளர்களாக இருக்க
மாட்டார்கள்.
பள்ளியில்
சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு ஒதுக்கி
விடும். அந்தத் தொகையை நேரடியாகத் தனியார் வசம் ஒப்படைக்காமல், அதிலிருந்து ஆசிரியர்களுக்கும்,
மற்ற பணியாளர்களுக்கும் சம்பளமாக அவர்களின் வங்கிக் கணக்குக்கு மாதா மாதம் அனுப்ப வேண்டும்.
பள்ளியை நிர்வாகம் செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை பள்ளி நிர்வாகத்தை ஏற்றிருக்கும் தனியாருக்கு
அரசு வழங்கவேண்டும். தரமாகப் பள்ளியை நிர்வகித்தால் தனியார் நிறுவனம் போல அந்த ஆண்டு
முடிந்ததும் நிர்வாகம் செய்பவருக்கு ஒரு ஊக்கத் தொகை வழங்கப்படவேண்டும்.
பள்ளியின்
உள்கட்டமைப்பு வசதி, தூய்மை, சுகாதாரம், மாணவர்களின் கல்வித் தகுதி, ஆசிரியர்களின்
தரம் ஆகியவற்றைத் தகுதியான நிறுவனங்கள் மூலம் தர ஆய்வு செய்து, அவர்களின் ஆலோசனைகள்
பள்ளியை நிர்வகிக்கும் தனியாரிடம் வழங்கப்பட வேண்டும். ஒரு வேளை அதில் முன்னேற்றம்
ஏற்படவில்லை என்றால் அரசு அந்தத் தனியாரோடு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்தத்தை
ரத்து செய்து விடலாம். அது போல ஆசிரியர் தகுதியில் குறைபாடு இருந்தால் போதிய அவகாசம்
அளித்து அவர்கள் தங்களைத் தரமுயர்த்தத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும். அதன் பிறகும்
தேவையான தகுதியைப் பெறாத ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்து விடலாம். ஆனால் இந்தச் செயல்
பள்ளியை நிர்வகிக்கும் தனியாரின் கட்டுப்பாடற்ற உரிமையாக இருக்கக் கூடாது.
ஒரு உத்தேச கணக்கு:
பாலர்
வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை – ஆறு வகுப்புகள்.
வகுப்புக்கு
மூன்று பிரிவு, பிரிவுக்கு முப்பது மாணவர்கள் என்றால் மொத்தம் 6 X 3 X 30 = 540 மாணவர்கள்.
540
மாணவர்களுக்கு 20 ஆசிரியர்கள். ஆசிரியரின் மாத சம்பளம் ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம்.
மொத்த வருட சம்பளம் 20 X 12 X 25, 000 = ரூபாய் அறுபது லட்சம்.
உடற்பயிற்சி,
ஓவியம், இசை ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்க நான்கு ஆசிரியர்கள். அவர்களின் வருட சம்பளம்
4 X 12 X 25, 000 = ரூபாய் பனிரெண்டு லட்சம்.
துப்புரவுத்
தொழிலாளி, காவலர்கள், அலுவலக உதவியாளர்கள் என்று மொத்தம் ஆறு பேர். அவர்களின் வருடச்
சம்பளம் 6 X 12 X 15, 000 = ரூபாய் பதினோரு லட்சம்.
பள்ளி
நிர்வாகியின் சம்பளம் 12 X 50, 000 = ரூபாய் ஆறு லட்சம்.
மொத்தம்
சம்பள வகையில் அரசின் பங்களிப்பு தொன்னூறு லட்சம். சராசரியாக ஒரு மாணவனுக்கு அரசின்
பங்களிப்பு ரூபாய் பதினாறாயிரத்து எழுநூறு ரூபாய்.
மீதமுள்ள
மூவாயிரத்து முன்னூறு ரூபாயில் மாணவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள்,
சத்துணவு என்று பயன்படுத்தப்படலாம்.

தற்போது மூடப்படுவதாகப்
பேசப்படும் ஆயிரம் பள்ளிகளிலாவது இதனை முயன்று பார்க்கலாம். எவ்வித முயற்சியும் இல்லாமல்,
பள்ளிகளை மூடுவதும், 25% கட்டாயக் கல்வித் திட்டத்தில் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு மட்டும்
விலக்கு அளிப்பதும் என அரசு எடுக்கும் முடிவுகள் பள்ளிகளையும் கல்வியையும் சீர் செய்ய
உதவாது. மாறாக இன்னும் மோசமாக்கவே செய்யும்.

Posted on Leave a comment

பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாண்டுகள் – B.K. ராமச்சந்திரன், ஹரன் பிரசன்னா


“நாடாளுமன்றத்தில் பணியாற்றாமலேயே ஒரு மாநிலத்திலிருந்து நேரடியாகப் பிரதமராக ஒருவர் உயர்வது என்பது சாதாரண விஷயமல்ல” என்று பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சொல்லி இருக்கிறார். பிரதமருக்குரிய பொறுப்புகளை உணர்ந்துகொண்டு அப்பதவிக்குரிய கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்கு அரசியல் குறித்த பெரிய புரிதல் தேவை. அதை அடைவதற்கு கடும் உழைப்பு அவசியம். மோதியின் அயராத உழைப்பைப் பற்றி பிரணாப் முகர்ஜி வியந்து குறிப்பிடுகிறார்.

மோதியின் உழைப்பைப் பற்றிக் கிண்டலாக மீம்கள் வருவதை நாம் பார்த்திருப்போம். அதைக் கண்ட நொடியில் சிரித்திருக்கலாம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மோதியின் அயராத உழைப்பும் அதைச் செயல்படுத்தத் தேவையான அர்ப்பணிப்பும் நமக்குப் புரியலாம்.

தொடர்ச்சியாக வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் பன்னாட்டு உறவுகளில் பிரதமர் மோதி செய்திருப்பது கற்பனைக்கு எட்டாத சாதனை. சுற்றி இருக்கும் சிறிய நாடுகளிடம் இந்தியா ஒரு பெரியண்ணன் தோரணையில் நடந்துவருவதுதான் வழக்கமாக இருந்தது. பன்னாட்டு உறவு என்பது இப்படி இருக்கமுடியாது. இருக்கக் கூடாது.

மோதி பிரதமரான பின்னர் மேற்கொண்ட பயணங்களின் மூலம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளுடனான நம் உறவு பெரிய அளவில் மேம்பட்டிருக்கிறது. இதுவரை எந்த ஒரு பிரதமரும் யாழ்ப்பாணம் சென்று தமிழர்களைச் சந்தித்ததில்லை என்னும் தாழ்வை நீக்கிய முதல் பிரதமர் மோதியே. அதேபோல் மலேசியத் தமிழர்களின் பொருளாதார முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய பிரதமரும் மோதி மட்டுமே. இவையெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றல்ல. மக்கள் சேவை என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே இவையெல்லாம் செய்யத்தக்கவை.

தொடர்ச்சியான பயணங்களுக்கு நடுவில் அவர் இந்தியாவுக்குள்ளே இருக்கும் அரசியலையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது. ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் என்றால் அதற்கான பிரசாரத்தையும் செய்யவேண்டும். இவை அனைத்தையும் திறம்படச் சமாளிக்கும் ஓர் உறுதியான பிரதமரை சமீபத்தில் இந்தியா பார்ப்பது மோதியிடம் மட்டுமே.

எந்த ஒரு முக்கியமான அரசியல் தலைவரின் அரசியல் வாழ்க்கையும் எப்போதும் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும். மோதியின் அரசியல் வாழ்வோ கூடுதல் சிக்கல்கள் கொண்டது. எப்போதும் எதிர்ப்பாற்றில் நீந்தியபடியே இருக்கவேண்டிய தேவை அவருக்கு எப்போதும் இருந்தது. இன்றுவரை அப்படித்தான். அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தது முதல் பிரதமரானது வரை அவர் பல சவால்களையும் கடும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு அவற்றை வென்றிருக்கிறார்.

காங்கிரஸின் ஆட்சியில் மக்கள் சலிப்புற்று வளர்ச்சியைக் கொண்டு வரும் ஒரு பிரதமர் வரமாட்டாரா என்று ஏங்கிக் கிடந்த காலத்தில், வளர்ச்சி என்னும் கோஷத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்டார் மோதி. மக்கள் அவரை நம்பினார்கள். அவர் மக்களை நம்பினார். பின்னர் நடந்தது வரலாறு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரும்பான்மை அரசு மோதி தலைமையில் அமைந்தது. இன்று இருக்கும் தலைவர்களில் மக்களுடன் நேரடியாகப் பேசும் ஒரே தலைவர் மோதி மட்டுமே. இதுவே கண்ணுக்கெட்டிய வரையில் எதிர்க்கட்சிகளே இல்லை என்னும் ஒரு மாயத்தைக் கொண்டு வருகிறது. இது முழுக்க மாயம் அல்ல, கொஞ்சம் உண்மையும்கூட.

சமையல் எரிவாயு மானியத்தை இயன்றவர்கள் கைவிடவேண்டும் என்று மோதி கோரியபோது நிறையப் பேர் ஏளனம் செய்தார்கள். ஆனால் இன்று கிட்டத்தட்ட 21 ஆயிரம் கோடி பணம் இதில் சேமிக்கப்பட்டு உள்ளது. பல புதிய குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு கிடைத்திருக்கிறது. கிராமப்புறங்களுக்கு சமையல் எரிவாயு சென்று சேர்ந்திருக்கிறது. மக்களை நம்பும் ஒரு பிரதமரால் மட்டுமே இது சாத்தியம். சமையல் எரிவாயுவுக்கான மானியம் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டதன் மூலமும் ஆதார் எண்ணை சமையல் எரிவாயு கணக்குடன் இணைத்ததன் மூலமும் பல முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.

மூன்றாண்டு கால மோதியின் ஆட்சியில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. இத்தனைக்கும் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி குறித்த தீவிரமான செயல்பாடுகளை மோதியின் அரசு எத்தருணத்திலும் கைவிடவே இல்லை. இப்போதும் இந்தியாவின் வளர்ச்சியே மோதி அரசின் தார்மிக மந்திரமாக உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு என்னும் அம்சத்தில் எள்ளளவும் சமசரமில்லை என்பதை மோதி தெளிவாக உணர்த்தி வந்துள்ளார். மோதி பிரதமராகப் பதவியேற்றதுக்குப் பின்னர் பன்னிரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு பெரிய நாட்டில் நூறு கோடிப் பேருக்கும் மேற்பட்டவர்கள் வாழும் தேசத்தில் இத்தாக்குதல்கள் மிகக் குறைவானவை. மோதி இத் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்டித்தார் என்பதோடு எதிர்காலத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழாமல் இருக்கத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முடுக்கி விடுகிறார். தாக்குதல்கள் குறித்து மோதி தப்பித்துக் கொள்ள முயலவில்லை. சமரசமற்ற நடவடிக்கை தேவை என்று வெளிப்படையாக அறிவிக்கிறார். தேசத்தின் பாதுகாப்பு என்பது மத்திய அரசின் பங்குக்கு உரியது மட்டுமல்ல. மத்திய அரசோடு இணைந்து மாநில அரசும் செயல்படவேண்டியது முக்கியம். இதை இந்த அரசு தெளிவாகப் புரிய வைத்திருக்கிறது.

இந்திய ராணுவம் நிகழ்த்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நம் பலம் என்ன என்பதையும், நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் நம் தீவிரமான நிலைப்பாடு என்ன என்பதையும் நம் எதிரிகளுக்குப் புரியவைத்திருக்கிறது. இந்தியா வெறும் வாழைப்பழ நாடல்ல என்று உலக அரங்கில் இந்தியா அழுத்தமாகப் பதிவு செய்தது அத்தருணத்தில்தான். சீனப் பிரச்சினையை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாண்டு வருகிறது இந்திய அரசு.

மாநிலங்களுக்கான உரிமைகளைப் பொருத்தவரையில் ஜி.எஸ்.டி விவகாரத்திலும் ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் மத்திய அரசு உரிய அக்கறையுடன் செயல்பட்டது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் நடைபெற்றதற்கான முக்கியக் காரணம் தமிழ்நாட்டில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் என்றாலும், அப்போராட்டம் வெற்றியடைய காரணமாக இருந்தவர்கள் பிரதமர் மோதியும் அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமுமே. ஜி.எஸ்.டி வரியை பல்வேறு மாநிலங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி எதிர்த்தபோது அனைத்தையும் எதிர்கொண்டு மாநிலங்களின் குரலையும் உள்ளடக்கி ஜி.எஸ்.டி வரியை அறிமுக செய்தது இந்திய அரசு.

கருப்புப் பணம் ஒழிப்பில் உண்மையுடன் செயல்பட்ட ஒரே அரசு மோதியின் அரசு மட்டுமே. பண மதிப்பு நீக்கம் என்னும் டீமானிடைஷேசன் என்ற முடிவை எடுப்பது அத்தனை எளிதான விஷயமல்ல. நாட்டின் மீதான நிஜமான அக்கறை உள்ள தலைவர் மட்டுமே எடுக்கமுடியக்கூடிய முடிவு அது. ஒரு வகையில் தான் சார்ந்த அரசியல் கட்சியின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் பணையம் வைக்கும் செயல். மோதி அதைச் செய்தார். டீமானிட்டைஷேசனின் மிக முக்கியமான பயன், இன்று பணத்தைக் கோடி கோடியாகப் பதுக்குவது அத்தனை எளிதானதல்ல என்று அனைவரும் புரிந்துகொண்டதுதான். கருப்புப் பண ஒழிப்பில் இது முதல்படி மட்டுமே. இன்னும் செல்லவேண்டிய தூரம் அதிகம் உண்டு. ஆனால் மக்களின் இன்னல்களைக் காரணம் காட்டி டீமானிட்டைசேஷனை எள்ளி நகையாடுபவர்கள் ஒன்றை உணர மறுக்கிறார்கள். டீமானிட்டைஷேசனுக்குப் பிறகு நடந்த பெரும்பாலான தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றே வருகிறது. மக்கள் தாங்கள் பட்ட கஷ்டங்களை தங்கள் நாட்டுக்காக என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இதனால்தான் மோதி, மக்களுடன் நேரடியாகப் பேசும் தலைவர் என்று சொல்லப்படுகிறார்.

பண மதிப்பு நீக்கத்தின் பலன்கள் இப்போது தெரியத் தொடங்கி இருக்கின்றன. வீடு வாங்குவதற்கான வட்டி விகிதம் 9.5%த்தில் இருந்து 8.2%ஆகக் குறைந்திருக்கிறது. பண மதிப்பு நீக்கத்தின்போது, எவ்விதக் கருப்புப் பணமும் இல்லாதபோதும் தங்கள் பணத்தையே எடுக்கக் கஷ்டப்பட்டவர்கள் நடுத்தர மக்களே. அவர்கள் பட்ட கஷ்டத்துக்கான பலன் இது என்று சொல்லலாம்.

சுவிட்ஸர்லாந்தில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தைக் கணக்கிட்டால் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்ச ரூபாய் தரலாம் என்று மோதி தேர்தல் பிரசாரத்தின்போது சொன்னது இங்கே திரிக்கப்பட்டது. ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாக மோதி சொன்னார் என்ற பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது. ஆனால் 2019 ஆண்டு வாக்கில் சுவட்சர்லாந்தில் கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியலை வெளியிடும் சாத்தியம் உள்ளது. அதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. கருப்புப் பண விஷயத்தில் இந்த அரசு நிதானமாகவும் உறுதியாகவும் செயல்படுவதை இது காட்டுகிறது.

மோதி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் நாட்டை விட்டே செல்லவேண்டியதுதான் என்று செய்யப்பட்ட அத்தனை பிரசாரங்களும் இன்று வலுவிழந்து போயுள்ளன. முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் எளிதாக பாஜக இந்திய அளவில் வெற்றி பெறுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் கிறித்துவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ எவ்வித தனிப்பட்ட மத ரீதியிலான அச்சுறுத்துல்களும் இல்லை. “மோதியினால்தான் நான் இங்கே உங்கள் முன்னர் நிற்கிறேன்” என்று சொன்ன கத்தோலிக்க பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் தாலிபனால் கடத்தப்பட்டவர். இதேபோல், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட பாதிரியார் டாம் உசுண்ணாலில் என்பவர் இந்திய அரசின் முயற்சியால் காப்பாற்றப்பட்டார். இந்திய கத்தோலிக்க பிஷப் சபை மோதிக்கும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறது. இஸ்லாமியர்களோ கிறித்துவர்களோ ஹிந்துக்களோ, நம்மை ஒன்றிணைப்பது இந்தியப் பெருமிதமே.

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் தங்களைப் பற்றி பெருமையாகவும் மரியாதையாகவும் உணரத் தொடங்கி இருப்பது மோதி பிரதமரான பின்னரே. ஒரு ட்வீட் மூலம் மிக எளிமையாக ஒரு இந்திய அமைச்சரைத் தொடர்புகொண்டு உதவி பெறமுடியும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்லி இருந்தால் யாரும் நம்பி இருக்கமாட்டோம். ஆனால் அது இன்று தினம்தோறும் நடக்கும் ஒரு நிகழ்வாகி இருக்கிறது.

இந்தியா முழுமையையும் சாலைகளால் ஒருங்கிணைப்பது என்ற தொடர் நிகழ்வில் இந்திய அரசு செய்துவரும் செயல்கள் பிரமிக்கத்தக்கவை. அதாவது, இது செயல்படும் அரசு. வாய்ஜாலத்தில் காலத்தை ஓட்டும் அரசல்ல.

மோதி தலைமையிலான அரசு நாள் ஒன்றுக்கு 41 கிலோமீட்டர் சாலை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கி நாள் ஒன்றுக்கு 22 கிலோமீட்டர் என்ற அளவில் சாலைகளை அமைத்திருக்கிறது. 2016-2017ம் ஆண்டு காலகட்டத்தில் 8,200 கிலோமீட்டர் அளவில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சமீபத்தில் அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்தி, குஜராத்தில் கோகோ மற்றும் தாகெஜ் இடையே மோதி தொடங்கி வைத்த படகுப் போக்குவரத்து. கிட்டத்தட்ட 350 கிமீ தூரப் பயணம் இதனால் 31 கிலோமீட்டராகக் குறைந்திருக்கிறது. இந்தியாவின் துறைமுகங்களை நவீனமாக்கி அவற்றை ஒருங்கிணைக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறன.

குஜராத் மாநிலத்தில் தொடங்கி ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் வழியாக உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பிஹார், மேற்கு வங்காளம் என்று தொடர்ந்து சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் என்று கடந்து மணிப்பூர் மிசோரம் வரை சாலை வழியாக இணைக்கும் பாரதமாலா திட்டம் என்றும், இந்தியாவின் துறைமுகங்களை நவீனமயமாக்கி, புதிய துறைமுகங்களையும் அதோடு இணைந்த கடல்சார் பொருளாதார மண்டலங்களையும் உருவாக்கும் பணி சாகர்மாலா திட்டம் எனவும் பெயரிடப்பட்டு, இந்தியாவின் உள்கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டு இருக்கின்றன.

மோதியின் அரசியல் பிரசங்கங்களைப் பார்த்தால் புரியும். ஒரு பக்கம் அரசியல் எதிர்ப்பாளர்களை வாட்டி எடுத்தாலும், இன்னொரு பக்கம் வளர்ச்சி அரசியலை முன்வைத்துக்கொண்டே இருப்பார். வளர்ச்சி அரசியலை முன்வைத்து தேர்தலை சாமர்த்தியமாக எதிர்கொண்ட முக்கியமான அரசியல்வாதி மோதியே. அதைச் செயலிலும் செய்து காட்டியதுதான் அவரது சாதனை. இன்றைய நிலையில் ஒரு அரசியல்வாதி நல்லது செய்வார் என்று தோன்றினாலும் போதும், மக்கள் ஆதரவு அவருக்கே. செய்து காட்டுவது என்பது அடுத்த படி. மோதி இந்த இரண்டு படிகளையும் நிதானமாகக் கடந்துகொண்டிருக்கிறார்.

மோதியின் பயணத்தில் இன்னொரு முக்கியமான திட்டம், முத்ரா கடன் திட்டம். ஒருவர் (அல்லது பதிவுசெய்யப்பட்ட கடன் வழங்கும் அமைப்பு) தொழில் தொடங்க வங்கியின் மூலம் ஐம்பதினாயிரம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்கும் திட்டம் இது. இதன்மூலம் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. முத்ரா திட்டத்தை தமிழகம் முழுமைக்கும் கொண்டு செல்லவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு செயல்படுத்தப்படும் பல திட்டங்களின் முழுமையான வெற்றி என்பது மாநில அரசுகள் அவற்றை எப்படிச் செயல்படுத்துகின்றன என்பதில் உள்ளது. இதையே நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.

சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையை இந்தியாவே பெரிய அளவில் திரும்பிப் பார்த்தது, மோதி குஜராத்தின் முதல்வராக இருந்தபோதுதான். அதற்கு முன்பும் சூரியனும் சூரிய ஒளியும் இந்தியாவில் இருக்கவே செய்தன. மோதி பிரதமரானதும் இந்தியா முழுமைக்குமான சூரிய ஒளி மின் உற்பத்தி கடந்த ஆண்டுகளைவிட ஆறு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மின் சேமிப்பும் மின் உறுபத்தியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளது. நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு துளியும் உற்பத்தி செய்ததற்குச் சமம். நாடு முழுவதும் 25 கோடிக்கும் மேலான எல்.ஈ.டி பல்புகள் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் மின் செலவு குறைக்கப்பட்டுள்ளது. குண்டு பல்புகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

ஜன் தன் என்ற திட்டத்தை மோதி அரசு கிராமம் தோறும் கொண்டு சென்றது. கோடிக் கணக்கில் கணக்குகள் தொடங்கப்பட்டன. பல்லாண்டுகளாக இந்தியாவின் ஏழை எளிய மக்கள் வங்கிகளை நெருங்காமலே இருந்த நிலையை மாற்றி அவர்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டு வந்தது மோதி அரசின் மிகப்பெரும் சாதனை. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம், முப்பது கோடி மக்கள் வங்கிச் சேவைக்குள் வந்து உள்ளனர். அவர்கள் மூலம் ஏறத்தாழ 67 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் எண்ணை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தபோது பாஜக எதிர்த்தது, ஆனால் இன்று மோதியின் அரசே எல்லாவற்றிலும் ஆதாரை இணைக்கச் சொல்கிறது என்பது எல்லோரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு. யார் எதைச் செய்கிறார்கள் என்பதோடு அதை எப்படிச் செய்கிறார்கள் என்பது முக்கியம். இன்று ஆதார் எண்ணைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்யமுடியும் என்று மோதியின் அரசு காட்டி இருக்கிறது. டிஜிடல் பண வர்த்தனைகள் கூட ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மிகச் சுலபமாக, பாதுகாப்பாகச் செய்யமுடிகிறது. ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்ததால் இது சாத்தியமாகி இருக்கிறது. ஆதார் எண் திட்டத்தை முதலில் கைவிட இருந்தது மோதி அரசு. நந்தன் நீல்கேனி இத்திட்டத்தின் தேவையை மோதிக்குச் சொல்கிறார். மோதி புரிந்துகொள்கிறார். காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் இது என்று மோதி யோசிக்கவில்லை. பாஜக எதிர்த்தது என்பதால் இத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. நாட்டுக்குத் தேவை, இதனால் பயன் கிடைக்கும் என்று உறுதியாக துறைசார் நிபுணர்கள் சொல்வதால் உடனே மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறது. ஓட்டரசியல் மட்டுமே செய்யும் தலைவர்களுக்கு நடுவில் நாட்டுக்குத் தேவை என்பதால் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தலைவராக மிளிர்கிறார் மோதி. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், நந்தன் நீல்கேனி, 2014ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிக் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டுத் தோற்றவர்.

பண மதிப்பு ஒழிப்பு, ஜன் தன் திட்டம், ஆதார் எண் இணைப்பு – இந்த மூன்றையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் மோதி எத்தனை பெரிய ஒரு ஆட்டத்தை ஆடி இருக்கிறார் என்பது புரியும். இந்த மூன்று திட்டங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை. ஒன்றைச் செய்தால்தான் மற்றவற்றில் வெற்றி அடைய முடியும். தொலைநோக்கும் எடுத்த முடிவில் நிலைத்து நிற்கும் நிலைப்பாடும் ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் எடுத்த முடிவைச் செயல்படுத்தித் தீரும் தீவிரமும் இல்லாத ஒரு தலைவரால் இவற்றை ஒருங்கிணைத்து யோசிக்கவே முடியாது. அதைச் செய்ய முடியக்கூடிய ஒரே தலைவர் மோதி.

ஸ்வட்ச் பாரத் திட்டத்தின்கீழ் இரண்டரை கோடிக்கும் மேலான கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

அதேபோல் ஜி.எஸ்.டி மூலம் மறைமுக வரிவிதிப்பை இந்த அரசு பலமடங்கு உயர்த்தி இருக்கிறது. பணமதிப்பு ஒழிப்பு மூலம் நேரடி வரியை அதிகமாக்கி இருக்கிறது. இந்த இரண்டையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் இத்திட்டங்களின் பின்னால் உள்ள நோக்கம் புரியும். இந்த வரிவிதிப்புகள் இருந்தால் மட்டுமே நலத்திட்டங்கள் சாத்தியம். ஊழலே குறி என்று இருந்திருக்கும் ஒரு அரசு இதையெல்லாம் செய்யத் தேவை இல்லை. ஊழல் செய்வது எளிது. ஊழலற்ற நேர்மையான மக்கள் அரசை நடத்துவதுதான் கடினம்.

கரியின் மூலம் செயல்படும் அனல்மின் நிலையங்களுக்கான கரி வாங்குவதில் இருந்த ஊழல் மற்றும் குழறுபடியை இந்த அரசு சரி செய்திருக்கிறது. மிக வெளிப்படையான, வலைத்தளம் மூலமான ஏலம் மூலம் ஊழலை ஒளித்திருக்கிறது இந்த அரசு. ப்யூஷ் கோயலின் முக்கியமான சாதனை இது. இதே திட்டம் காங்கிரஸ் காலத்தில் எப்படிச் செயல்பட்டது என்றும் அது மன்மோகன் சிங்குக்கு தீராத களங்கத்தை உருவாக்கியது என்பதையும் நாடே அறியும். இதுவே காங்கிரஸுக்கும் மோதி தலைமையிலான அரசுக்கும் உள்ள வேறுபாடு.

இவை எல்லாவற்றையும்விட, இந்த அரசின் மிக முக்கியமான சாதனை, ஊழலற்ற அரசு. மூன்றாண்டுகள் கடந்த நிலையில் மோதி அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது காங்கிரஸ் தலைவர்களும் அவர்களுடன் கூட்டணியில் இருந்த பிற கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் செய்த ஊழல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. மன் மோகன் சிங்கின் மீது குற்றச்சாட்டு சொல்லமுடியாது என்று சொல்பவர்கள், அவரது அரசில் நடந்த ஊழல்களுக்கும் அவரே பொறுப்பு என்பதை மறந்துவிடுகிறார்கள். மோதி அரசில் ஊழலே இல்லை என்றால், மோதியின் அமைச்சர்களிடமும் ஊழலே இல்லை என்றே பொருள். தனி நபரும் அரசும் ஊழலற்று இருப்பது இந்தியாவின் இன்றைய உடனடித் தேவை. அதை நோக்கி இந்தியா நகரத் தொடங்கி இருக்கிறது. இது மோதி செய்திருக்கும் மிகப்பெரிய சாதனை.

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் அவலங்களைக் களைந்துவிட்டு இந்தியா அடுத்த கட்டத்துக்குச் செல்வது என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. மோதி அதற்கான அடிப்படைகளை மிகச் சிறப்பாக நிறுவி இருக்கிறார். மோதியின் திட்டங்களில் மக்களுக்கு இன்னல்கள் நேர்ந்திருக்கலாம். சில திட்டங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டப் பட்டிருக்கலாம். இவையெல்லாம் மறுப்பதற்கில்லை. ஆனால் இத்திட்டங்களுக்குப் பின்னால் இருப்பது, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு நிஜமாகவே கொண்டு செல்ல விரும்பும் ஒரு தலைவரின் அர்ப்பணிப்பு. நல்ல நோக்கம். இதில் ஐயம் கொள்வது நியாயம் அல்ல. கடந்த கால காங்கிரஸின் திட்டங்களுக்கும் மோதியின் திட்டங்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு இதுதான். இதற்காகவே கடுமையாக உழைக்கிறார் மோதி. இந்த உழைப்பையே பிரணாப் முகர்ஜி தன் நேர்காணலில் குறிப்பிட்டார். இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் நாட்டுப்பற்றும் சேரும்போது மோதியை யார் எதிர்த்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள். அதை வரலாற்றில் நாம் காண்போம்.

தரவுகள்:
https://timesofindia.indiatimes.com/india/NDA-regime-constructed-50-of-national-highways-laid-in-last-30-years-Centre/articleshow/20869113.cms | http://www.hindustantimes.com/india-news/government-constructs-22-km-of-roads-per-day-misses-target-of-41-km-by-half/story-nLLJazVO6TZlzgx7lIu7iO.html | http://www.thehindu.com/business/Industry/pace-of-laying-of-roads-rises-to-22-km-daily-in-2016-17/article18113295.ece | https://www.joc.com/international-trade-news/infrastructure-news/asia-infrastructure-news/indian-port-development-program-makes-strides_20170110.html | http://www.firstpost.com/india/sagarmala-project-proposes-14-coastal-economic-zones-across-india-3130866.html | http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=159037 | http://www.india.com/news/india/udan-scheme-list-of-45-new-airports-over-70-new-routes-announced-today-5-airlines-make-the-cut-1976363/ | https://en.wikipedia.org/wiki/List_of_airports_in_India#Tamil_Nadu | http://trak.in/info/2790-indian-railways-suresh-prabhu-achievements/ | http://www.financialexpress.com/india-news/narendra-modis-top-10-signature-infrastructure-projects-to-power-new-india/613121/ | https://www.macquarie.com/cn/about/newsroom/2016/infrastructure-improvement-in-india | https://www.bloomberg.com/news/articles/2017-02-01/modi-plans-59-billion-rail-road-push-as-bombardier-ge-invest | https://www.pmjdy.gov.in/account | http://www.livemint.com/Opinion/wfertnZlyGRTmGiyGnJLrI/The-admirable-success-of-the-JanDhan-Yojana.html | https://economictimes.indiatimes.com/news/economy/policy/narendra-modis-mudra-yojana-generates-5-5-crore-jobs-says-report/articleshow/60435774.cms | http://www.livemint.com/Industry/cTycVe4kwGtmRNjvowf8BO/Ujjwala-scheme-for-LPG-connections-now-has-25-crore-benefic.html | https://timesofindia.indiatimes.com/business/india-business/plugging-lpg-subsidy-leaks-leads-to-rs-21000-crore-savings/articleshow/57022255.cms | http://www.newindianexpress.com/business/2017/apr/10/indias-solar-power-generation-capacity-crosses-12-gw-energy-minister-1592126.html | http://www.independent.co.uk/environment/india-solar-power-electricity-cancels-coal-fired-power-stations-record-low-a7751916.html | https://economictimes.indiatimes.com/industry/energy/power/over-25-crore-led-bulbs-distributed-under-ujala-scheme-eesl/articleshow/59635515.cms | http://swachhindia.ndtv.com/httpswachhindia-ndtv-com5-year-report-card-shows-massive-growth-indias-sanitation-coverage-6232-6232/ | https://economictimes.indiatimes.com/news/economy/finance/direct-benefit-transfer-leads-to-rs-50000-crore-savings-for-government-in-3-years/articleshow/57240387.cms | http://www.electionpromisestracker.in/governments/central-government/
Posted on Leave a comment

நீட்டாக ஒரு தேர்வு – BK ராமச்சந்திரன்

இந்திய மருத்துவக் கவுன்சில் தந்திருக்கும் தகவலின்படி இந்தியாவில் 462 மருத்துவக் கல்லூரிகளில் சற்றேறக்குறைய அறுபத்து நான்காயிரம் மாணவர்கள் வருடாவருடம் சேருகிறார்கள்.1 இந்தியாவில் மருத்துவப்படிப்பு, அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாகக் கற்பிக்கப்படுகிறது.

மொத்த இடங்களில், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழகம் என்ற மூன்று மாநிலங்களில் மட்டும் பத்தொன்பதாயிரம் இடங்கள் உள்ளன. அதாவது இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் மொத்த இடங்களில் 30 % இடங்கள் உள்ளன.

தொடக்கக் கல்வி முதல் உயர் கல்விவரை லாபநோக்கில்லாத நிறுவனங்களும், தர்மஸ்தாபனங்களும்தான் கல்வி நிறுவனங்களை நடத்தமுடியும் என்ற விதி இந்தியாவில் இருக்கிறது. அதாவது கல்வி என்பது விற்பனைக்கில்லை என்ற உயரிய நோக்கில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் இதற்கு முற்றிலும் வேறாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் மிகப் பெரும்பான்மை நிறுவனங்கள் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ கல்வியை அளிப்பதில்லை. அந்தக் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகுதி, அங்கே படித்து முடிப்பவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பு அல்லது அவர்களுக்குக் கிடைக்கும் கிடைக்கும் வேலை வாய்ப்பு இவற்றைப் பொருத்துச் சில ஆயிரங்களில் இருந்து பல லட்சம் வரை இந்த நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கின்றன. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இதை வெளிப்படியாகப் பேசும் ஆட்களின் எண்ணிக்கை என்பது இல்லவே இல்லை.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒரு குறிப்பிட்ட அளவிலான இடங்களை நிரப்புகிறது. மீதி உள்ள இடங்களைத் தனியார் நிறுவனங்களே நிரப்புகின்றன. இந்தச் சேர்க்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல லட்சங்களில் பணம் வசூலிக்கின்றன. இந்தப் பணம் முழுவதும் அரசாங்கத்தின் கணக்குக்குள் வராமலேயே கறுப்புப் பணமாகவே பரிமாற்றம் நடக்கிறது.

இதுபோக அரசு மருத்துவக் கல்லூரிகளும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்களது மொத்த இடங்களில் 15% இடங்களை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்து, அந்த இடங்களை மத்திய அரசு நிரப்புகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை. +2 மதிப்பெண்களின் தரவரிசையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே நேரத்தில் பல மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் போன்ற நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வருவதும் எல்லோரும் அறிந்த உண்மை. இப்படியான பல தேர்வுகள் என்பது மாணவர்களுக்குத் தேவையில்லாத மன உளைச்சலையும், பொருளாதார நெருக்கடியையும் உருவாக்குகிறது.

உலகில் பல நாடுகளில் இப்படி பல்வேறு தேர்வு நடப்பது இல்லை. ஒரே தேர்வின் மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்மூலமே கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த முறைக்கான முதல்படிதான் NEET தேர்வு. இது ஒரு தேசிய அளவிலான தகுதித் தேர்வு. இந்த முறைப்படி மாணவர்கள் ஒரே தேர்வை மட்டுமே எழுதினால் போதும். அந்தத் தேர்வின்படி மாணவர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். அதன்படி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்படும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்விநிலையங்களில் மத்திய அரசு வசமுள்ள 15% இடங்களுக்கும், மாநில அரசு நிரப்பும் இடங்களுக்கும், தனியார்க் கல்வி நிறுவனங்கள் நிரப்பும் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகம் நிரப்பும் இடங்களுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு நடக்கும். இந்தத் தேர்வானது 180 கேள்விகளைக் கொண்டதாக இருக்கும். நான்கு பதில்களுக்குள் சரியான பதிலை மாணவர்கள் தேர்வு செய்யவேண்டும். இந்தக் கேள்விகள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) பாடங்களில் இருந்து கேட்கப்படும்.

ஆனால், தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் இந்த நுழைவுத்தேர்வை எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்களையும் அதன் உண்மைகளையும் நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

1. இதனால் இடஒதுக்கீடும் சமூக நீதியும் பாதிக்கப்படும்

உண்மை என்னவென்றால் மத்திய அரசு ஒதுக்கீடு போக மீதி உள்ள 85% இடங்களை மாநில அரசு அவர்கள் வைத்திருக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி நிரப்பிக்கொள்ளலாம். சேர்க்கப்படும் மாணவர்கள் நீட் தேர்வின் தரவரிசைப்படி இருக்கவேண்டும் என்பது தவிர இடஒதுக்கீட்டில் மத்திய அரசு தலையிடவில்லை.

2. இந்தத் தேர்வை தமிழக மாணவர்களால் எதிர்கொள்ள முடியாது

நாம்தான் நமது சமச்சீர் கல்வி முறை இந்திய அளவிலில்லை, உலக அளவுக்கான தரத்தில் உள்ளது என்று சொல்லிவந்தோம். இப்போது CBSE பாடத்திட்டத்தின் தரத்திற்கு நமது கல்விமுறை இல்லை என்றால் மாற்ற வேண்டியது பாடத்திட்டத்தையா அல்லது தேர்வு முறையையா? தமிழக மாணவர்களின் கல்வித்தரம் என்பது மிகவும் கவலைப்படும் அளவில்தான் இருக்கிறது என்றே ஆய்வுகள் கூறுகின்றன.2 ஏழுமுதல் பதினான்கு வயது வரை உள்ள கிராமப்புற மாணவர்களில் 21% மாணவர்களே ஒன்றாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைப் படித்துப் புரிந்துகொள்ளும் தகுதியில் இருக்கிறார்கள்.

கலைப்பிரிவில் படித்தால் பொறியியல் படிக்க முடியாது என்பது தெரியாமலே பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் இங்கேதான் இருக்கிறார்கள்.3

இந்திய நாட்டின் எல்லாக் கல்விமுறைகளும் தேசியக்கல்வித் திட்டத்தின் ( 2005) கீழேதான் வடிவமைக்கப்படுகிறது.4 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மத்தியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் வெறும் எட்டுப் பேர் மட்டுமே தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர்5 என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வெறும் மனப்பாடம் செய்யும் முறையையே நமது தேர்வுமுறை முன்னெடுக்கிறது. அதனால் பத்தாம் வகுப்பு வரை மத்தியக் கல்வி முறையில் பயிலும் பல மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் சுலபமாகப் படித்தே அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டிலோ இடம்பெற, மாநிலக் கல்வி முறைக்கு மாறிக்கொள்கிறார்கள்.

3. தேர்வு பிராந்திய மொழிகளில் நடைபெறவேண்டும்

தொடக்கத்தில் இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் தமிழ் உள்பட சில பிராந்திய மொழிகளிலும் நடைபெறுகிறது.

மாணவர்களின் தாய்மொழியில் தேர்வு நடக்கவேண்டும் என்பது சரியான கருத்துதான் என்றாலும் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளின் பாடப்புத்தகங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் நுழைவுத்தேர்வு ஆங்கிலத்தில் இருப்பது தவறாக ஆகிவிடாது.

நுழைவுத்தேர்வைத் தாய்மொழியில் எழுதவேண்டும் என்று கூறுபவர்கள், மேற்படிப்பிற்கான பாடங்களைத் தாய்மொழியில் பயிலத் தேவையான பாடப்புத்தகங்களைத் தாய்மொழியில் தயாரிப்பதைப் பற்றிப் பேசுவதே இல்லை.

4, இது ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்குத் தடையாக இருக்கும்.

அதாவது தனியார் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். இப்போது உள்ள நடைமுறைப்படி பதினொன்றாம் வகுப்புப் பாடங்களைப் படிக்காமல், இரண்டு வருடமும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே படித்து அதன் மூலம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்துவிட முடியும். ஆனால் இந்த நுழைவுத்தேர்வை எழுத ஆறாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையான பாடங்களைப் புரிந்து படித்தால் மட்டுமே முடியும்.

எனவே தனியார் பயிற்சி நிலையங்களில் பயிற்சி எடுப்பது அல்ல, புரிந்து படிப்பதே தேவை. பள்ளிகளில் சரியான முறையில் பாடம் நடத்தினால் தனிப்பயிற்சி என்பதே தேவையில்லை என்பதே உண்மை.அதுபோக அரசே இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ இந்தத் தேர்வுக்கான பயிற்சியை அளிக்கலாம்.

ஏற்கனவே உள்ள சேர்க்கை முறையில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெரிய அளவில் சேர்ந்திருக்கும் வாய்ப்பு இல்லை. பெரும்பாலான இடங்கள் தனியார் கல்விநிலையங்களில் படித்த மாணவர்களாலே நிரப்பப்படுகிறது.

தேவையான மாற்றங்கள்

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இந்தத் தேர்வை நடத்தாமல் TOFEL, GMAT, GRE முதலான தேர்வுகளைப் போல வருடத்தின் எந்த நேரத்திலும் மாணவர்கள் இந்தத் தேர்வை கணினி மூலமாக எதிர்கொள்ளும் வகைக்கு மாற்றப்படவேண்டும். இரண்டு முறை மட்டுமே நடக்கும் தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்சம் ஒரு மாணவன் ஐந்து முறை இந்தத் தேர்வை எழுதும் வாய்ப்பும், அதில் அவனுக்குக் கிடைப்பதில் மிக அதிகபட்ச மதிப்பெண் எதுவோ அதையே அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.

ஆந்திரபிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் இப்போது இந்தத் தேர்வில் இருந்து விலக்களிப்பப்பட்டு உள்ளன. அவையும் இதற்குள்ளே கொண்டுவரப்பட வேண்டும். இந்த மூன்று மாநிலங்களில் ஏறத்தாழ ஏழாயிரம் இடங்கள் உள்ளன.

எந்த ஒரு திட்டமும் நூறுசதவிகிதம் குறையே இல்லாமல் இருக்காது. குறைகளைக் களைந்து, அதனைச் சரிப்படுத்தவேண்டுமே தவிர, உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் செய்வதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவது இல்லை. மாறிவரும் காலத்தில் நமது மாணவர்கள் உலகளவிலான போட்டிகளுக்குத் தயாராகவேண்டியது மிக அவசியம்.

அரசியல் கூச்சல்களாலும், உணர்ச்சியைத் தூண்டுவதாலும் மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது சரியான வழிமுறை அல்ல.

ஆதாரங்கள்

1. http://www.mciindia.org/InformationDesk/ForStudents/ListofCollegesTeachingMBBS.aspx

2. http://examswatch.com/only-21-of-rural-children-in-tamil-nadu-can-read-basic-text/

3. http://www.nisaptham.com/2016/12/blog-post_19.html

4. http://www.ncert.nic.in/rightside/links/pdf/framework/english/nf2005.pdf

5. http://www.justgetmbbs.com/2016/07/cbse-students-incompetent-Tamil-Nadu-MBBS.html

Posted on Leave a comment

ஆசிரியர் சோ – B.K. ராமசந்திரன்

வரலாற்றின் பக்கங்களில் இந்தியா என்றுமே ஒரு கொந்தளிப்பான நாடாகத்தான் இருந்துவந்தது. உலக வரலாற்றில் மிக முக்கியமான நாகரிகமாக, உலக வர்த்தகத்தில் முக்கியமான பங்கேற்பாளராக, அளவற்ற செல்வம் நிறைந்த நாடாக, அதனாலே அந்தச் செல்வத்தைக் கவர நினைத்த பலருக்கு ஒரு கனவு தேசமாக, மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களால் படையெடுக்கப்பட்ட தேசமாக, அதற்கெதிராகத் தன் வாழ்வுக்கான போராட்டத்தை நடத்திய தேசம் என்றே இந்த நாட்டின் வரலாற்றைச் சொல்லிவிடலாம்.

இந்தக் கொந்தளிப்புக்கு சிறிதும் குறைந்ததல்ல சுதந்திரம் அடைந்த பிறகான வரலாற்றின் காலகட்டமும். நாட்டின் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டதும், ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்ததும், பதவியில் இருக்கும் பிரதம மந்திரியின் தேர்தல் வெற்றி அலகாபாத் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற தீர்ப்பின் மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து பதவியைத் தக்கவைக்க நாடெங்கும் நெருக்கடி நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களின் உரிமைகள் எல்லாம் மறுக்கப்பட்டு, எதிரணியில் இருந்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும் என்று, அறுபதுகளின் கடைசி வருடம் முதல் எழுபதுகளின் பாதிவரை நாடெங்கும் ஒரு கொந்தளிப்பான நிலை நிலவியது.

“நாங்கள் அவர்களை மண்டியிடச் சொன்னோம், அவர்கள் தவழவே செய்தார்கள்.” இது அன்றைய காலகட்டத்தின் பத்திரிகைகளைப் பற்றிய அதிகாரத்தின் கூற்று. அரசாங்கத்தின் கொள்கையாக தனிமனிதர்களின் துதிபாடல் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. “இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா” என்று துதிபாடிகள் இந்திராவின் புகழ்பாட, ஏழ்மையை ஒழிப்போம் என்ற கோஷங்களும், பிரதம மந்திரியின் இருபது அம்சத் திட்டமும், அவர் மகனின் ஐந்து அம்சத் திட்டமும் பொன்னுலகைக் கொண்டுவரும் என்ற பிம்பங்களும் கட்டமைக்கப்பட்ட காலம் அது.

இந்தப் புலத்தில் தனித்து ஒலித்த குரல் சோ ராமஸ்வாமியின் குரல். பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பிறரை மிரட்டியும், யார் பதவிக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என்று தரகு வேலை பார்த்தும், நாட்டின் நலனை, நாட்டு மக்கள் நலனைக் காற்றில் பறக்கவிட்டவர்களுக்கு மத்தியில், தனக்கென ஒரு தனி வழியை, தான் நல்லது என்று நினைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்து அதில் நடந்தவர் சோ என்பது இன்றையத் தலைமுறைக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.

 நாடக நடிகராக, திரைப்பட நடிகராக, கதாசிரியராக, இயக்குநராக என்று பல முகம் கொண்டவரின் எல்லாப் பாதைகளும் இறுதியாகச் சங்கமித்தது, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் என்ற இடத்தில். அதிகாரத்தின் மிக நெருக்கமான இடங்களில் இருந்தபோதும் அதை அவர் தனிப்பட்ட பலனுக்காக அதைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை அவர்மீது யாரும் சுமத்த முடியாததே அவரின் தனிவாழ்வின் நேர்மைக்குச் சான்றாகும்.

அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத சஞ்சய் காந்தி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அதைக் கண்டிக்கும் விதமாக அந்த விபத்தில் மரணமடைந்த கேப்டன் சுபாஷ் சாஸ்சேனாவின் தபால் தலையை துக்ளக்கில் வெளியிட்டார் சோ. எம்ஜியார் ஆட்சியைக் கேலி செய்து அவர் எழுதிய ‘சர்க்கார் புகுந்த வீடு’ என்ற தொடர் மிகவும் புகழ்வாய்ந்தது.

இந்து மஹா சமுத்திரம், மஹாபாரதம் பேசுகிறது, வால்மீகி ராமாயணம், எங்கே பிராமணன் ஆகிய புத்தகங்கள் ஒரு பண்பாட்டுத் துறையின் ஆரம்பநிலை வாசகன் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்.

விளையாட்டாகத்தான் அவர் பத்திரிகை ஆரம்பித்தார், ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தவேண்டிய கட்டாயத்தை கருணாநிதி அவர்கள் ஏற்படுத்தித் தந்தார். துக்ளக் பத்திரிகையைப் பறிமுதல் செய்து, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்குப் புத்தகம் வாங்கவைத்த பெருமை அன்றைய முதல்வரான கருணாநிதியையே சாரும். இப்படிப்பட்ட கைங்கரியத்தைச் செய்தவரைத்தான் மாபெரும் அரசியல் அறிஞர் என்றும், மூத்த பத்திரிகையாளர் என்றும் கருத்துரிமையின் காவலர் என்று சிலர் சொல்லித் திரிகின்றனர்.

அதையும் தாண்டி நெருக்கடி நிலைமையைக் கருணாநிதி எதிர்த்ததைப் பாராட்டி, மத்திய அரசை விமர்சிக்கும் உரிமை கிடைக்கும்வரை மாநில அரசை விமர்சிக்கப் போவது இல்லை என்று சொன்னவர் சோ. நெருக்கடி நிலையின் போது பத்திரிகைகள் தணிக்கைக்குட்பட்ட பின்னரே வெளிவருதை எதிர்க்கும் பொருட்டு, தணிக்கைத்துறை அதிகாரிகளிடம், “என் வேலையை நீங்கள் செய்கிறீர்கள், அதனால் எனது சம்பளத்தையும் நீங்கள்தான் வாங்கிக் கொள்ளவேண்டும்” என்று கூறித் திகைக்க வைத்தவர்.

அவர் ஒரு பழமைவாதி என்று சனாதனவாதி என்று சிலர் கூறுகின்றனர். அவர் என்றுமே தனது கொள்கைகளை மறைத்து வேஷம் போட்டதில்லை. தனக்குச் சரி என்று பட்டதைச் சொன்னார், எழுதினார். இந்த நாட்டுக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு, அதற்கு ஒரு சிறப்பு உண்டு என்று அவர் உளமார நம்பினார். போலி அறிவுஜீவிகள் போல நடித்திருந்தால் அவருக்கும் உலகளாவிய புகழ் கிடைத்திருக்கும், அது தனக்குத் தேவையில்லை என்று ஒதுக்கினார். தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

பெண்ணுரிமையை அவர் ஆதரிக்கவில்லை என்று சொல்வார்கள். எது உரிமை என்பதில் சோவுக்கு நிறைய கருத்துகள் இருந்தன. கட்டற்ற உரிமை என்பது எங்குமே இருக்க முடியாது. எல்லா உரிமைகளும் கடமைகளின் மீது அமைக்கப்பட்டவைதான். பெண்கள் புகைபிடிப்பதும், மது அருந்துவதும், கட்டற்ற பாலியல் உறவு வைத்துக் கொள்வதும்தான் பெண்ணுரிமை என்று கூறுபவர்களை அவர் ஒருநாளும் ஏற்கவில்லை.

சோ, துக்ளக் இதழைத் தன் எண்ணங்களைக் கூறப் பயன்படுத்தினாலும், எதிர்க்கருத்துக்களுக்கும் இடமளித்தே வந்தார். அதனால்தான் வலதுசாரி கருத்துடைய குருமூர்த்தியின் கட்டுரைகளும், அதற்கு எதிரான கம்யூனிஸ்ட் தலைவர்களின் கட்டுரைகளும் ஒரே சமயத்தில் துக்ளக்கில் வெளிவந்தன. பத்திரிகை என்பது அறிவார்ந்த விவாதங்களை உருவாக்கும் இடமாக இருக்கவேண்டும், அதற்கு எதிரும் புதிருமான தகவல்களைத் தரவேண்டும் என்பது சோவின் கருத்தாக இருந்தது.

பல்வேறு தலைவர்கள் அவர்களது அரசியல் வாழ்க்கையைப் பற்றிய சித்திரங்களை துக்ளக்கில் எழுதி உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த பிரசாரகர் சூரியநாராயணராவ் ஜிக்கும் அப்துல் சமது அவர்களுக்குமான உரையாடல் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றிய ஒரு தெளிவை மக்களுக்குத் தந்தது.

எண்பதுகளில் விடுதலைப் புலிகளைப் பற்றித் தவறாகச் சொன்னாலே கிடைக்கும் வசைகளைத் தாண்டி, அவர்கள் ஒரு தீவிரவாத இயக்கம்தான், அவர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்று எச்சரித்தவர் சோ மட்டும்தான். அதைத்தான் இன்று கழகக் கண்மணிகளும் கூறுகின்றனர் என்பதுதான் நகைமுரண்.

முழுவாழ்விலும் பிரிவினை சக்திகளுக்கு எதிராகவே சோ நின்றிருந்தார். ஹிந்து மதத்தைத் தாக்குவது ஒன்றே பகுத்தறிவு என்று பேசியவர்களின் இடையே நெற்றி நிறைய திருநீற்றோடு காட்சி அளித்தார். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் என்னால் ஏற்கமுடியாதவைதான் என்றாலும், எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்த நாள்முதலாகப் பல வருடங்களாக நான் படித்த பத்திரிகையின் ஆசிரியர், பெருவாரியான மக்களின் கருத்து எப்படி இருந்தாலும் தன் நெஞ்சுக்கு சரியென்று தோன்றியதை எதற்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டியதின் அவசியத்தைப் புரியவைத்தவர். நடுநிலைமை என்பது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அல்ல, மாறாக நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியவர் அவர்.

சிலநேரங்களில் ஆசிரியர்கள் அந்த இடத்திலேயே நின்றுவிடலாம். அவர்களைத் தாண்டி, அந்த ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தவற்றில் சரியானவற்றை மாணவர்கள் முன்னெடுப்பதுதான், மாணவர்கள் ஆசிரியர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.

சென்று வாருங்கள் ஆசிரியரே. உங்களுக்கான இடம் இங்கே நிரப்பப்படாமலே இருக்கும்.

Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை

‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்

நாடு அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்திலேயே சுதந்திர இந்தியாவின் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்ற விவாதங்கள் பெருமளவில் நடந்து வந்திருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வெவ்வேறு காலகட்டத்தின் சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்குக் கல்வித் திட்டம் பற்றிய கொள்கை முடிவுகள் நிபுணர் குழுக்களால் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் வரையறை செய்யப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றத்தால் இன்றையக் கல்விமுறையை மாற்றி அமைக்கவேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் கம்யூனிசக் கோட்பாடு பயனற்றதாகிப் பின்தங்கிப் போயுள்ளது. புதிய சிந்தனைப் போக்குகளாலும் அறிவியல் வளர்ச்சியாலும் பல புதிய தொழிலதிபர்கள் உருவாகிவந்துள்ளனர். தாராள மயமாக்கம், தனியார் மயமாக்கம், உலக மயமாக்கம் என்பவை இன்றையக் காலகட்டத்தில் மறுக்கமுடியாத தேவையாக மாறி இருக்கிறது.

நிரந்தர வேலைவாய்ப்பு என்பது மறைந்துபோய்க்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்று நாம் பார்க்கும் பல வேலைகள் இன்னும் பத்தாண்டுக் காலத்தில் இல்லாமலே போய்விடலாம். எப்படி சுருக்கெழுத்தும் தட்டச்சும் இன்று பயனற்றுப் போய்விட்டனவோ அதுபோல. பல தரப்பட்ட வேலைகள் கணினி மூலமாகவும் தானியங்கி இயந்திரங்கள் மூலமாகவும் செயல்படப் போகின்றன. இன்றைய நமது கல்விமுறை, தனது காலில் தானே நிற்கும் திறன்வாய்ந்த மக்களை உருவாக்குவதாகவே இருக்கவேண்டும்.

இந்திய நாட்டின் மக்கள்தொகையில் இரண்டில் ஒரு பங்கு, 25 வயதிற்கும் குறைவான இளைஞர்களே. இந்த மனிதவளத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால்தான் அனைவருக்கான வளர்ச்சி என்பது சாத்தியமாகும். இல்லையென்றால் இந்த மனிதவளமே நாட்டிற்குப் பெரும் சவாலாக மாறிவிடும். இந்தப் பின்னணியில்தான் நாம் இந்தப் புதிய கல்விக்கொள்கை வரையறையைப் பரிசீலிக்க வேண்டி உள்ளது.

மாறிவரும் உலகில் நமது கல்வித் திட்டம் மட்டும் மாறாமல் இருக்கமுடியாது. நம்முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள நமது கல்வித் திட்டத்தில் என்னவிதமான மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்று விவாதிக்க மத்திய மனித வளத் துறை ‘தேசியக் கல்விக் கொள்கை – 2016’ என்ற அறிக்கையை மக்கள்முன் விவாதத்திற்கு வைத்துள்ளது. 240 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை ஒன்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் அத்தியாயம் இந்தியாவில் கல்வியைப் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தையும் இன்றைய நிலையையும் காட்டுகிறது. இரண்டாவது அத்தியாயம் இந்த அறிக்கைக்கான அணுகுமுறையையும் செயல்முறைகளையும் விவரிக்கிறது. மூன்றாவது அத்தியாயம் புதிய கல்விக் கொள்கையின் நோக்கத்தையும், அடுத்த இரண்டு பிரிவுகள் புதிய கல்விக் கொள்கையின் தேவையையும் கல்வி ஆளுகையையும் பற்றி விவாதிக்கின்றன. ஆறாவது அத்தியாயம் பள்ளிக் கல்வி பற்றியும் ஏழாவது அத்தியாயம் உயர் கல்வி பற்றியும் எட்டாவது பிரிவு தேசிய அளவிலான கல்வி நிலையங்களைப் பற்றியும் பேசுகின்றன. கடைசி அத்தியாயம் எல்லாத் தலைப்புகளிலும் அளிக்கப்பட்ட பரிந்துரைகளைப் பட்டியல் இட்டுத் தருகிறது.

எதிர்க்கட்சிகள் இந்த அறிக்கைமீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமாவை, இந்த வரைவறிக்கையை தயாரிக்கும்போது கல்வித்துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை என்பதும், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுசெய்து இருக்கிறது என்பதும்.

இந்த அறிக்கை எப்படித் தயாரிக்கப்பட்டது என்று விளக்கப்பட்டிருக்கும் பகுதியில் இதற்கான தெளிவான பதில் இருக்கிறது. இதற்கு முந்தையக் கல்விக் கொள்கைகளை வரையறை செய்த முறைக்கும் இந்தக் கல்விக் கொள்கையை வகுத்த முறைக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. முந்தையக் கொள்கைகள் துறை சார்ந்த நிபுணர்களால் விவாதிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டன. அதாவது மேலிருந்து கீழாக அது பயணித்தது. ஆனால் இந்தக் கொள்கையோ கீழிருந்து மேலாகப் பல்வேறு நிலைகளில் தொகுக்கப்பட்டு வரையறை செய்யப்பட்டு உள்ளது. கிராம நிலைகளில் விவாதிக்கப்பட்டு, அவை அடுத்த நிலைகளில் தொகுக்கப்பட்டு, மாவட்ட அளவிலான விவாதங்கள், பின்னர் மாநில அளவிலான விவாதங்கள் / பரிந்துரைகள் என்று தொகுக்கப்பட்டு உள்ளது. இரண்டரை லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் விவாதிக்கப்பட்டுப் பின்னர் ஆறாயிரம் கோட்டங்களில்

வடிகட்டப்பட்டு, அறுநூற்று எழுபதுக்கும் மேலான மாவட்டங்களில் விவாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட மாநில அளவிலான கூட்டங்களில் தரப்பட்ட ஆலோசனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதுபோக மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் பல்வேறு பொதுமக்களும் கல்வி பற்றிய தங்கள் கருத்துக்களை அளித்துள்ளனர். இவற்றைத் தொகுத்து ஐவர் அடங்கிய குழு தனது பரிந்துரையை அரசுக்கு வழங்கி இருக்கிறது.

இந்த அறிக்கையின் மிக முக்கியமான கருத்துகளை இவற்றைச் சொல்லலாம்:

1. நாட்டின் மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product) 6% நிதி கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும். இன்றைய நிலையில் 3.5% நிதிதான் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. அதாவது இதுவரை அளிக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் இன்னும் ஒரு பங்கு கூடுதல் நிதி வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கான நிதி என்பது இந்த 6%இல் சேராது என்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு தனியாக இருக்கவேண்டும் என்றும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

2. இன்று இருப்பது போல பட்டப்படிப்பு முடித்த பின்னர் ஆசிரியர் கல்வி என்றில்லாமல், பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு நான்காண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்றும் அந்த மாணவர்களுக்கே ஆசிரியர் பணி அளிக்கப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இதன்படி, எப்படி மருத்துவம் / பொறியியல் / சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆயத்தமாகிறார்களோ அதுபோலவே ஆசிரியர் பணிக்கும் முன்கூட்டியே மாணவர்கள் முடிவு செய்து சேர்வதால், உண்மையாகவே ஆசிரியர் பணியில் அக்கறையும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் உருவாகி வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கிராமப் பகுதிகளிலும், மலைவாழ்ப் பகுதிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க ஆலோசனை கூறப்பட்டு உள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு அரசின் செலவில் தகுந்த கல்வி அளித்து அவர்களையே அங்கே உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தொலைதூரத்தில் உள்ள மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இனி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சில முக்கியமான குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்:

சம்ஸ்கிருதம் புகுத்தப்படுகிறதா?

உண்மையைச் சொன்னால் ஜெர்மன், பிரெஞ்சு, அரபி முதலான பல மொழிகளைப் படிக்கும் வாய்ப்பைப் பள்ளிக்கூடங்கள் உருவாக்கவேண்டும் என்றுதான் இந்த வரையறை கூறுகிறது.

ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியிலோ அல்லது மாநிலத்தின் மொழியிலோதான் கல்வி இருக்கவேண்டும் என்றும், தொடக்கக் கல்வியில் இரண்டாவது மொழியையும் மேல்நிலை அளவில் மூன்றாவது மொழியையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யலாமா வேண்டாமா என்பதையும், அறிமுகம் செய்வதாக இருந்தால் அவை எந்த மொழிகளாக இருக்கவேண்டும் என்ற முடிவையும் மாநில அரசாங்கங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம் என்றுதான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைவிட முக்கியமான அறிவுரை, மலைவாழ்ப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் பேசும் மொழியில் பாடங்கள் நடத்தப்படவேண்டும் என்பதும், அதற்கான பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதும்தான். ஆக சம்ஸ்கிருதம் புகுத்தப்படுகிறது என்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. மொழிக் கொள்கையை என்பது மாநில அரசுதான் முடிவு செய்யும்.

யோகா திணிக்கப்படுகிறதா?

பாரதம் இந்த உலகுக்கு வழங்கிய கொடை யோகா. அதனால்தான் இன்று ஐக்கிய நாட்டுச் சபையே உலக யோகாசன தினத்தை உலகம் எல்லாம் கொண்டாட வகை செய்துள்ளது. இன்றைய மாணவர்களுக்கு உடல்பயிற்சி என்பது இல்லாமலே ஆகிவிட்டது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றுதான் கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. பல பள்ளிகளில் முறையான விளையாட்டு மைதானங்கள் இருப்பதில்லை. பல நகரங்களில் பள்ளிகள் விரும்பினாலும் இடப் பற்றாக்குறையால் மைதானங்களை உருவாக்க முடிவதில்லை. இந்த நிலையில் மாணவர்களின் உடலை உறுதி செய்ய யோகா உதவும் என்றுதான் வரையறையில் கூறப்பட்டுள்ளது. யோகாவை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களே யோகாசனப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

சிறுபான்மையினரின் சிறப்புரிமை மறுக்கப்படுகிறதா?

முதலில் சிறப்புரிமை என்பது என்ன? அரசின் எந்தச் சட்டதிட்டங்களும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது என்பதா? அப்படி என்றால் அது என்ன நியாயம்? கல்விக்கான உரிமைச் சட்டம் (Right to Education Act) எல்லாக் கல்வி நிறுவனங்களும் தங்களின் மொத்த மாணவர் சேர்க்கையில் 25% இடங்களைப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்தச் சட்டம் சிறுபான்மைக் கல்வி நிலையங்களில் பின்பற்றப்படத் தேவையில்லை என்றிருக்கிறது. இந்தக் கல்விக் கொள்கை, சிறுபான்மைக் கல்வி நிலையங்களும் தங்கள் மாணவர் சேர்க்கையில் 25% இடங்களைத் தேவைப்படும் வசதி குறைந்த மாணவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று கூறுகிறது. இது, சமூகநீதியை முன்னெடுக்கும் கட்சிகளை ஏன் வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்பது புரியாத புதிர்.

எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்பது ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே என்பதால் கல்வி மறுக்கப்படுகிறதா?

நல்லெண்ணத்தின் மீதேறி நரகத்திற்கும் போகலாம் என்று ஒரு பழமொழி உண்டு. எட்டாம் வகுப்பு வரை எல்லா மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்யவேண்டும், தேர்வு முறையில் அவர்கள் யாரையும் தோல்வி அடையச் செய்யக்கூடாது என்று, நடைமுறையில் இருக்கும் கல்வி உரிமைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இதன்மூலம் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு வரை குழந்தைகள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் எடுத்த ஒரு ஆய்வின்படி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 40% மாணவர்கள் இரண்டாம் வகுப்பில் கற்கவேண்டிய கல்வியைக்கூடக் கற்றிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீண்ட விவாதத்தை நடத்தி இந்தக் கல்விக் குழு ஐந்தாம் வகுப்பு வரை எந்த மாணவர்களையும் தடை செய்யக்கூடாது என்றும் அதன் பிறகு தேர்வுகளில் தேர்ச்சி அடையும் மாணவர்களையே அடுத்தத்த வகுப்புகளுக்கு அனுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இதில் கல்வி மறுக்கப்படுகிறது என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.

ஆனாலும், இதை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும் என்று இந்தப் பரிந்துரை வலியுறுத்துகிறது. மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று வாய்ப்புகளாவது வழங்கவேண்டும் என்றும், தேவைப்படும் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் அது அறிவுறுத்துகிறது.

தேர்வு முறையில் மாற்றங்கள் மாணவர்களின் சுயமரியாதையைக் கேள்விக்குள்ளாக்குகிறதா?

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத மாணவர்களில் பெரும்பாலானோர் கணக்கு மற்றும் அறிவியல் பாடத் தேர்வுகளில்தான் தோல்வி அடைந்திருக்கிறார்கள். எனவே இந்த இரண்டு பாடத்திலும் இரண்டு நிலையாகத் தேர்வு நடத்தலாம் என்றும் மேல்நிலைப் பாடங்களில் கணக்கோ அல்லது அறிவியலையோ பயிலாத மாணவர்களுக்கு எளிதான தேர்வு ஒன்றை அமைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பதினொன்றாம் வகுப்பில் பொறியியல் படிக்க நினைக்கும் மாணவர்களில் பலர் உயிரியல் படிப்பு படிப்பதில்லை. மருத்துவம் படிக்க நினைப்பவர்கள் கணக்கைப் பயில்வதில்லை. வணிகவியல் / பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடங்களைப் படிப்பதில்லை. மேல்நிலையில் என்ன பாடங்களைப் படிக்கப்போகிறோம் என்று முடிவுசெய்யும் மாணவர்கள் ஏன் தேவை இல்லாமல் கடினமான தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டும்?

இதுபோல பத்திரிகை, மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் கம்யூனிகேஷன் துறைகளைத் தேர்வு செய்யும் மாணவர்களைக் கணக்கிலும் அறிவியலிலும் கடினமான தேர்வை எதிர்கொள்ள வைப்பது தேவையானதுதானா?

இரண்டு நிலைகளில் எந்த நிலையைத் தேர்வு செய்யலாம் என்ற தெளிவு மாணவர்களுக்கு இருக்காது என்று சொன்னால், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து உயர்வகுப்பில் எந்தத் துறை சார்ந்த படிப்பைப் படிக்கப் போகிறோம் என்று தேர்வு செய்யும் தெளிவு மட்டும் இருக்குமா? இதை ஏற்றுக்கொள்ளும்போது, புதிய கல்விக் கொள்கை முன்வைக்கும் நியாயமான ஆலோசனைகளை எதிர்க்கவேண்டியதன் அவசியம் என்ன?

இதுபோக, ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்வுக்குப் பதிலாக ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் ஒரு மாணவன் தேர்வெழுதும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது. ஆண்டின் இறுதியில் நடைபெறும் தேர்வு என்பது பல மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை அளிக்கிறது. அதை மாற்ற இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோல வருட இறுதியில் நடைபெறும் தேர்வை வைத்து மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு பதில், தொடர்ச்சியான மதிப்பீட்டு முறை உருவாக்கப் படவேண்டும் என்றும் ஆலோசனை உள்ளது. இந்த முறையில் மாணவர்களின் மொத்த ஆளுமைத் திறனும் அளவிடப்பட்டுச் சரியான முறையில் அவர்கள் மதிப்பிடப்படுவார்கள். தேர்வு நேரத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற செய்திகளை நாம் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையின் அறிவுரைகள் இந்த அவலநிலைக்கு ஒட்டுமொத்தமான முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளன.

இன்றைய நிலையில் கல்வி என்பது கல்விக்கூடங்களில் மட்டுமே கிடைப்பதில்லை. கற்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்றன. எங்கே கிடைக்கும் என்பதையும், எப்படிக் கற்பது என்பதையும் பள்ளிக்கூடங்கள் சரியாகச் சொல்லிக்கொடுத்தால் போதும்.

ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ தனிப்பட்ட மனிதர்களின் சுதந்திரம். இன்றையக் கல்விக் கொள்கை என்பது நாட்டை நாளை வழிநடத்தப்போகும் ஒரு முக்கியமான அறிக்கை. எனவே இதனை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி, குறைந்தபட்சம் இந்த அறிக்கையை முழுவதும் படித்துவிட்டாவது அதைச் செய்யவேண்டும்.

-oOo-