Posted on Leave a comment

வலம் அக்டோபர் 2016 இதழ் – சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை

சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா

திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் விதைத்துவிட்டிருக்கும், இன்றும் விதைத்துக்கொண்டிருக்கும் கருத்துகளை ஆய்வுபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதி எதிர்ப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். திராவிடத்துக்கு ஆதரவான நூல்கள் ஒரு பக்கம் மலை போல் குவிந்துகிடக்க, திராவிட இயக்கத்தை மிகக் கறாராக வரலாற்றுப் பின்புலத்துடன் விமர்சித்து அதன் இடத்தை இறுதி செய்யும் நூல்கள் வெகு சொற்பமானவையே.

இன்னும் சொல்லப்போனால் 30 வருடங்களுக்கு முன்பு வெளி வந்த நூல்களை விட்டுவிட்டு, கடந்த 10 வருடங்களில் வெளிவந்த மிக இந்நோக்கில் முக்கியமான நூல்கள் எவை என்று கேட்டால், நம்மால் சட்டென்று பதில் சொல்லிவிடமுடியாது. அந்த அளவுக்கு தமிழ்நாடு திராவிடக் கருத்துகள் தீரப் புதைக்கப்பட்டிருக்கும் ஓர் இடம் என்றாகிவிட்டது.

இந்நிலையில் சுப்பு எழுதியிருக்கும் திராவிட மாயை (பாகம் 2) நூல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்ஹிந்து வலைத்தளம் (இதற்கும் தி தமிழ் ஹிந்து பத்திரிகைக்கும் எத்தொடர்பும் இல்லை. தி தமிழ் ஹிந்து என்றொரு தமிழ் நாளிதழ் வருவதற்கும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே TamilHindu.com தன் பணியைச் செய்து வருகிறது) ‘போகப் போகத் தெரியும்’ என்ற தொடரை வெளியிட்டது. அது ‘திராவிட மாயை’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. திராவிட மாயை (பாகம் 1) தொடராகவும், பின்பு புத்தகமாக வந்தபோதும், பெரும் பரபரப்பையும் பலவித விவாதங்களையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, திராவிட மாயையின் இரண்டாம் பாகம் துக்ளக் இதழில் தொடராக வெளிவந்தது. இரண்டு வருடங்கள் துக்ளக் இதழில் தொடர்ந்து வெளிவந்த தொடர்கள் மிகக் குறைவே. திராவிட மாயையின் இரண்டாம் பாகம் அச்சிறப்பையும் பெற்றதோடு, பல்வேறு தரப்பினரையும் சென்று சேர்ந்தது.

சுப்புவின் எழுத்துப் பாணி அலாதியானது. எதையும் மிகவும் ஆழமாக, விரிவாகச் சொல்லாமல், மிகக் குறைவான வார்த்தைகளில் செறிவான ஆனால் குறைவான பின்னணியில் சொல்லுவது. மிக வேகமான நடையில் செல்லும் கட்டுரைகளின் இடையிடையே வந்து விழும் நையாண்டியான விமர்சனங்கள் என வாசகரை முழுக்கத் தன் பக்கம் ஈர்க்கக்கூடியது. திராவிட மாயை புத்தகம்முழுக்க சுப்புவின் இந்த மாயாஜாலத்தை நாம் பார்க்கலாம்.

சுப்புவின் இன்னொரு முக்கியமான திறமை, குற்றச்சாட்டுகளை எங்கிருந்து எடுக்கிறார் என்பது. இந்நூல் முழுக்க திராவிட இயக்கத்தின், திராவிட இயக்கத்தவர்களின் புரட்டுகளையும், முன்பின் தொடர்பின்றி அவர்கள் பேசுவதையும், பேச்சுக்கும் செயலுக்கும் இடையே உள்ள அராஜகமான முரண்களையும், வரலாற்றுப் புரிதலின்றி மேடைதோறும் முழங்கும் வீராவேசங்களின் போலித்தனத்தையும் சுப்பு பட்டியலிடுகிறார். ஒவ்வொரு கட்டுரையும் திராவிட இயக்கத்தின் பொய்யையும் பித்தலாட்டத்தையும் விரிவாகச் சொல்கிறது என்றால், கட்டுரைக்குள்ளே கிளை கிளையாக சட்டென்று சொல்லிச்செல்லும் விமர்சனங்கள் தனி. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சுப்பு ஆதாரங்களை திராவிட இயக்கத்தவர்களின் புத்தகங்களில் இருந்தே எடுக்கிறார் என்பதுதான் சுவாரஸ்யம். எதிர்த்தரப்பு நூல்களிடம் இருந்து ஆதாரங்களைத் தருவதில் என்ன திறமை இருந்துவிடமுடியும்?

அப்படி இவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை எத்தனை நூல்களில் இருந்து எடுத்திருக்கிறார் என்பதைப் பார்த்தால் அசந்துபோய்விடுவோம். அத்தனை நூல்களைப் படித்திருக்கிறார். திராவிட இயக்கத்தவரைப் பற்றி எந்த நூல் இருந்தாலும், திராவிட இயக்கத்தவர் எழுதிய எந்த நூலாக இருந்தாலும், அதை வாங்கி வாசித்திருக்காவிட்டால் இத்தனை ஆதாரமான கேள்விகளை இவரால் கேட்டிருக்கமுடியாது. இத்தனைக்கும் அந்த நூல்கள் மிக அதிகம் பேசப்பட்ட நூல்களாகக் கூட இல்லை. ஆனாலும் அதைத் தேடிப் பிடித்து பொறுமையாகப் படித்து, அதில் தனக்குத் தேவையான ஒரு கருத்தைச் சட்டென்று பிடித்து அதையே ஆதாரமாக்கித் தன் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

ஓரிடத்தில் டி.எம். நாயர் ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை ஆதரித்தவர் என்கிறார். அந்த டி.எம். நாயரின் சென்னை ஸ்பர்டாங் சாலை சொற்பொழிவைப் பாராட்டி ‘திராவிட இயக்க வரலாறு’ நூலில் இரா.நெடுஞ்செழியன் சொன்னதைப் பதிவு செய்கிறார். ஒரு சித்திரம் நமக்கு மெல்ல உருவாகி வருகிறது. இந்நூல் முழுக்க இப்படிப் பல சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பல பத்திகளில் சுப்புவின் நகைச்சுவை கொடிகட்டிப் பறக்கிறது. நகைச்சுவை வரிகளின் ஊடே ஊசி போல் விமர்சனத்தையும் பதில் சொல்ல முடியாத கேள்விகளையும் வைக்க சுப்பு தவறுவதில்லை. ஒரு பத்தி எழுத்தாளரின், குறிப்பாக விமர்சகர்களின் அதி முக்கியத் தேவை இது. அதை சுப்பு மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்.

சுப்புவின் நீ்ண்ட நெடும் அனுபவமும் இந்த நூலுக்கு மிகவும் உதவி இருக்கிறது. அந்த வகையில் திராவிட இயக்கத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் வகை நூல்களில் இந்நூல் மிக முக்கியமானது. ஈவெரா, அண்ணாத்துரை, கருணாநிதி, வீரமணி, கண்ணதாசன், முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் என எந்த ஒரு தலைவரையும் பற்றிய முக்கியமான அதிகம் வெளித்தெரியாத குறிப்புகள் இந்நூலில் உள்ளன.

தனித் தமிழ் ஆர்வலர்கள் ஹிந்துப் பெயர்களை மாற்றுகிறார்களே அன்றி, இஸ்லாமியப் பெயர்களை மாற்றுவதே இல்லை என்பதாகட்டும், டால்மியாபுரம் பெயரை மாற்ற நடத்தப்பட்ட போராட்டத்தைப் போல் ஹார்விபட்டி பெயரை மாற்றப் போராட்டம் நடத்தப்படவில்லை என்பதாகட்டும், கால்டுவெல்லின் உண்மை முகத்தைப் பதிவு செய்வது, கிறித்துவத்தில் உள்ள சாதிப் பிரச்சினைகளை ஆதாரத்துடன் சொல்வது, திராவிட இயக்கத்தவரால் தொடர்ந்து இன்றுவரை வெறுப்புக்கு ஆளாகும் பிராமணர்களின் பங்களிப்பை வெளிப்படுத்துவது, ஓம் சின்னம் இந்திய நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது என்று திடீரென்று சீற்றத்துடன் கிளம்பிய வீரமணியை நகைச்சுவையுடன் எதிர்கொள்வது, கருணாநிதியின் போலி நாத்திகத்தை பகிரங்கப்படுத்துவது, இன்னும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவகையில் திராவிட இயக்கத்தின் பொறுப்பற்ற அரசியலைப் பட்டியலிடும் ஒரு தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது.

மேடையில் மட்டும் சீர்திருத்தம் பேசிவிட்டு தன் குடும்பத்துக்குள் பாரம்பரியத்தை விட்டுக்கொடுத்துவிடாத தலைவர்கள் இந்நூலில் ஆதாரத்துடன் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அண்ணாத்துரையைப் பற்றி ‘அறிஞர்’ என்ற பெயரில் இன்று பரப்பப்படும் யேல் பல்கலைக்கழகக் கதையைப் பற்றி எம்.எஸ். உதயமூர்த்தியின் வார்த்தைகளை வாசிக்கும்போது திராவிட இயக்க ஆதரவாளர்கள் தலைவர்களுக்கும் ஒரு படி மேல் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.

மேடையில் ஏறினால் என்ன பேசுகிறோம் என்பதே இவர்களுக்குத் தெரிவதில்லை என்பது ஜீவானந்தத்தைப் பற்றி அண்ணாத்துரை சொல்லும் ‘ஜீவாவுக்குக் காது கேட்காது’ என்பதன்மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘காமராஜரின் முதுகுத் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம்’ என்று மேடையில் திராவிடத்தவர்கள் முழங்கியதைக் கேட்டதாக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதிவு செய்திருப்பதை இன்னுமொரு உதாரணமாகக் கொள்ளலாம்.

இந்நூலில் தெறிக்கும் நகைச்சுவைக்கு உதாரணமாக,சங்கரலிங்கனாருக்கே தெரியாமல் ‘சென்னை மாநிலம் என்பதை தமிழ்நாடு என்றாக்கவேண்டும்’ என்ற கோரிக்கை புகுத்தப்பட்ட கட்டுரையைச் சொல்லலாம். இன்னொரு இடத்தில் ‘திராவிடர் கழகம் என்ற கம்பெனியில்’ என்று எழுதுகிறார் சுப்பு. திராவிடர் கழகம் பற்றிய முழுதான விமர்சனத்தை இரண்டு வார்த்தைகளில் சொல்லிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையுமே ஓர் அரிய தகவலைக் கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. நூலின் குறைபாடுகள் என்று பார்த்தால், மிகக் குறைவான செய்திகளைத் தந்தி போல் சொல்லிச் செல்வது, பலவகைகளில் வாசகர்களுக்குப் பல கேள்விகளை உண்டாக்குகிறது. அக்கேள்விகளுக்கான பதில்கள் மிகப் பெரிய தேடலாக அமைகின்றன. சிலவற்றுக்குச் சட்டென்று பதிலே கிடைப்பதில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ‘நான் முன்னரே சொன்னது போல’ என்ற ரீதியில் சொல்லப்படும் முன் அத்தியாயச் சுருக்கங்கள் ஒரு கட்டத்தில் பெரும் அலுப்பை ஏற்படுத்துகின்றன. இவையெல்லாம் மிகப் பழமையான உத்திகள். துக்ளக்கில் எழுதுவதால் இது தேவைப்பட்டிருக்கலாம். ஒரு நூலாக வரும்போது இவையெல்லாம் தேவையற்றவை.

சுப்பு குறிப்பிடும் பல ஆதார நூல்களில் எந்தப் பக்கத்தில் அந்த ஆதாரம் உள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் ஒரு சிறு ஆதாரத்தைப் பார்க்க ஒரு முழுநூலையும் படிக்கவேண்டியது அவசியமாகிவிடும்.

மற்றபடி, கண்டு கொள்வோம் கழகங்களை, ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் போன்ற அரிதான விமர்சனத் தொகுப்புகளின் வரிசையில் வைக்கப்படவேண்டிய நூல்களில் ஒன்று திராவிட மாயை.

திராவிட மாயை ஒரு பார்வை (பாகம் 2), ஆதாரம் வெளியீடு, ரூ 160.

-oOo-

Leave a Reply